‘கடவுளும் மனிதனும் ஒன்று’

பாரதிய ஹிந்து பரிவார் ஐடி துறை மாநில ஒருங்கிணைப்பாளர்  அஸ்வின்ராம்.

‘‘எனது புதிய வாழ்க்கை முறையில் ஏற்பட்ட அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். வேகமான மனித வாழ்க்கையில் தன்னைப்  பாதுகாத்துக் கொள்ளவும், தன் குடும்பத்தை சந்தோசமாக வைத்துக் கொள்ளவும் அனைவரும் ஆசைப்படுகிறார்கள். ஆனால் இந்த பயணத்தில் ஒருவர் தொடர்ந்து தோல்விகளை சந்திக்கும் போது அவருக்குள் சில சிந்தனைகள் எழும். அதாவது, நாம் யாருக்காக உழைக்கிறோம், நம் சந்தோசத்தை யாரும் பார்ப்பதில்லையே, நம் வாழ்க்கை மிகவும் கடுமையாக உள்ளதே என்று சிலர் நினைப்பது உண்டு.

அதில் சிலர் அனைத்து பிரச்சனைகளையும் துணிந்து எதிர்கொள்வார்கள். இல்லையெனில் தன்னையே அழித்துக்கொள்ள முயல்வார்கள். உலகத்தில் பல ஜீவ ராசிகள் இருந்தாலும், மனித உடம்பும் உணர்வும் கடவுள் போன்றது. இன்று நாம் கையெடுத்து கும்பிடும் ஒவ்வொரு கடவுளும் நமது முன்னோர்கள் என்பதை உணர வேண்டும். காலங்கள் மாற மாற இதில் சில விஷயங்களை மனிதர்கள் மாற்றி அமைத்திருக்கலாம். ஆனால் அதில் எது சரி, எது தவறு என்பதை உணர்ந்து, மக்களுக்கு எது நல்லது என்பதை மட்டும் பார்த்து அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பது என் கருத்து.

அன்பு, பாசம், நட்பு ஆகியவற்றை சரியாக உணர்பவன் சிறந்த ஆன்மிகவாதி ஆகிறான். என் வாழ்க்கையும் வேகமான இயந்திரமாகவே இருந்தது. பணம் பணம் என்று ஓடிக்கொண்டு இருந்தேன். அப்போது ஒரு நாள் எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது, நாம் எதற்காக இந்த பூமியில் தோன்றினோம். நம்மால் பிறருக்கு என்ன நன்மை என்பதைக்  குறித்து ஆழமாக சிந்தித்தேன். அந்த கேள்விக்கு விடை தேட, என் இயந்திரமயமான வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, ஆன்மிக வாழ்க்கைக்குள் வந்துவிட்டேன். ஆன்மிகம் நமக்கு எது நல்லது, எது கேட்டது என்பதை உணர ஒரு வழித்தடத்தை அமைத்துக் கொடுக்கும்.

கோபம், வெறுப்பு, ஏமாற்றம் இவற¢றை மனதில் வைத்துக் கொண்டு ஒரு மனிதன் நன்றாக வாழ முடியாது. கடவுளும் மனிதனும் ஒன்றுதான். கடவுள் இருக்கிறார், இல்லை என்று சொல்வதும் மனிதனே. சில மனிதர்கள் கடவுள் ரூபத்தில் மக்களுக்கு நம்மைகள் செய்து வருகிறார்கள். இதுபோன்ற என் சிந்தனையும் என் நண்பர்கள் பாரதிய ஹிந்து பரிவார் மாநிலத் தலைவர் செல்வகணேஷ் மற்றும் மாநில செயலாளர் முத்துசாமி ஆகியோர் சிந்தனையும் ஒரே மாதிரி இருந்தது. அவ்வேளையில் அவரிடம் நான் கலந்துரையாடியபோது பாரதிய ஹிந்து பரிவார் இயக்கம் மூலமாக பல ஆன்மிக நன்மைகள் செய்ய முடியும் என அறிந்தேன். எனவே, என் நோக்கத்தை சரியான இடத்தில் இருந்து செலுத்த, நானும் அவர்களுடன் ஆன்மிக பயணத்தை மேற்கொண்டிருக்கிறேன்.

இந்த உலகம் பல நன்மைகளை நம்மிடம் கொடுத்துள்ளது. அதனை நாம் சரியாக பார்த்துக் கொள்வது நம் கடமை. எங்களது இந்த யாகத்தின் மூலமாக பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கை மாறப் போகிறது, மதத்தைத் தாண்டி அனைவரும் இந்த யாகத்தில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும்.’’