சச்சிதானந்தம் பள்ளியில் நிறுவனர் நாள் விழா

கோவை மேட்டுப்பாளையம், கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் நிறுவனர் நாள் விழா அண்மையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

சிறப்பு விருந்தினர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் டாக்டர் எஸ்.மணியன், சிறந்த மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சான்றிதழ், ஊக்கப்பரிசு வழங்கி பேசுகையில், ‘இன்றைய மாணவர்களுக்கு ஆசிரியர்களும், பெற்றோரும் இணைந்து உதவ வேண்டும். பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையை அளித்து தோல்விகளைத் தாங்கி, வெற்றி பெறத் தொடர்ந்து உழைக்கும் மனோதிடத்தை அளிப்பதே உண்மையான கல்வி’ என்றார்.

பள்ளி முதல்வர் இரா.உமாமகேஸ்வரி வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார். நிர்வாக அறங்காவலர் கே.ராமசாமி தலைமை வகித்தார். செயலர் ‘தமிழ்ச் செம்மல்’ டாக்டர் கவிதாசன் வாழ்த்தினார். கல்வி ஆலோசகர் நல்லாசிரியர் வெ.கணேசன் நன்றி கூறினார். முன்னாள் மாணவர்கள் கார்த்திக் கதிர்வேல் (நிர்வாக இயக்குநர், ஹோட்டல் விநாயக், கோவை), ஏ.பி.எஸ்.காவ்யா (துணைத்தலைவர், ஈகோடிடக்ட் பிரைவேட் லிட், சென்னை) ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழ், ஆங்கில நாடகங்கள், வாய்ப்பாட்டு, யோகா, நாட்டுப்புற நடனம், நாட்டிய நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர்களின் சிறப்புக் கண்காட்சியை திருநெல்வேலி ஸ்ரீ விக்னேஷ் இன்டஸ்டிரீஸ் தலைவர் இன்ஜினியர் பி.அமரேசன் தொடங்கி வைத்தார். இசைத் துறை மாணவர்களின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.