தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு சங்கத்தின் புதிய கிளை துவக்கம்

தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு சங்கம், 2002 ம் ஆண்டு அகில இந்திய அளவில் துவக்கப்பட்டது. தற்போது 23 கிளைகள், 7800 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறது. இது மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து செயலாற்றி வருகிறது. தீயணைப்பு, தீ தடுப்பு, பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு, கட்டிட தானியங்கிகள் உள்ளிட்டவைகளுக்கு பரிந்துரைகளையும் அமல்படுத்தும் ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது.

கோவையில் நடந்த துவக்க விழாவில் தலைமை விருந்தினராக தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு சங்கத்தின் சர்வதேச தலைவர் பங்கஜ் தர்கார் பங்கேற்றார். புதிதாக துவக்கப்பட்டுள்ள கோவை கிளையின் தலைவராக லாரன்ஸ் மற்றும் செயலாளராக ராகவேந்திரன் ஆகியோர் பதவி ஏற்றனர். தீ விபத்தை தடுப்பது குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகளின் முக்கியத்துவம் குறித்தும் தர்கார் விளக்கினார். இந்தியாவில், கடந்த 10 ஆண்டுகளில் 3.16 லட்சம் தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

சுரக்ஸா தீ பாதுகாப்பு நிர்ணயத்தை, இந்த சங்கம் ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் தீ பாதுகாப்பு தரத்தை மேம்படுத்த, தீ தடுப்பு மற்றும் கட்டடங்களில் தர அமைப்பை நிர்ணயிப்பது மிகவும் அவசியம். இந்த தர நிர்ணயம், தீ விபத்து ஏற்படுவதை தடுக்கவும், பாதுகாப்பு முறைகளுடன் கட்டடத்தை அமைக்கவும் உதவுகிறது. கட்டுமானத்துறையில் உள்ள நிபுணர்களுக்கும் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு பற்றி வழிகாட்டியாகவும் உள்ளது.

நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு படை துணை இயக்குனர் விஜயசேகர் கூறுகையில், “தமிழ்நாடு தீயணைப்பு படை பிரிவு, புதிய தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து, தீயணைப்பு மற்றும் மீட்பு முறைகளை கோவையில் செயல்படுத்தும்’’ என்றார்.

புதிய கிளை துவக்க விழாவை முன்னிட்டு, ‘தேசிய கட்டட விதிமுறை 2016 அமல்படுத்துவதில் உள்ள சவால்கள்‘  என்ற கருத்தரங்கு நடந்தது. பகுதி 4, தீ மற்றும் உயிர் பாதுகாப்பு அமலாக்க முறை மற்றும் சிறப்பு பயிற்சி’ என்ற தலைப்பில் தேசிய பயிற்சியாளர் நமசிவாயம், விதிமுறகளை பற்றியும், அவற்றை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தையும் விளக்கினார்.

கோவை கிரெடாய் கிளை தலைவர் சுரேந்தர் விட்டல் தனது பாராட்டுரையில் கிரடாய் கிளை புதிய அமைப்புக்கு ஆதரவு அளிக்கும் என்றார். சென்னை கிளையின் தலைவர் வெங்கடேசு, மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.