கால்நடைகள் திருவிழா கண்காட்சி

கோவை பாலக்காடு மெயின் ரோடு எட்டிமடையில் அருள்மிகு எல்லை மாகாளி அம்மன் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலின் 4வது ஆண்டு விழா டிசம்பர் 18-ந் தேதி நடைபெறுகிறது. மேலும், இந்த ஆண்டு சிறப்பு நிகழ்ச்சியாக கால்நடை திருவிழா மற்றும் கண்காட்சி வருகிற 18-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. இது குறித்து எட்டிமடை எல்லை மாகாளி அம்மன் திருக்கோவில் தலைமை அறங்காவலர் சி.ரி. கண்ணன் கூறியதாவது:

எட்டிமடையில் உள்ள எல்லை மாகாளி அம்மன் திருக்கோவில் நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமையான பாரம்பரிய திருக்கோவில் என்ற சிறப்பை பெற்று விளங்குகிறது. இந்த திருக்கோவில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தின்போது தற்போது இருக்கும் இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்த கோவிலின் 4-ம் ஆண்டுவிழா வருகிற 18-ம் தேதி மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது. இதையொட்டி மகாசண்டியாகம், அன்னதானம், ஏழை குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெறுகிறது.

சிறப்பு நிகழ்ச்சியாக 18ம் தேதி காலை 9மணி முதல் மாலை 4மணி வரை கால்நடை திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் தமிழ்நாடு முழுவதில் இருந்தும் பூச்சிகாளைகள், காங்கேயம், காளைகள் உள்ளிட்ட மாட்டினங்கள், ரேக்ளா வண்டிகள், காட்டியாவாடி குதிரைகள், அழகழகான சேவல் இனங்கள் கண்காட்சியில் இடம்பெறுகிறது. சிறந்த கால்நடைகள், குதிரைகள், சேவல்கள், ரேக்ளா வண்டிகளுக்கு சிறப்பு பரிசும், கோப்பையும் வழங்கப்படுகிறது.

கொங்கு மண்டலம் விவசாயிகளை அதிகமாக கொண்ட பகுதி ஆகும். இந்த பகுதியில் விவசாயத்தை ஊக்குவிக்கவும், புதிய தலைமுறையினரும் விவசாயத்தில் ஆர்வம் காட்டும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அழிந்து வரும் நமது பாரம்பரிய கால்நடை இனங்களை அழிவிலிருந்து மீட்டு அதன் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டும், விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் உயர்ந்த நோக்கத்தோடும் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது.

விழாவில் தலைமை விருந்தினராக தமிழக உள்ளாட்சி நிர்வாகம், சிறப்புத்திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொள்கிறார். மேலும், விழாவில் எம்.எல்.ஏ.க்கள் சண்முகம், தனியரசு, நல்லறம் அறக்கட்டளை தலைவர் E.A.P அன்பரசன், முன்னாள் எம்.பி. சி.பி.ராதாகிருஷ்ணன், இந்து முன்னணி பொதுச்செயலாளர் காடேஸ்வரா சுப்ரமணியம் மற்றும் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், தென்சேரி மலை முத்துசிவராமசாமி அடிகளார், பிள்ளையார் பீடம் பொன் மணிவாசக அடிகளார், மணிவாசகர் அருட்பணி மன்ற தலைவர் சென்னியப்பனார் மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்.

இவ்வாறு எல்லை மாகாளி அம்மன் திருக்கோவில் தலைமை அறங்காவலர் சி.கே. கண்ணன் கூறினார்.