தேசிய அளவிலான கராத்தே போட்டியில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி மாணவிகள் சாதனை

கோவை ஒண்டிப்புதூரில் உள்ள ஸ்ரீ ஜெயேந்திரா சரஸ்வதி மகா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளனர்.

மத்தியபிரதேசம் ஜபால்பூரில் உள்ள ராணிடால் பகுதியில், தேசிய அளவிலான எஸ்.ஜி எஃப்.ஐ எனும் பெயரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையேயான கராத்தே போட்டிகள் கடந்த டிசம்பர் 1 முதல் 6ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 32 மாநிலங்களில் இருந்து சி.பி.எஸ்.இ, வித்யா பாரதி, கேந்திர வித்யாலயா, சி.பி.எஸ்.சி ஆகியவற்றிலிருந்து  தங்கப்பதக்கம் வென்ற 1400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழகத்திலிருந்து 64 மாணவ, மாணவியர்கள் இப்போட்டிகளில் பங்கேற்றனர். இதில் 18 பேர் பதக்கங்களை வென்றனர். கோவையிலிருந்து கராத்தே போட்டியில் பங்கேற்ற, ஸ்ரீ ஜெயேந்திரா  சரஸ்வதி  மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள் தர்சினி, மைதிலி, பூஜாஸ்ரீ ஆகியோர் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை புரிந்தனர். 9-ம் வகுப்பு மாணவி தர்ஷினி 17 வயதிற்குட்பட்ட, மைனஸ் 64  கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப்பதக்கமும், எட்டாம் வகுப்பு மாணவி மைதிலி 17 வயதிற்குட்பட்ட மைனஸ் 56 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கமும், பூஜாஸ்ரீ 14 வயதுக்குட்பட்ட பிளஸ் 50 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றார்கள். வெற்றி பெற்று வந்த மாணவிகளை பள்ளியின் நிர்வாக அறங்காவலர் தனலட்சுமி ஜெயச்சந்திரன், தாளாளர் மைத்ரேயி ப்ரியாஅருண், பள்ளி முதல்வர் கீதா சுதர்சனன், தமிழ்நாடு கராத்தே சங்க தலைவர் சாய் ப்ரூஸ், பள்ளி தலைமை கராத்தே  பயிற்சியாளரும், ஆசிய கராத்தே நடுவருமான டி. அறிவழகன், பயிற்சியாளர்கள் நாசர்தீன், வினோத், பள்ளி விளையாட்டுத்துறை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.