‘மிஸ் வின்டர் குயின் 2019’

ஊட்டியிலிருந்து செயல்பட்டு வரும் நீல்கிரீஸ் எபிக் ஈவன்ட்ஸ் அமைப்பு, தென்னிந்திய அளவில் சிறந்த திறன் வாய்ந்த மக்களை அடையாளம் கண்டு கவுரவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ‘வின்டர் குயின் 2019’ என்ற போட்டி நடைப்பெற்றது. நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக சர்வதேச இந்திய அழகி போட்டியில் பரிசு வென்ற சோனாலி பிரதீப் பங்கேற்றார்.

போட்டியில் தென்னிந்திய அளவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திறமை வாய்ந்த 10 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசளிக்கப்பட்டனர். இதில், திருமணம் ஆன, திருமணம் ஆகாத பெண்கள் என இரு பிரிவாக நடத்தப்பட்டது. தென்னிந்திய அளவில் ‘மிஸ் வின்டர் குயின் 2019’ மற்றும் வின்டர் குயின் 2019 தேர்வு செய்யப்பட்டனர்.

நிகழ்ச்சியில் பாரம்பரிய உடையில் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் திறமையும், நகைச்சுவை திறனும் கொண்ட பெண்கள் போட்டியில் வெற்றி பெற்றனர். 10 பெண்களுக்கும் 5 சுற்றுகளில் போட்டி நடந்தது. அவர்களது திறனை பரிசோதிக்கும் விதமாக உரையாடல், இந்திய மேற்கத்திய நடை, தனிப்பட்ட திறன் காட்சிகள், பாரம்பரிய உடையில் அணிவகுப்பு மற்றும் கேள்வி பதில் போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டியின் நடுவர்களாக பூஜா சிங் யோகன் மற்றும் சங்கீதா சின்டே ஆகியோர் செயல்பட்டனர். போட்டியில், தென்னிந்தியாவின் மிஸ் வின்டர் குயின் 2019 ஆக ஸ்வாதி ராமச்சந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டார், தொடர்ந்து ரோஷினி முதல் ரன்னராகவும், மோகனா இரண்டாவது ரன்னராகவும் தேர்வு செய்யப்பட்டனர். மற்றும் மிஸஸ் வின்டர் குயின் 2019 ஆக அஷ்வினி கவுதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து லேண்ரா முதல் ரன்னராகவும், ஸ்ரீதேவி இரண்டாவது ரன்னராகவும் தேர்வு பெற்றனர்.

நிகழ்ச்சியில் நீலகிரி எபிக் ஈவன்ட்ஸ் பெண் சாதனையாளர்கள் விருது, பல்வேறு துறைகளை சேர்ந்த சிறப்பாக செயல்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்டது. இதில் கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் இயக்குனர் மற்றும் செயலாளர் சி.ஏ வாசுகி சிறந்த கல்வியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டின் சிறந்த பெண்மணியாக பூஜா சிங் மற்றும் உலக ஊக்கமளிப்பவராக சங்கீதா சின்டே ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். சிறந்த நிகழ்ச்சி நடத்துபவராக தீபிகா ஜெயின் தேர்வு செய்யப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.

இந்த நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து தி நீல்கிரிஸ் எபிக் ஈவன்ட்ஸ் இயக்குனர் விக்னேஷ் பேசுகையில், ‘‘ கடந்த 2017 ம் ஆண்டு முதல் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிர்களை ஊக்கப்படுத்தும் விதமாக போட்டிகளை நடத்தி கவுரவித்து வருகிறோம். உதவி தேவைப்படுவோருக்கும், எளியவர்களுக்கும் உதவி வருகிறோம். கடந்த 2018 ம் ஆண்டில் திருமதி நீலகிரி 2018 போட்டியை நடத்தினோம். இதில் கிடைத்த நிதியை, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பினோம். மே 2019 ல், எங்களது மிஸ் தமிழ்நாடு  நீலகிரி நிகழ்ச்சியில் நிதி திரட்டி, நீலகிரியில் உள்ள விதவைகளுக்கு தையல் இயந்திரம் வாங்க உதவினோம். தென்னிந்திய ‘வின்டர் குயின் 2019’  நிகழ்ச்சியில் கிடைக்கும் நிதியை, நீலகிரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பயன்படுத்தப்படும். அவர்களது பணியை தொடர, விவசாய கருவிகளை வழங்க இந்த நிதியை பயன்படுத்தப்படும்,’’ என்றார்.