கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஜீரண உறுப்பு நோய்கள் குறித்த கருத்தரங்கு

ஜீரண உறுப்பு நோய்கள் குறித்த கேஸ்ட்ரோஹெப்கான் கருத்தரங்கு கேஎம்சிஹெச் மருத்துவமனையில் நடைபெற்றது.

கல்லீரல் மற்றும் கணையம் முதலான ஜீரண உறுப்புகளில் நோய்கள் ஏற்படுவது பொதுவாக அதிகரித்துவருகிறது. அவற்றுக்கு சிகிச்சைகள் அளிப்பதும் சவால் நிறைந்த ஒன்றாக இருக்கிறது. கல்லீரல் செயலிழப்பு மற்றும் உணவுப் பாதையில் புற்றுநோய் என்பது இந்தியாவிலும் உலகம் முழுவதும் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. சமீப காலங்களில் இந்த நோய்களின் தன்மை குறித்து புரிந்துகொள்வதிலும், அவற்றை ஆராய்வதற்கு உதவிடும் எண்டோஸ்கோபி கருவியிலும், அறுவை சிகிச்சை முறைகளிலும் மிகப்பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அறிந்துகொள்ளவும் இதிலுள்ள சவால்கள் குறித்து விவாதித்து அதன் மூலம் மருத்துவர்கள் பயனடையும் விதமாகவும் கேஸ்ட்ரோஹெப்கான் (Gastrohepcon) என்ற கருத்தரங்கு நடைபெற்றது. வருடா வருடம் நடைபெற திட்டமிட்டிருக்கும் இந்த நிகழ்ச்சியின் முதலாவது கருத்தரங்கு கேஎம்சிஹெச் மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான நிபுணர்கள் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் 200-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இதில் நிபுணர்கள் கலந்துரையாடி கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். எண்டோஸ்கோபி தெரபி முறையில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றங்கள் குறித்தும் சிக்கலான சிகிச்சைகளை எவ்வாறு கையாளுவது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. கல்லீரல் செயலிழப்பு மற்றும் மாற்று கல்லீரல் பொருத்துவது குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

இதனை கருத்தரங்கு ஏற்பாட்டு குழுவைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் அரவிந்த். அருள்ராஜ், ராமகிருஷ்ணன், பாரி விஜயராகவன், மாதேஸ்வரன், அமர், ஹரிந்தர் சிங் மற்றும் விவேகானந்தன் ஆகியோர்  ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

இந்தியா முழுவதிலும் இருந்து வருகை தந்து இத்துறையில் தங்களுடைய அறிவையும், அனுபவத்தையும் பகிர்ந்துகொண்ட மருத்துவ நிபுணர்களுக்கு கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர். நல்லா ஜி பழனிசாமி தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். கருத்தரங்கு ஏற்பாட்டுக் குழுவினருக்கும் தனது நன்றிகளை தெரிவித்த அவர், இதுபோன்ற கருத்தரங்கு வருடா வருடம் நடைபெறும் என்றும் அறிவித்தார்.