எட்டாம் வகுப்பு இயலின் `நல்ல பத்திரிகை’ இதழ்

ஒரு பத்திரிகையை நடத்துவது என்பது ஒரு எளிய சாதாரணமான செயல் அல்ல. இதில் உள்ள பிரச்சனைகள் அத்துறையில் உள்ளவர்களுக்கு தான் தெரியும். என்ன செய்தி போடுவது, அதற்கு என்ன தலைப்பு எதுவாக இருக்கும், இதனை பக்கமாக வடிவமைக்கும் போது அதனை எப்படி வடிவமைப்பது என்று எண்ணற்ற திட்டங்களுடன் தான் ஒரு பத்திரிகையை வெளியிடப்படும். அனால், எட்டாவது படிக்கும் ஒரு அரசு பள்ளி மாணவி இதனை எளிதாக பள்ளி வேலைகளுக்கு இடையில் சிறப்பாக செய்து வருகிறார்.

ஒரு பத்திரிகைக்குத் தேவையான செய்திகளை சேகரிப்பது, அவற்றை டைப் செய்வது, பிழைதிருத்தம் செய்வது, தலைப்பிடுவது, பக்கம் வடிவமைப்பது என எடிட்டர் பணி முதல் ஒரு இதழ் தயாரிப்புக்கான எல்லா வேலைகளையும் ஒற்றை ஆளாகச் செய்து கொண்டிருக்கும் இவரின் வயது 13.

இயல் புதுக்கோட்டை, மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறார். `நல்ல பத்திரிகை’ என்ற பத்திரிக்கை இதழை கம்ப்யூட்டரில் வடிவமைத்து அச்சிட்டு வெளியிட்டு வருகிறார். அதில் கல்வி மற்றும் அரசுப் பள்ளிகள் தொடர்பான செய்திகளை வெளியிட்டு வருகிறார். பத்திரிகை துறையின் மீது அதிக நாட்டம் கொண்டுள்ளர். இவருடைய தந்தையிடமிருந்து போட்டோஷாப் மற்றும் லே அவுட் ஆகியவற்றை கற்றிருக்கிறார். மேலும், பிழை இல்லாமல் ஆங்கிலம் மற்றும் தமிழிலும் டைப் செய்யவும் ஏழாம் வகுப்பு படிக்கும்போதே கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார். இயலின் இந்த இதழியல் பணிகளுக்கு அவருடைய பெற்றோர்களும் பள்ளி ஆசிரியர்களும் மிகுந்த ஊக்கமளித்து வருகின்றனர்.

இயலின் இதழ் வடிவமைப்பு பணியைக் கேள்விப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலெட்சுமி அவரை நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்தியுள்ளார். தற்போது தன்னுடைய இரண்டாவது இதழை எட்டுப் பக்கங்களில் டேப்ளாய்டு வடிவத்தில் வெளியிட்டுள்ளார். இயலின் இதழியல் பணிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. ஒரு பத்திரிக்கைக்கு தேவையான அனைத்தையும் தானே தனியாளாக செய்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: விகடன்