தொண்டாமுத்தூர் அரசு கலை கல்லூரி புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா

தொண்டாமுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டும்பணியினை நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 5.34 ஏக்கர் பரப்பளவில் 8 கோடி மதிப்பில் அமையவுள்ள தொண்டாமுத்தூர் அரசு கலைக்கல்லூரியின் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி புதிய கட்டிடம் கட்டும் பணியினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பேசுகையில், தமிழ்நாடு அரசு, மக்கள் யாரிடமும் கையேந்த கூடாது என்கிற உயர்ந்த நோக்கத்தோடு தொலைநோக்கு பார்வையுடன் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும், தமிழ்நாட்டின் மாணவ மாணவியர்கள் உலகநாடுகளுக்கு இணையாக, உலகத்தரம் வாய்ந்த கல்வியை கற்றால்தான், நவீன அறிவியல் உலகத்தில் போட்டியிட்டு தமிழகத்தை தொடர்ந்து முன்னேற்றபாதையில் கொண்டு செல்ல இயலுவதுடன், தமிழகத்தில் இல்லாமை இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு பள்ளி கல்வி மற்றும் உயர் கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுத்தி கல்வித்துறையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தி வருகின்றது என்றார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர் காளிராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரமேஷ் குமார், கோட்டாட்சியர் தனலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.