கேபிஆர் கல்வி நிறுவனங்களின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

கேபிஆர் கல்வி நிறுவனங்கள், சூலூர் காவல்துறை மற்றும் சுல்தான்பேட்டை WIND CITY ரோட்டரி சங்கமும் இணைந்து சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வை நடத்தியது. இதில் கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின் முதல்வர் பாலுசாமி கோவை WIND CITY ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் Rtn.வள்ளி கனகராஜ் மற்றும் தற்போதைய தலைவர் Rtn.மனோகரன் மற்றும் செயலாளர் Rtn.விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். சூலூர் காவல்துறை ஆய்வாளர் தங்கராஜ் இவ்விழிப்புணர்வு நிகழ்வைத் தொடங்கிவைத்து சாலைப் பாதுகாப்பு முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார். வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்க வேண்டிய சாலைவிதிகள், குறைவான வேகம் மற்றும் நிறைவான பயணம் பற்றிய வாசகங்கள், பயணத்தின் போது தலைக்கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் போன்றவை துண்டுப்பிரசுமாக வழங்கப்பட்டன. கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் மாணவர்களும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசமும், காரில் சீட் பெல்ட்டும் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்பும், பேனாவும் கொடுத்து கௌரவித்தனர். மேலும் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த சிலருக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கி, ஹெல்மெட் அணிவதன் முக்கியதுவம் குறித்து வலியுறுத்தப்பட்டது. மேலும் சூலூர் கலங்கல் ரோடு, சூலூர் சின்னியம்பாளையம் ரோடு, சுல்தான்பேட்டை மற்றும் சூலூரின் முக்கிய சந்திப்புகளில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின் முதல்வர் பாலுசாமி இது குறித்து பேசுகையில், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிர்சேதம், உடல் பாதிப்பு மற்றும் பணவிரயம் போன்றவற்றால் அவர்களின் குடும்பத்திற்கு ஏற்படும் கஷ்ட, நஷ்டங்களை வாகன ஓட்டிகளுக்கு உணர்த்தும் பொருட்டு கேபிஆர் கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து இதுபோன்ற சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது என்றார்.