எஸ்.பி.ஓ.ஏ பள்ளியின் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

எஸ்.பி.ஓ.ஏ மேல்நிலைப் பள்ளியின் சார்பில் பிளாஸ்டெக்ஸ் 2019  என்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு நாடகம் காந்தி பூங்கா வாசலில்  நடைபெற்றது. இதில் பள்ளியின் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

பிளாஸ்டெக்ஸ் 2019 நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல நிகழ்சிகள் பள்ளி சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்காக பள்ளியை முற்றிலும் பிளாஸ்டிக் அல்லாத வளாகமாக மாற்றி வருகிறது. இதில் அடிப்படை தேவைகளுக்கு பயன்படுத்த மாணவர்களே துணியினால் செய்த பையினை ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ளனர்.

இதோடு, பஞ்ச பூதங்களை பாதுகாப்பது குறித்த நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதுமட்டுமல்லாமல் பள்ளிமாணவர்கள் இணைய உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர். இதில் உள்ள சிறப்பு என்னவென்றால் இதற்கான இணையதளத்திற்கு சென்று அதில் நீங்கள் என்ன என்ன தேவைகளுக்காக பிளாஸ்டிக்கை பயன்படுத்துகிறீர்கள் என்பதை தேர்வு செய்தால் அதனை பிளாஸ்டிக் அல்லாமல் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்ற குறிப்புகள் வரும். அதனை கொண்டு பள்ளிமாணவர்கள் இணைய உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதுபோன்ற பிளாஸ்டிக் ஒழிப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றாக இந்த விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு நாடகம் காந்தி பூங்கா வாசலில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்துகொண்டு பேரணியாக கோஷ பலகையுடன், சாலையில் செல்பவர்களுக்கும், பேருந்து நிறுத்தத்தில் இருப்பவர்களுக்கும், பேருந்து பயணிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனுடன் பாதசாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் பிளாஸ்டிக் பயன்படுத்துவதினால் ஏற்படும் தீமைகளையும், இதனை எப்படி தவிர்க்கலாம்  என்பது குறித்தும் நாடகத்தின் வழியாகவே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் பள்ளிமாணவர்கள் 30 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இவர்களுடன் துணை முதல்வர் ஜீவா செந்தில், நூலகர் சிவராமன், ஆசிரியைகள் யோகேஸ்வரி மற்றும்  நிர்மலா ஆகியோரும் கலந்துகொண்டனர்.