மன அழுத்தத்தை குறைக்க தீர்வு தரும் ‘சவக்குழி’

இன்றைய காலகட்டத்தில் எல்.கே.ஜி குழந்தை முதல் 60 வயது ஓய்வு பெற்ற முதியவர் வரை அனைவருக்கும் இருக்கும் பொதுவான ஒரு தொடர்பு மன அழுத்தம். இது பள்ளி குழந்தைகளுக்கு வீட்டு பாடம், கல்லூரி மாணவர்களுக்கு ஹால் டிக்கெட், வேலைக்கு செல்பவருக்கு வீட்டுச்செலவு, திருமணமானவர்களுக்கு வட்டிக்கடன், வாடகை, மாத சந்தா, பிள்ளை பெற்றவர்களுக்கு பள்ளி கட்டணம், குழந்தை வளர்ப்பு, என ஆரம்பித்து அனைத்து வயதினர்களுக்கும் இது ஒரு பொதுவான நோயாக இருக்கிறது.

இந்த மன அழுத்தத்தை போக்க  சவக்குழியில் படுக்க வைக்கும் வினோத பயிற்சியை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது நெதர்லாந்து பல்கலைக்கழகம்.

நெதர்லாந்து நாட்டின் நிஜ்மேகன்  நகரில் உள்ள ராட் பவுடு பல்கலைக்கழகம், தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்க இந்த வித்தியாசமான பயிற்சியை அளிக்கிறது. அந்த வகையில் அரை மணி முதல் 3 மணி நேரம் வரை சவக்குழியில் படுக்க மாணவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த சவ குழிக்குள் யோகா பாய், போர்வை, தலையணை மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது. இங்கு தொலைபேசி உள்ளிட்ட மற்ற பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. சவக்குழியில் படுப்பது, இந்த பூமியில் நமது வாழ்நாள் குறித்த உண்மையை உணர உளவியல் ரீதியாக உதவும் என்று இத்திட்டத்தின் நிறுவனர் ஜான் ஹாக்கிங் கூறியுள்ளார்.