101 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய படகு மீண்டும் மிதந்து வந்தது!

101 ஆண்டுகளுக்கு முன்பு நயாகரா ஆற்றில் விபத்தினால் மூழ்கிய கப்பல், தற்போது அங்கு ஏற்பட்ட சூறாவளியால் மீண்டும் வெளியே வந்து மிதக்க ஆரம்பித்துள்ளது.

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் நயாகரா ஆற்றில் கடந்த 1918-ம் ஆண்டு இரண்டு மாலுமிகளுடன் சென்ற படகு ஒன்று பாறைகளில் மோதி விபத்துக்குள்ளானது. எவ்வளவு முயற்சி செய்தும் கப்பலை காப்பாற்ற முடியாத நிலையில், அதில் பயணம் செய்த இருவரும் கப்பலை விட்டுவிட்டு உயிர் தப்பியுள்ளனர். அதன் பிறகு அந்த படகு நதியின் 150 அடி ஆழத்தில் மூழ்கியது. பிரம்மாண்ட நீர்வீழ்ச்சியான நயாகராவின் நீரோட்டத்தால் 101 ஆண்டுகள் நதிக்கு அடியிலேயே சிக்கியிருந்துள்ளது அந்த படகு.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் அடித்த பலத்த சூறாவளி காற்று காரணமாக பாறைகளுக்குள் சிக்கியிருந்த படகு நகர்ந்து, நீருக்கு வெளியே வந்தது. பின்னர், ஆற்றின் நீரோட்டத்தில் அடித்து வரப்பட்டு தற்போது நீர்வீழ்ச்சிக்கு அருகில் மிதந்து வருகிறது. விரைவில் இது நீர்வீழ்ச்சியிலிருந்து அடித்து செல்லப்படும் என்பதால் இந்த அதிசயத்தை பார்க்க அப்பகுதியில் ஏரளமான சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர்.

தகவல்:நக்கீரன்