கே.பி.ஆர் கல்லூரியில் காந்தியின் 150 – ஆம் ஆண்டு விழா

கோவை, கே.பி.ஆர் கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின், கே.பி.ஆர் பைந்தமிழ் மன்றம் சார்பாக, காந்தி 150 – ஆம் ஆண்டுவிழா நடைபெற்றது. இவ்விழாவில் வணிகக்கணினிப் பயன்பாட்டியல் துறை மாணவி செல்வி சு.நசீமா பர்வீன் வரவேற்புரை வழங்கினார். கே.பி.ஆர் குழுமங்களின் தலைவர் கே.பி.ராமசாமி, காந்தியக் கொள்கைகளைப் பற்றியும் காந்தியப் பொன் மொழிகளின் ஆழ்ந்த நோக்கம் பற்றியும் எடுத்துக் கூறி தலைமையுரை வழங்கினார். கே.பி.ஆர் கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் செயலர் எ.கே.முனுசாமி, காந்தியக் கொள்கைகளை மாணவர்கள் எவ்வாறு தங்கள் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும் என்பதைப்பற்றி  விரிவாகக் கூறி விழாவிற்கு வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் எஸ்.பாலுசாமி, காந்தியையும் வள்ளலாரையும் அருட்செல்வர்  போன்ற முன்மாதிரி மனிதர்கள் எவ்வாறு பின்பற்றினார்கள், அவ்வாறு பின்பற்றியதால் அவர்கள் வாழ்க்கையில் எவ்வாறு உயர்ந்தார்கள் என்ற வாழ்வனுபவங்களைக் கூறி வாழ்த்துரை வழங்கினார்.

விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மகாத்மாவை ஒத்த நடிகர், சமூக ஆர்வலர், உன்னத இந்தியா இயக்கத்தின் நிறுவனர் காந்தி கனகராஜ், காந்தியின் அகிம்சையும், சத்தியமுமே இந்திய விடுதலைக்கு அடிப்படையாக அமைந்தது. குற்றங்கள் இல்லாத நாடாகவும், சிறைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள நாடாகவும், பெண்களுக்கான பாதுகாப்புள்ள நாடாகவும், நோய்கள் இல்லாத நாடாகவும், உலக முன்னோடி நாடாகவும் நம் இந்தியா இருக்கவேண்டும். மாணவர்கள் நல்லனவற்றைக் கேட்க வேண்டும். நல்லனவற்றைப் பார்க்கவேண்டும். நல்லனவற்றைச் செய்யவேண்டும் என்றும் ஆயுதமே இல்லாத நாடாகவும் போரே இல்லாத நாடாகவும் எதிர் காலத்தலைமுறையினர் நம் நாட்டை உருவாக்கவேண்டும்  என்றும் கூறினார். என்றுமே நிகழ்கால அரிச்சந்திரனாக வாழக்கூடிய காந்தி, திருக்குறளின் அறக்கருத்துக்களை தன் வாழ்வின் நெறிக்கருத்துக்களாகப் பின்பற்றியவர் என்றும் எளிமை வலிமை தரும். ஆடம்பரம் அழிவைத்தரும் என்றும் கூறி மாணவர்களை நெறிப்படுத்தினார்.

வணிகக்கணினிப்பயன்பாட்டியல்  துறை மாணவி செ.காயத்ரி நிகழ்விற்கு நன்றியுரை கூறினார். வணிகவியல்  துறை மாணவி  பா.பிரித்தி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். வணிகவியல் துறை மாணவர் சூரியபிரகாசும் கணினி அறிவியல் துறை மாணவி கீர்த்திகாவும் நிகழ்வை ஒருங்கிணைத்தனர். பேராசிரியர்களும் மாணவர்களும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.