அழகுக்கு அழகு சேர்ப்பது கைத்தறி புடவைதான்

மனித நாகரிகம் வளர்ச்சியடையத் தொடங்கியவுடன் தன் உடலை மறைக்க ஆடைகளை அணியத் தொடங்கினான். அன்று தொடங்கிய இந்த ஆடைக் கலாச்சாரம், இன்றுவரை மென்மேலும், மனிதர்களின் தேவைக்கேற்ப, புதுப்புது வடிவம் பெற்று வளர்ந்து வருகிறது. ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் இருக்கின்ற தனித்தன்மையைப்போல தனக்கென்று தனிச்சிறப்பும் தொன்மையும் கொண்டது, இந்திய ஆடைக் கலாச்சாரம். அதிலும், அயல்நாட்டினர்கள் பார்த்து வியக்கும் அளவிற்கு நம் ஆடைக் கலாச்சாரம் தனித்தன்மை கொண்டது.

ஆரம்ப காலகட்டத்திலிருந்து ஆடை உற்பத்தி செய்ய பல்வேறு முறைகள் பயன்படுத்தப்பட்டன. பின்னர் கால மாற்றத்திற்கு ஏற்ப தற்போதும் தொழில் முறைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. இதில் தொன்மை வாய்ந்த ஆடை உற்பத்தி முறைகளில் ஒன்று, கைத்தறி நெசவு. இந்தத் தொழிலில் பாரம்பரியமாகவும், நேர்மையாகவும், தனித்திரமையுடனும், சிறப்புடனும் செயல்பட்டு வரும் புஞ்சை புளியம்பட்டியைச் சேர்ந்த ஜெகநாதன், தனது தொழில் குறித்த சுவாரசியமான தகவல்களையும், சந்தித்த சவால்களையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

‘புஞ்சை புளியம்பட்டி எனும் சிறிய கிராமத்தில் கிருஷ்ணசாமி என்பவருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்து வளர்ந்தேன். எனது முப்பாட்டனார் செய்த தொழில் நெசவு. தற்போது கைத்தறியில் வார்ப் மற்றும் வெப்ட் கலந்து தயாரித்து பட்டுப்புடவையாக இந்திய அளவில் விற்பனை செய்து வருகிறோம்’ என்று தன்னைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டார்.

 

நெசவுக்கு நீங்கள் எவ்வளவு பழமையானவர்கள்? நெசவுத் தொழில் உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு பழமையானது?

எங்களது பாரம்பரியம் என்பது தேவலர் முனிவர் வம்சம் தேவாங்கர் நாங்கள். 5000 ஆண்டுகளுக்கு முன்பு இறைவனுக்கு துணியில் ஆடை நெய்து கொடுத்த குலம், எங்களது தேவாங்கர் குலம். 500 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த தேவசாமையா என்பவரின் வாரிசுகள் நாங்கள். எங்களுடைய பாரம்பரியம் கைத்தறிதான். ஆடையை தரமாகவும், பதமாகவும் வழங்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம். அத்தகைய தரம், பதம் கைத்தறியில்தான் கிடைக்கிறது. நெசவுத் தொழில் செய்யும் கைத்தறியில்தான் உயிர் இருக்கிறது.

நெசவு உங்கள் வாழ்க்கையில் செய்தது என்ன? நீங்கள் நெசவுக்கு செய்தது என்ன?

எனக்கு 60 வயதாகப் போகிறது, நாங்கள் இந்தத் தொழிலுக்கு வரும் முன் எங்களது அப்பா, தாத்தா ஆகியோருக்கு ரூ.500 மற்றும் ரூ.1000 பெரிதாக இருந்தது. வடநாட்டவர்கள் புடவைகளை வாங்கிச் சென்று, அங்கே அவர்கள் வைப்பதுதான் விலையாக இருந்தது. நாங்கள் இந்தத் தொழிலுக்கு வந்த பிறகு நேரடியாகச் சென்று மார்க்கெட்டிங் செய்தோம். அதில் வந்த இலாபத்தின் மூலம் நெசவுத் தொழிலாளர்களுக்கு கூலி அதிகமாக வழங்கினோம். அன்றைக்கு ஒரு புடவைக்கு ரூ.100 கிடைத்தது. ஆனால், இப்போது ரூ.1000 கிடைக்கிறது. அதனை நாங்கள் தொழிலாளர்களுக்கு கொடுக்கிறோம். இதன்மூலம் தொழிலாளர்களின் வளர்ச்சி மேன்மையடைகிறது. தொழிலுக்கு ஏற்ற இரகங்களை நாங்கள் தயார் செய்கிறோம். கொடுக்கும் விலைக்கு ஏற்றாற்போல நாங்கள் புடவையைத் தயார் செய்து தருகிறோம்.

நாகரிக உலகத்திற்கு ஏற்றவாறு உங்களிடம் உள்ள பொருட்களைப் பற்றி கூறுங்கள்.

நாங்கள் ஜகார்ட்ல் கோர்வை நெசவு செய்தால் நல்ல விலைக்குச் செல்லும், சாதாரண புடவை நெசவு செய்தால் விலை சற்று குறைவாக இருக்கும். ஒவ்வொரு டிசைனையும் நாங்கள் புதுமையாக செய்து வருகிறோம். எங்களது நவீனத் தறிகளின் மூலமாக நாங்கள் ஒவ்வொரு புடவையிலும் புதுமைகளை புகுத்திக் கொடுப்பதால் நல்ல விலைக்கு வாடிக்கையாளர்கள் எடுத்துச் செல்கிறார்கள். மாதம் ரூ.3000 ஊதியம் பெறுபவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் ஊதியம் பெறுவதற்கான ஆலோசனையை நாங்கள் கொடுக்கிறோம். நல்ல திறன் படைத்த வேலை ஆட்களை வைத்துத்தான் அனைத்தையும் நல்லமுறையில் செய்ய இயலும். அவ்வாறு நாங்கள் 21 வயது முதல் 80 வயது வரை இருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு தருகிறோம். குழந்தைத் தொழிலாளர்களுக்கு இங்கு வேலை அளிப்பதில்லை.

எங்களது புடவைகள் அனைத்தும் கைத்தறியில் தயாரிக்கப்படுகின்றன. ஒரு புடவை தயாரிக்க 3 நாட்கள் தேவைப்படுகிறது. இது ஒரு குடும்பத் தொழிலாக இருப்பதால் சந்தையில் நல்ல விலைக்குச் சென்றால்தான் எங்களுக்கு இலாபம்.

சாஃப்ட்சில்க் புடவை வெள்ளை ஜரிகை கொண்டு தயாரிக்கப்படுகிறது. வருடத்திற்கு 4 டிசைன்கள் தனித்துவமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் மாற்றிக் கொண்டே இருப்போம். கல்யாண புடவை என்றால் ப்ரோகேடு எனத் தயார் செய்வோம். அதுவே சாஃப்ட்சில்க் சாதாரண விசேஷங்களுக்கு உடுத்தும் வகையில் இருக்கும். அதனால் இந்த இரகத்திற்கு எப்போதும் தேவை அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் நெசவுத் தொழில் செய்பவர்கள் 10 முதல் 15 இலட்சம் பேர் இருக்கிறார்கள். இந்தத் தொழில் எப்போதும் எந்தக் காலத்திலும் ஒரு நிரந்தரமான தொழில். அந்தக் காலகட்டத்தில் நெசவாளிகளுக்கு வருமானக் குறைவு என்பதால் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு திருமணத்திற்கு பெண் தரமாட்டார்கள். ஆனால், இப்போது போதிய அளவு ஊதியம் தருகிறோம். அதனால் இப்போது கல்லூரி படிப்பு முடித்தவர்கள்கூட இதில் ஆர்வமாய் உள்ளனர். இது வீட்டுத்தொழில் ஆகும். இந்தத் தொழில் ஈடுபட்டுள்ளவர்கள், யாருக்கும் அடிமை இல்லை. மாணவர்களுக்கும் நாங்கள் பயிற்சி அளிக்கிறோம். நீங்கள் கைத்தறியைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் காலை 6 மணி முதல் மாலை 6 வரை நேரில் வரலாம். தொலைபேசி: 91432 66666, 97155 42233.

3 மாதம் இந்தத் தொழில் பழகினால் போதும், நல்ல நெசவாளி ஆகலாம். நாங்கள் இந்தத் தொழிலைத் தொடர்ந்து நல்ல முறையில் செய்தால்தான், எங்கள் வாரிசுகளும் இந்தத் தொழிலை எதிர்காலத்தில் செய்வார்கள். வருமானம், தொழில் என இரண்டும் சேர்ந்த வேலை இது. உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் நிச்சயமாக எங்கள் நெசவுத் தொழிலில் கிடைக்கும். நினைத்ததை நினைத்தபடி செய்ய நினைத்தால் வருமானம் பெறலாம்.

இந்தக் காலத்து பெண்கள் புடவை அணிய எவ்வளவு விரும்புகிறார்கள்? அப்படிப்பட்ட பெண்களுக்கு எந்தெந்த வகை புடவைகளை நீங்கள் தருகிறீர்கள்?

கைத்தறி என்பது ஒரு கலாச்சாரம், அதில் புதுமையான டிசைன்களை மட்டுமே புகுத்த முடியும். 2000 முதல் 3000 வருடங்களுக்கு முன்பு பெண்களை அழகுபடுத்தியதே இந்தக் கைத்தறி புடவைகள்தான். இப்போதும் கல்லூரி மாணவிகள் புடவை அணிவதையே பாரம்பரியமாக நினைக்கிறார்கள். அத்தகைய பாரம்பரியமான புடவையை நெய்வதுதான் எங்கள் தேவாங்கர் நெசவாளர்களின் வேலை. எனவே, பாரம்பரியம் என்றும் மாறவே மாறாது.

தீபாவளி பண்டிகை வந்து கொண்டிருக்கிறது. அதற்கு எவ்வகை பட்டு வரவேற்கப்படுகின்றது?

கல்யாண சீசன் என்றால் ரூ. 10,000-ற்கும் மேல் புடவைகள் எதிர்பார்க்கப்படும். இத்தகைய தீபாவளி, ஓணம் போன்ற பண்டிகைகளின்போது ரூ. 5000 என்ற பட்ஜெட்டில் புடவைகள் எதிர்பார்க்கப்படும்.

அப்படிப்  பார்க்கையில் கைத்தறியில் பட்டு ரூ.5,000 இல் இருந்தும், காட்டன் 1,000 முதல் 2,000, சில்க் காட்டன் 2,000 முதல் 3,000 என்று அனைத்து வகைக்கும் ஏற்றவாறு 500 கிராமிற்குள் முடித்து விடுவோம். திருமணப் புடவை என்றால் 750 கிராம் முதல் 1 கிலோ என அதிக ஜரிகை பயன்படுத்தி செய்வோம்.

அடிப்படையாக நெசவாளிகளுக்கு அரசிடம் என்ன உதவி தேவைப்படுகிறது?

அரசின் உதவி ஆரம்பகால உதவி நெசவாளர்களுக்கு நிச்சயமாக தேவை, மாஸ்டர் வீவர்ஸ்க்கு வங்கிக் கடன் குறைந்த வட்டியில் தேவை. கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி கோவையில் தேவாங்கர் நெசவாளர்கள் மாநாடு நடத்தினோம். அதில் இலட்சக்கணக்கான தேவாங்கர் மற்றும் நெசவாளர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர். அதில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் கூறுவதென்றால், அரசின் உதவிகள் 18 கோரிக்கைகள் தேவையென மத்திய, மாநில அரசிடம் சமர்பித்துள்ளோம்.

நெசவுத் தொழிலைத் தாண்டி வேறு என்ன திட்டங்களை ஆசையாக செய்து வருகிறீர்கள்?

எங்களது உற்பத்தியாளர்களுக்கு மார்க்கெட்டிங் செய்ய கற்றுக்கொடுக்கிறோம். வசதியற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறோம். சமுதாயத்திற்கும், ஆன்மிகத்திற்கும் பணியாற்றும் விதமாக தென் சீரடி சக்தி சாய் ராம் தர்மஸலா ஒன்றினை நிறுவி இதன்மூலம் வருடம் முழுவதும் லட்சகணக்கானோர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறோம்.

இது மட்டுமல்லாமல் மற்ற பொது சேவைகளும் செய்து வருகின்றோம். இவைஅனைத்தும் வருங்கால சந்ததியினரை வளமுடனும், நலமுடனும் உருவாக்கவே இதனை செய்து வருகின்றோம். வருங்காலத்தில் 1000த்திற்கும் மேற்பட்ட பசுக்களைக் கொண்டு கோ-சாலை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

எங்களது கைத்தறி ஆடைகளை வாங்கி உடுத்தி என்றும் போல் உங்கள் ஆதரவை எங்களுக்குத்  தர வேண்டி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.