மக்கள் ஒவ்வொருவரும் கடவுள்

பாரதிய ஹிந்து பரிவார் துணைச் செயலாளர் முத்துசாமி நேர்காணல்

தமிழ்நாட்டில் இருக்கும் பிரச்னைகளை சரி செய்ய யார் வருவார்கள் என்று பலர் அனுதினமும் யோசித்துக் கொண்டு இருக்கிறார்கள். மக்கள் பிரச்னையை யார் தீர்த்து வைப்பார்கள்? யாருக்கு அந்த பொறுப்பு இருக்க வேண்டும்? இதுபோன்ற எண்ணங்கள் நமக்குத் தோன்றும். இந்த பரபரப்பான வாழ்க்கை ஓட்டத்தில் எப்படி நாம் மக்களின் பிரச்னையை சரி செய்வது என்று சிலர் எண்ணுவது உண்டு. இதற்குத் தீர்வு எனில், நம் நாட்டின் இளைஞர்கள் சமூகப் பணிகளில் இறங்கி வேலை செய்தால் நம்மைச் சுற்றி நல்லது நடக்கும். அதேநேரம், தற்போதைய இளைஞர்களால் மக்கள் பிரச்னைகளைத் தீர்த்துவைக்க முடியுமா என்ற கேள்வியும் நம் மனதில் எழும். ஆனால், ‘இது எங்களால் முடியும்’ என்று சொல்லும் ஒரு இளைஞரை நாங்கள் பார்த்தோம். அவர்தான் பாரதிய ஹிந்து பரிவார் மாநில இணைச் செயலாளர் டாக்டர் மு.முத்துசாமி. அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட சுவாரசிய உரையாடலைக் காண்போம்.

‘‘கோவை மக்கள் அனைவருக்கும் வணக்கம். முதலில் மக்களுக்கு நற்செய்திகளை சிறப்பாகத் தொகுத்துக் கொடுக்கும் ‘தி கோவை மெயில்’ பத்திரிகைக்கு என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இளம் வயதில் நான் சமூக பொறுப்புக் காரணம் என்ன என்று பலரும் கேட்டனர். அவர்களுக்கு புன்னகையுடன் கூறுவது ஒரே விஷயம்தான், மக்களுக்கு நாம் ஏதாவது நல்லது செய்துகொண்டே இருக்க வேண்டும். என் பெற்றோர் சிறு வயதில் சொல்லிக் கொடுத்த ஒரே விஷயம், தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும் நம்மைச் சுற்றி இருக்கும் மக்களையும் பாதுகாக்க வேண்டும். அவர்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் துணை நிற்க வேண்டும் என்பதுதான்.

சிறு வயதில் இருந்தே ஆன்மிக வழியாக சில நற்குணங்களை செய்வது வழக்கம். ஆன்மிகம், நம் மனதை ஒருநிலைப்படுத்தி நமக்கு என்ன தேவை, எதற்காக நாம் இந்த உலகில் இருக்கிறோம் என்று எண்ணத்தை நமக்கு உணர்த்தும். ஒவ்வொரு மனிதனும் கடவுள். ஒருவன் தன் மனதை ஒருநிலைப்படுத்தி, தான் யார் என்ற கேள்வியை எழுப்பினால் போதும். நம்மைச் சுற்றியுள்ள மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்ய ஆரம்பித்து விடுவோம்.

சிறு வயதில் டாக்டர் பட்டம் பெற்றேன். எம்பிஏ பட்டதாரி ஆக வேண்டும் என்று நினைத்தேன். அனைத்தையும் செய்து முடித்துவிட்டு, அடுத்தது என்ன செய்யலாம் என்று எண்ணும்போது, நம்மைக் காப்பாற்றிக்கொள்ள நமக்குத் தெரியும். அதேவேளையில் கஷ்டப்படும் மக்களுக்கு யார் உதவி செய்வார்கள் என்ற சிந்தனை எனக்கு பல வருடங்களாக இருந்தது. அப்போதெல்லாம், நம்மால் முடிந்த அளவுக்கு சிறுசிறு சமூகப் பணிகளை மேற்கொள்வோம் என்று என் மக்கள் நலப்பணிகளைத் தொடர ஆரம்பித்தேன். அதேசமயம், பங்குச்சந்தை தொழிலைத் தனியாக எடுத்து நடத்த முடிவு செய்தேன். இப்படித்தான் கோவையில் என் வாழ்க்கைப் பயணம் தொடங்கியது.

பங்குச்சந்தை துறை நன்றாக போயிக்கொண்டிருந்தது. அதேவேளையில், சமூகப் பணிகளையும் செய்து கொண்டிருந்தேன். அப்படி என்ன சமூகப் பணிகள் செய்தேன் என்று நீங்கள் கேட்கலாம். ஏழை, எளிய மாணவச் செல்வங்களின் படிப்புச் செலவுக்கு முடிந்த உதவிகளை செய்கிறேன். நோய் தீர்க்க மருந்துக்கு பணம் இல்லாமல் தவிக்கும் ஏழைகளுக்கு முடிந்ததை செய்கிறேன். அப்போதுதான் எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது, சமூகப் பணிகளை மேலும் விரிவுபடுத்த சில ஆட்களை நியமனம் செய்தேன். அதன்மூலம் பலருக்கும் உதவிகள்  வேகமாக சென்றடைந்தன.

என்னுள் இருக்கும் ஆன்மிகப் புரிந்துணர்வால், மக்கள் அனைவரையும் கடவுளாகப் பார்க்கத் தொடங்கினேன். அப்போது ஏழைகளின் புன்னகையில் இறைவனின் சந்தோசத்தைப் பார்க்க முடிந்தது. இந்த நேரத்தில் மக்கள் பிரச்னைகள் ஒவ்வொன்றாக என்னைத் தேடி வந்தன. அப்போது பலருடைய பிரச்னைகளுக்கு பணம் மட்டுமே உதவியாக இருக்காது என்பதை உணர்ந்தேன். அவர்களுக்குத் தேவையானதை செய்துகொடுக்க அரசாங்க உதவி நமக்கு கண்டிப்பாக வேண்டும், அதற்காகவே அரசியல் களத்தில் என்னை அர்ப்பணித்தேன். இதன்மூலம் பொதுமக்களுக்கு பல உதவிகளைத் தங்குதடையின்றி வழங்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

எந்த ஒரு இயக்கத்தில் சேர்ந்தவுடனே நம்மால் நல்லது செய்துவிட முடியாது. ஏனெனில், நமது கொள்கைகளும் நாம் சேரும் இயக்கத்தின் கொள்கைகளும் ஒன்றாக இருக்க வேண்டும். அப்போது மட்டும்தான் நாம் நினைத்ததை சரியாக செய்து முடிக்க முடியும். அந்த சமயத்தில், பாரதிய ஹிந்து பரிவார் இயக்கம் நான் சிந்திக்காத, எதிர்பார்க்காத பல்வேறு உதவிகளை மக்களுக்கு செய்து வருவதைக் கண்டேன்.

இயக்கத்தின் மாநில தலைவர் செல்வகணேஷ், எனக்கு சிறுவயதிலிருந்து தெரியும். 15 வருட நட்பு அவரும் பல சமூகப் பொறுப்புள்ள விஷயங்களை செய்து வருகிறார். எங்களது அன்பு மிகவும் பலமானது, எனவே மக்களுக்கு நல்லது செய்ய எங்கள் இருவரது நேரத்தையும் ஒதுக்குவது என்று முடிவெடுத்தோம். அதற்கு பிறகு என் கனவை நினைவாக்க எனக்கு இயக்கத்தில் மாநில இணைச் செயலாளர் பொறுப்பு கிடைத்தது.

கோவை மாவட்டத்தில் எங்கள் நற்பணிகளின் முதல் படி என்னவெனில், பல இடங்களில் மரக்கன்று நட உள்ளோம். ஏனெனில், இயற்கை நம் காவல் தெய்வம். இயற்கையை நாம் சரியாக வைத்துக்கொள்ள வேண்டும். அதையடுத்து, தண்ணீர் பிரச்னை எங்குள்ளது என்று தேடி, அதை சரி செய்ய உள்ளோம். மக்களுக்கு எதாவது பிரச்னை என்றால், எங்கள் இயக்க இளைஞர்கள் உதவியாக இருப்பார்கள். 24 மணி நேரமும் மக்கள் பிரச்னைகளைத் தீர்க்கும் இயக்கமாக நாங்கள் இருக்கப் போகின்றோம். எங்கள் இயக்கத்திற்கான இளைஞர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது முடிந்தவுடன் தொகுதி மற்றும் வார்டு வாரியாக எங்கள் இயக்க நண்பர்கள் மக்களுக்கு உதவி செய்வார்கள்.

இங்கே நான் முக்கியமான நபரைக் குறித்து சொல்ல வேண்டும். அவர்நம் இயக்கத்தில் இருக்கும் லோகநாதன். அவர் எனக்கு நெருங்கிய நண்பர். நாம் யோசிப்பதைவிட அதிகமான அளவில் சமூக சேவைகளை எப்படி செய்யலாம் என்று சிந்திக்கக் கூடியவர். அவர் என்னிடம் அடிக்கடி சொல்லும் ஒரே விசயம், மக்களுக்கு எந்த சமயத்திலும் உதவியாக இருக்குமாறு நம் இயக்கத்தை நல்ல வழியில் நடத்த வேண்டும் என்பதுதான். அவரின் சேவையை புரிந்து கொண்டு மாநில மக்கள் தொடர்பு அலுவலர் (PRO) பொறுப்பு லோகநாதனுக்கு வழங்கப்பட்டது. எங்கள் இயக்கத்திற்கு கிடைத்த ஒரு அரிய வாய்ப்பு ஏன்னெனில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு மாநில அரசு எங்களுக்கு வாய்ப்பு அளித்தது. இது எங்களை மேலும் சந்தோசமாக இயக்கப் பணிகளை தொடர்வதற்கு தூண்டுகோலாக அமைந்தது.

எங்கள் இயக்கத்தின் மூலமாக பெண்களுக்கு எதிரான பிரச்னைகளைத் தட்டிக் கேட்போம், அவற்றிற்கு சட்டப்பூர்வமாகத் தண்டனை வாங்கித் தருவோம். மக்கள் தங்கள் பிரச்னைகளை எங்கள் அலுவலகத்திற்கு வந்து சொல்லலாம். விரைவில் தீர்க்கக்கூடிய அவசர பிரச்னையாக இருந்தால் உடனடியாக நாங்கள் உதவி செய்வோம். நம் நாட்டின் கலாச்சாரம், ஆன்மிகம் இவையனைத்தும் நம் முன்னோர்களின் பொக்கிஷம். அதை எப்போதும் நாம் மறந்துவிடக் கூடாது. மக்களுக்காக ஒன்று கூடுவோம், கைகோர்ப்போம்’’ என்றார்.