பி.எஸ்.ஜி கல்லூரியில் இரண்டு நாள் தேசிய பயிலரங்கம்

பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி நூலகத் துறை சார்பில் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலின் நிதியுதவியுடன் “கல்வி அடையாளம், ஆராய்ச்சி தெரிவுநிலையை மேம்படுத்துதல் மற்றும் மேற்கோள்களை மேம்படுத்துதல்” என்னும் தலைப்பில் இரண்டு நாட்கள் தேசிய அளவிலான பயிலரங்கம் கல்லூரி நூலக கருத்தரங்கில் நடைபெற்றது. பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி நூலகர் சிவக்குமார் வரவேற்புரை வழங்கினர். இதனை தொடர்ந்து கல்லூரி முதல்வர் பிருந்தா தலைமையுரையாற்றுகையில், உயர்வான கல்வி அடையாளத்தை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் தங்களது அறிவியல் கட்டுரைகளை உலகின் தலை சிறந்த அறிவியல் பத்திரிகைகளில் வெளியிடுவது மிகவும் அவசியம் என்று கூறினார். இது போன்ற அறிவியல் கட்டுரைகள் வெளியிடுவதற்கும் உயர்வான தரத்தை அடைவதற்கும் இது போன்ற கருத்தரங்குகள் பெரிய அளவில் உதவும் என்றார். மேலும் நமது கல்லூரி ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற கருத்தரங்குகளை மிகப் பெரிய அளவில் ஏற்பாடு செய்யும் என்றும் அறிவித்தார்.

கல்லூரி முதல்வர் பிருந்தா அவர்கள் இந்திய ஆராய்ச்சி தகவல் வலையமைப்பில் (IRINS) பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தகவல் பக்கத்தை துவக்கி வைத்தார். இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ள முக்கிய நபர்களான சிவக்குமார் மற்றும் கண்ணன் ஆகியோர் ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம் தவிர்த்து இந்த வசதியை அறிமுகப்படுத்திய முதல் கல்லூரி பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்று மிகுந்த வரவேற்பிற்கிடையே அறிவித்தனர். கேரள பல்கலைக்கழகத்தின் நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறையின் முன்னாள் தலைவர் விஜயகுமார் அவர்கள் பேசுகையில், மேற்கோள் அட்டவணைப்படுத்தல், அறிவியல் மேற்கோள் அட்டவணை, சமூக அறிவியல் மேற்கோள் அட்டவணை, அனைத்தும் பிலோடெல்பியா  வில் உள்ள அறிவியல் தகவல் நிறுவனத்தால் பராமரிக்கப்படும் “web of Knowledge” என்னும்  வலைத்தளத்தில் 1960 ஆம் ஆண்டு முதல் கிடைக்கிறது என்றும் இந்த வெளியீடுகள் அறிவியல் இலக்கியத் தலைமுறை உருவானதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது எனக் கூறினார்.

பஞ்சாப் மத்திய பல்கலைக்கழக துணை நூலகர் கண்ணன் தனது சிறப்பு உரையில் “INFLIBNER” ல் தனது தனித்துவமான பங்களிப்புகளையும், இந்திய ஆராய்ச்சி தகவல் வலையமைப்பை (IRINS) உருவாக்கும் போது அவர் எதிர்கொண்ட சவால்களையும் ஸ்கோப்பஸ் (ScopusssssScopus) மற்றும் வெப் ஆப் சயின்ஸுக்கு (Web of Science) ஒரு இந்திய மாற்றாக இந்திய ஆராய்ச்சி தகவல் வலையமைப்பு (IRINS) உருவாகியுள்ளதாகத் தெரிவித்தார். வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியின் மூத்த இயக்குநர் மற்றும் முன்னாள் நூலகம் மற்றும் தகவல் அதிகாரி சுப்பிரமணியன் பேசுகையில், இந்த நாடு அரசியல் ஏகாதிபத்தியம், பொருளாதார ஏகாதிபத்தியம் மற்றும் இப்போது அறிவுலக ஏகாதிபத்தியத்தை எதிர்கொண்டுள்ளது, ஏனெனில் இந்த நாட்டில் உள்ள தொழில்முறை கல்லூரிகள் மேற்கத்திய நாடுகளின் அறிவியல் தளங்களை அணுக பல ஆயிரம் கோடிகளைச் செலுத்துகின்றன. இந்த கருத்தரங்கு அத்தகைய அறிவுலக ஏகாதிபத்தியத்தை முடிவுக்குக் கொண்டுவருவதின் தொடக்கம் மட்டுமே என்று அவர் கூறினார். இந்த பயிலரங்கின் முதல் நாளில் கண்ணன் பேராசிரியர்களுக்கான ORCID ஐடியின் நன்மையை தெளிவாக வெளிப்படுத்தினார். சுப்பிரமணியன் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட பிப்லியோமெட்டிக்ஸ் மற்றும் சைண்டோமாடிக்ஸ் சட்டங்களின் உதவியுடன் திறன் மிக்க ஆராய்ச்சி செய்வதற்கான தெளிவான வரைபடத்தை வழங்கினார். பி.எஸ்.ஜி .ஐ.எம் இன் இணை பேராசிரியர் மன்சூர் அலி மிகவும் எளிமையான முறையில் வணிக பகுப்பாய்வுகளைப் பயன்படுத்தி உரை பகுப்பாய்வை எவ்வாறு நிகழ்த்தலாம் என்பதை விளக்கினார்.

மேற்கோள் பகுப்பாய்வைப் பயன்படுத்தி ஆசிரியரின் தெரிவுநிலையை அதிகரிப்பதற்கான 30 க்கும் மேற்பட்ட காரணிகளை சிவகுமார், பங்கேற்பாளர்களின் பார்வைக்கு கொண்டு வந்தார். பங்கேற்பாளர்களின் கலந்துரையாடல் முதல் நாள் பயிலரங்கின் வெற்றியை உறுதிப்படுத்தியது. இரண்டாம் நாள் மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவில் நூலகர் சிவக்குமார் அவர்கள் வரவேற்றுப் பேச கல்லூரி முதல்வர் பிருந்தா அவர்களும், செயலர். கண்ணய்யன் அவர்களும் வாழ்த்திப் பேசினர். நிறைவு விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட  இந்திய தரநிலை அமைப்பின் (கோவை) இயக்குநர் மீனாட்சி கனேசன் இத்தகய கருத்தரங்கங்கள் ஆராய்ச்சி மேற்க்கொள்வோருக்கு மிகப்பெரிய பயனளிக்கும் எனக்கூறினார். நூலக தொழில்நுட்ப உதவியாளர் பிரியா நன்றி கூற பயிலரங்கம் இனிதே நிறைவுற்றது.