கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரியில் விழிப்புணர்வு முகாம்

கோவை கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரியில் சுயதொழில் முனைவோர் மையம் கடந்த 12.9.2019 முதல் 14.9.2019 வரை கல்லூரி வளாகத்தில் 3 நாள் சுய தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாமை தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தொழில்முனைவு மேம்பாட்டு வாரியம் (DST-NIMAT), இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை புதுடெல்லி உடன் இணைந்து நடத்தியது.

80 மாணவர்கள் பங்கேற்ற இம்மூன்று நாள் முகாமின் முதல் நாளில் கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியின் இணைப்பேராசிரியர் இப்ராஹிம் பாதுஷா அவர்கள், கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் மோகன்தாஸ் காந்தி, சுய தொழில் முனைவோர் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் முகாமை துவக்கி வைத்து தொழில்முனைவோரின் தேவை என்ற தலைப்பில் தலைமையுரையாற்றினார். இந்த மூன்று நாள் முகாமில் நடைபெற்ற ஒன்பது அமர்வுகளில் அரசு தனியார் வங்கி மற்றும் தொழில்துறை நிறுவனங்களைச் சார்ந்த ஒன்பது வல்லுநர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கருத்தரங்கம், செயல்திட்டங்கள், கேள்வி பதில் நிகழ்ச்சி நிரல் மூலமாக சிறப்பு பயிற்சி அளித்து, திட்டங்கள், நிதிகளின் ஆதாரத்தை உருவாக்குதல், சந்தை வாய்ப்பு, உலகலாவிய சமீபத்திய போக்குகளும் வாய்ப்புகளும், வணிக வாய்ப்புகளை அடையாளங்காணல், தொழில் முனைவோருக்கான மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள், நிதி உதவி ஆதரவு, தொழில்முனைவோருக்கான பயனுள்ள தகவல் தொடர்புகள் யுக்திகள், உலகளாவிய பொருளாதாரத்தில் தொழில்முனைவோரும் ஜிஎஸ்டி உள்ளிட்ட தலைப்புகளில் உரையாற்றினர். தொடர்ந்து இரண்டு தொழில் நிறுவனங்களுக்கு மாணவர்கள் அளித்து செல்லப்பட்டு அங்கே செய்முறை விளக்கங்கள் மூலம் அவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

ஓரியண்டல் வங்கி ஆஃப் காமர்ஸின் பொதுமேலாளர் தங்கபாண்டி, கே.பி.எம் பிளாஸ்டிக் ரப்பர் கோ வின் தலைமை நிர்வாகி கே.பி.எம் முத்துக்குமரன், தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டு கழகத்தின் கிளை மேலாளர் எஸ்.பேபி ஆகியோர் இம்மூன்று நாள் முகாமில் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவித்தனர். கல்லூரியின் அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.