உதகையில் புதிய திட்டப்பணிகள் தொடங்கபட்டது

உதகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.616.12 இலட்சம் மதிப்பீட்டிலான 17 புதிய கட்டிடங்கள் மற்றும் சாலைகள் திறந்து வைத்து, ரூ.2043.775 இலட்சம் மதிப்பீட்டிலான 17 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் தொட்டபெட்டா சந்திப்பு முதல் தொட்டபெட்டா காட்சிமுனை வரையில் சாலை, பல்வேறு திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட 2 ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடங்கள், பல்நோக்க கட்டிடம் மற்றும் கோழிப்பண்ணை கட்டிடம் மற்றும் பேரூராட்சி சார்பில் பொக்காபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தரைமட்ட நீர்தேக்கத் தொட்டி, சேலக்கல் பகுதியில் கட்டப்பட்டுள்ள சமுதாய கூடம், கேத்தி வேலி வியூ பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலைகள், தோட்டக்கலைத்துறை சார்பில் தும்மனட்டி அரசு தோட்டக்கலை பண்ணை அலுவலகக்கட்டிடம், ரோஜா பூங்கா மற்றும் சிம்ஸ் பூங்காவில் அலுவலகக் கட்டிடங்கள், பொதுப்பணித்துறையின் சார்பில் முதிரக்கொல்லி, முள்ளன்வயல், எருமாடு, மசினகுடி ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 5 சுகாதார நிலையங்கள் ஆகியவை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும் உதகை நகராட்சியில், கோடப்பமந்து கால்வாயில் பாதாள சாக்கடை சீரமைக்கும் பணி, பேரூராட்சி சார்பில் தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட கரக்கப்பள்ளி முதல் வாட்ச்கொல்லி வரை, கோத்தகிரி பேரூராட்சிக்குட்பட்ட ஸ்பிரிங் காட்டேஜ், ஒரசோலை மற்றும் டாக்டர் வாட்ஸ் சாலை வரையில் சாலை பணிகள், கோத்தகிரி மற்றும் ஜெகதளா பேரூராட்சிகளில் கட்டப்பட உள்ள தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள், 11 பேரூராட்சிகளில் 112 குடிநீர் திட்ட பணிகள், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 35 ஊராட்சி ஒன்றியங்களிலும் 86 குடிநீர் திட்ட பணிகள், பொதுப்பணித்துறையின் சார்பில் கட்டப்படவுள்ள உதகை வட்டாட்சியர் அலுவலக கட்டிடம், பொது சுகாதாரத்துறைக்கு துணை சுகாதார நிலையங்கள், செவிலியர் குடியிருப்பு, சுகாதார மேம்பாட்டு மைய கட்டிடங்கள், மருத்துவ அலுவலர் குடியிருப்பு மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என பல்வேறு கட்டிடம் உள்ளிட்ட பணிகள், குடிசை மாற்று வாரியம் சார்பில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மசினகுடி பகுதியில் கட்டப்படவுள்ள 144 குடியிருப்புகள் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், குன்னூர் சட்ட மன்ற உறுப்பினர் சாந்தி (அ) ராமு, காவல்துறை துணைத்தலைவர் (பொது) கார்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, மாவட்ட கல்வி அலுவலர் நசாருதீன், அரசுத்துறை அலுவலர்கள், சுய உதவிக்குழுவினர், பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.