முதலாளியாய் மாறு! முன்னிலையில் இரு!

ஸ்டடி வேர்ல்டு பட்டமளிப்பு விழாவில் பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே பேச்சு

“பொறியியல் படிக்கும் மாணவர்கள் சுயமாக உழைத்து முதலாளியாய் உருவாக வேண்டும். அதன்மூலம் சமுதாயத்தில் முன்னேற்றத்தைக் காண வேண் டும்’’ என கோவையை அடுத்த மதுக்கரை பகுதி பாலத்துறையில் உள்ள ஸ்டடி வேர்ல்டு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நான்காம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே பேசினார்.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் குமார் வரவேற்புரை வழங்கினார். ஸ்டடி வேர்ல்டு குழுமத் தலைவரும், நிர்வாக அதிகாரியுமான முனைவர் வித்யா வினோத் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினர் ரங்கராஜ் பாண்டே அவர்கள் பேசியதாவது, ‘‘ஒரு குருவின் மதிப்பு என்பது அவருக்கு வாய்த்த மாணவர்களின் திறமையால்தான் வெளிப்படும். நீங்கள் சமுதாயத்தில் இனி எவ்வாறு நடந்துகொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான் இந்தக் கல்லூரிக்கும் உங்கள் பெற்றோருக்கும் பெருமை.

தற்போது நீங்கள் படித்த பட்டம் இனி உங்கள் பெயருக்குப் பின்னால் சேர்ந்துவிடும். ஆனால் அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்பதில் தற்போது உங்களுக்கு தெளிவு வேண்டும். உங்களது தற்போதைய வயதில் பல சாதனையாளர்கள் உருவாகிவிட்டனர். உங்களைவிட வயதில் குறைந்தவர்கள்கூட பல சாதனைகளைச் செய்து வருகின்றனர், செய்துவிட்டனர். சச்சின் தெண்டுல்கர் தனது 16 வயதில் உலக சாதனைகளைப் படைக்க ஆரம்பித்து 40 வயதில் ஓய்வுபெற்றுவிட்டார். நீங்கள் அவர்போன்ற பல சாதனையாளர்கள் குறித்து அறிந்துகொள்வதுடன், உங்களது எதிர்காலம் குறித்த தெளிவான திட்டங்களுடன் பல சாதனைகளை செய்ய தயாராக வேண்டும். எனவே இனிவரும் மூன்று ஆண்டுகள் என்ன செய்வது என்ற திட்டத்துடன் உங்கள் எதிர்காலத்திற்காக நீங்கள்தான் கடுமையாக உழைக்க வேண்டும். அதற்கு சாதிக்க வேண்டும் என்ற வெறி உங்கள் இதயத்தில் வேண்டும்.

வாழ்க்கையில் 25 வயதிற்குள் நீங்கள் ஒரு நிலைக்கு வந்துவிட வேண்டும். அதற்குமேலும் முன்னேறலாம். ஆனால் அது சிரமமாக இருக்கும். உங்களை நம்பியிருக்கும் வீட்டிற்கும் நாட்டிற்கும் உங்களின் சேவையை தக்க தருணத்தில் தர வேண்டும். அதற்கு இப்போதே உங்கள் எதிர்காலத் திட்டத்தை வகுத்துக்கொள்ளுங்கள்.

அறிவுக்களஞ்சியமான கோவையில் பல சாதனையாளர்கள் பிறந்துள்ளனர். இந்த மண்ணின் பெருமையை நீங்கள் காப்பாற்ற வேண்டும். உங்களின் அடுத்த தலைமுறைக்கு நீங்கள் ஒரு படிக்கல்லாக இருக்க வேண்டும்.

உலக அளவில் வரப்பிரசாதம் என அழைக்கப்படும் மொபைல், சமூகவலைத்தளங்கள், வாட்ஸ்அப், அரட்டை உள்ளிட்டவற்றை தெரிந்து வைத்திருங்கள். ஆனால் அதிலேயே மூழ்கிப் போய்விடாதீர்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போது இவை சாபக்கேடாக மாறிவருகிறது. நான் ஒரு ஊடக வியலாளன் என்றாலும் இதை உரக்கச்சொல்வேன். இன்றைய தேதியில் நமது ஒட்டுமொத்த நேரத்தையும் உழைப்பையும் மொபைல், வலைத்தளங்களில் கொட்டுகிறோம். இதுபோன்ற அடிமைத்தனம் அதிகமாகி வருகிறது. தேவையானதை எடுத்துக்கொண்டு தேவையற்றவைகளை துறந்து விடுங்கள். உங்கள் வாழ்க்கையை இணையதளத்தில் தேடாதீர்கள். எப்போதும் கிடைக்காது. பையன்கள் என்றில்லை, பெண்களும் இதில் மூழ்கிக்கிடக்கிறார்கள்.

கல்லூரிப் பருவத்தில் ஆண், பெண் இருபாலருக்கு இடையேயான ஈர்ப்பு என்பது தவிர்க்க முடியாதது. ஈர்ப்பு இருக்க வேண்டியதுதான். தவறில்லை. ஆனால் அது ஒரு கட்டுக்குள் இருக்க

வேண்டும். சரியான நேரத்தில், சரியானவரிடம் ஈர்ப்பு இருக்க வேண்டும். சென்னை போன்ற பெருநகரங்களில் குழுவாக வௌ¢ளிக்கிழமை பஃப், மால் செல்லும் இளைஞர்கள், இளம்பெண்கள் ஞாயிற்றுக்கிழமைதான் வீடு திரும்புகின்றனர். இது தேவைதானா என்பதை சிந்திக்க வேண்டும். நீர்வீழ்ச்சியில் குளித்தால் நன்றாகத்தான் இருக்கும். அதற்காக 24 மணிநேரமும் அங்கே இருக்க முடியாது. அதுபோல்தான் இங்கெல்லாம் போனோம், வந்தோம் என்று திரும்பி வந்துவிட வேண்டும். ஏனெனில் உங்களின் தற்போதைய வயது போனால் திரும்பவும் வராது. தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னேற்றம் பெற்றுவரும் கோவை, மதுரை ஆகிய நகரங்கள் தற்போது மொபைல்களில் மூழ்கிக்கிடக்கிறது. இந்நிலை மாற வேண்டும். இப்போது உங்கள் வாழ்க்கையைக் குறித்து சரியான முடிவு எடுக்காவிட்டால், பின்னாளில் நீங்கள் வருத்தப்பட வேண்டிவரும்.

எனது 10, 11 ஆவது வகுப்பு படிக்கும்போது நான் என்னவாக வேண்டும் என்பதை முடிவெடுத்தேன். அப்போது எனக்கு பத்திரிகைத்துறை பிடித்தது. அதனால் கையெழுத்து வாரப்பத்திரிகை நடத்தினேன். அதுதான் என்னை இன்று இந்தநிலையில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. எனவே, உங்களுக்கு என்ன தெரியும்? என்ன வேண்டும்? என்ன பிடித்திருக்கிறது? என்பதை யோசித்து தீர்மானம் எடுங்கள். நீங்கள் தேர்ந்தெடுத்த பாதையில் தொடர்ந்து செல்ல முதலில் உங்கள் பெற்றோரை சமாதானப்படுத்துங்கள். உங்கள்மீது நம்பிக்கை கொள்ள வையுங்கள். அது மிகவும் அவசியம்.

வளாகத்தேர்வில் தேர்வு பெற்றவர்களுக்கு வேலை உத்தரவாதம். தேர்வு பெறாதவர்களுக்கு தொழில் உத்தரவாதம். நீங்கள் வேலை செய்தால் உங்களுக்கு சம்பளம் கிடைக்கும். தொழில் செய்தால் ஊருக்கே நீங்கள் வேலை கொடுக்கலாம். நாம் முதலாளியாய் இருப்பதுபோல் ஒரு சந்தோஷம் இருக்கவே முடியாது. தொழில் செய்து, அதில் வரும் இலாபத்தில் கார், வீடு வாங்கி உங்கள் பெற்றோரை மகிழ்ச்சிப்படுத்துங்கள். அந்த சந்தோஷத்தை உணர்ந்தால்தான் புரியும். எனவே ஒருமுறைக்கு நான்கு முறை ஆலோசித்து தொழில் தொடங்குங்கள். நம்பிக்கையோடு கடுமையாக உழையுங்கள். முன்னேற்றம் காணுங்கள்’’ என்றார்.

மேலும், ஸ்டடி வேர்ல்டு குழுமத்தின் முதன்மை இயக்க அலுவலரான ரேமி வான்டெர் ஸ்பெக், இக்குழுமத்தின் முக்கிய பதவிகளை வகிக்கும் சந்திரபானு நாயர், அமர்த்தியா பானர்ஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வடிவமைப்பு மற்றும் ஊடகக் கல்லூரியின் வணிக வளர்ச்சி அலுவலர் நாயுடு நன்றி வழங்கினார்.