கல்வெட்டியல் பயிலரங்கம்

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி தமிழ் துறையும், பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரிக் கல்வெட்டியல் பட்டயப் படிப்பு துறையும் இணைந்து நடத்திய ஐந்து நாட்கள் கல்வெட்டியல் பயிலரங்கின் தொடக்க விழா கொங்குநாடு கல்லூரி கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பேரூராதீனம் குருமகாசந்திதானங்கள் சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் பங்கேற்று ஆசியுரை வழங்கினார். அவர்தம் உரையில், “கல்வெட்டியல் பயிலரங்கம் காலத்தின் தேவை என்றும் கல்வெட்டுக்கள் நமது சொத்து என்றும் குறிப்பிட்டார். இந்தியாவில் தமிழகத்திலேயே அதிகமான கல்வெட்டுகள் கிடைத்துள்ளதாகவும் அவற்றில் 10 விழுக்காடு கல்வெட்டுகள் மட்டுமே நூல் வடிவில் வெளிவந்து இருப்பதாகவும் இன்னும் ஆவணப்படுத்த வேண்டிய கல்வெட்டுகள் ஏராளம் இருப்பதாகவும் தெரிவித்தார். கொங்கு நாட்டின் மேற்கு எல்லையில் உள்ள முட்டம் எனும் ஊரில் கிடைத்துள்ள கல்வெட்டுகளின் வழி பழங்கால வணிகத்தை தெரிந்துகொள்ள முடிகிறது என்றும் அரச்சலூரில் கிடைத்துள்ள கல்வெட்டுகளில் வாயிலாக தமிழிசையின் பழமையை உணரமுடிகிறது” என்றும் கூறினார்.

இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் லட்சுமணசாமி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரி கல்வெட்டியல் பட்டப்படிப்பு துறையின் பேராசிரியரும் தமிழ் துறை பேராசிரியருமான ரவி அவர்கள் பயிலரங்க நோக்கவுரையாற்றினார். முன்னதாக தமிழ்த் துறை தலைவர் முருகேசன் அவர்கள் வரவேற்புரை நல்கினார். விழாவின் நிறைவில் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் மணிமேகலை அவர்கள் நன்றி நவின்றார்.

தொடக்க விழாவை தொடர்ந்து பயிலரங்க அமர்வுகள் நடைபெற்றன. இப்பயிலரங்கில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து தமிழ் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர் திரளாக பங்கேற்று பயன்பெற்றனர்.