மக்கள் சேவை மையம் நடத்தும் குறும்படப் போட்டி

மத்திய அரசின் திட்டங்கள் – செயல்பாடுகளை மாணவர்கள் அறிந்துகொள்ள குறும்படப் போட்டி நல்ல ஒரு வாய்ப்பாக அமையும். பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன்.

வரும் செப்டம்பர் மாதம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அதனை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான குறும்படப் போட்டிகளை கோவை  மக்கள் சேவை மையம் நடத்த உள்ளது. இது தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பு காந்திபுரம் பகுதியில் மக்கள் சேவை மையத்தில் நடைபெற்றது. தமிழக பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் கூறுகையில் தமிழகத்தில் இருந்து பல்வேறு கல்லூரிகள் இந்த பங்கேற்க உள்ளதாகத் தெரிவித்தார். 250க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் எடுக்கும் குறும்படங்கள் பெறப்பட்டு முதல் சுற்றுக்குப் பின், தேர்வுக்குப் பின் தகுதியான படங்களை திரைப்பட இயக்குநர் கஸ்தூரி ராஜா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, நடிகையும் இயக்குநருமான மதுவந்தி அருண் ஆகியோர் தேர்வு செய்வார்கள் எனத் தெரிவித்தார். பாரதப் பிரதமர் மோடி அவர்களின் நலத்திட்டங்கள் வாயிலாக மக்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் என்பதை மையக் கருத்தாகக் கொண்டு குறும்படங்கள் எடுக்கபட வேண்டும் எனக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு சுற்றறிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது எனத் தெரிவித்தார்.

குறும்படங்கள் இரண்டு நிமிடம் முதல் அதிகபட்சமாக ஐந்து நிமிடங்கள் வரை இருக்க வேண்டும் எனவும், ஒரு அணியில் மூன்று மாணவர்கள் முதல் இருபது பேர் வரை பங்கு கொள்ளலாம் என்றார்.மேலும், வரும் 10ஆம் தேதிக்குள் மக்கள் சேவை மையத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றவர், மாணவர்களின் படைப்புத் திறனை வெளிக் கொண்டு வரவும் மத்திய அரசின் செயல்பாடுகள் அறிந்துகொள்ள இது வாய்ப்பாக அமையும் எனவும் தெரிவித்தார்.இதில் சிறந்த குறும்படத்திற்கு முதல் பரிசாக 50,000, இரண்டாம் பரிசு 25,000,மூன்றாம் பரிசு 10,000 என வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் சிறப்புத் தேர்வு அணிக்கு 5,000, சிறந்த இயக்கதிற்கு தனி நபருக்கு 5,000, சிறந்த ஒளிப்பதிவிற்கு 5,000, சிறந்த திரைக்கதைக்கு, 5,000, சிறந்த நடிகருக்கு 5,000 என மொத்தம் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் பரிசுகளும், போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றார். பரிசளிப்பு விழா வரும் 27ஆம் தேதி சிங்காநல்லூர் பகுதியில் உள்ள எஸ்.எஸ்.வி.எம் பள்ளிக் கலை அரங்கில் நடைபெறும் என்றார்.

மேலும் இது குறித்த விவரங்கள் அறிந்து கொள்ள 86755-55666 தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.