இனி தொலைக்காட்சியிலும் பாடம் படிக்கலாம்

தமிழக மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்த கல்வி தொலைக்காட்சியை தொடங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான பணிகள் ஒரு ஆண்டாக நடந்து வந்தது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் 10-வது தளத்தில் கல்வி தொலைக்காட்சி அலுவலகம், ஸ்டூடியோ அமைக்கப்பட்டுள்ளது. சில மாதங்களாக தொலைக்காட்சியின் ஒளிபரப்பு சோதனை ஓட்டம் நடந்தது. அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் கல்வி தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு இன்று தொடங்கியது.

அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கல்வி தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், கல்வி தொலைக்காட்சி அரசு கேபிளில் 200வது அலைவரிசையில் ஒளிபரப்பாகும். மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. கல்வி தொலைக்காட்சி உருவாக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி.

வீட்டில் டிவி பார்க்கும் மாணவர்கள் சரியாக படிப்பது இல்லை என்ற  நிலை இனி மாறும். மாணவர்களின் கல்விக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அரசு திட்டங்களால் மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்து வருகிறது என கூறினார்.