உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் – கூகுள் எச்சரிக்கை

என்ன வேலைக்காக பணிக்கு எடுக்கப்பட்டீர்களோ, அந்த வேலையை மட்டும் பாருங்கள் என கூகுள் நிறுவனம் தனது பணியாளருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் தரவுகளை வழங்குதலில் டிரம்புக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக முன்னாள் ஊழியர் கூறியது, பாதுகாப்புத்துறை திட்டங்களை செயல்படுத்துதலில் ஊழியர்களின் வெளிப்படையான போராட்டம், உயர் மட்ட அதிகாரிகள் மீதான பாலியல் புகார்களை கையாண்ட விதத்தில் ஊழியர்களின் அதிருப்தி என, ஊழியர்களை மையப்படுத்தி பல சர்ச்சைகளில் சிக்கியது கூகுள் நிறுவனம்.

பணி நேரத்தில் 20 சதவீதத்தை தனிப்பட்ட வேலைகளில் ஈடுபடவும் புதிய யோசனைகளை வழங்கவும் கூகுள் வழிவகுக்கும் சூழலில் பணிக்குத் தொடர்பில்லாத அரசியல், செய்திகள் குறித்து பேசி நேரத்தை வீணடிக்காமல் தலை குனிந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை ஆற்றுமாறு ஒரு லட்சம் பணியாளர்களுக்கு அனுப்பிய மெமோவில் கூகுள் கூறியுள்ளது.

மேலும், கூகுள் பணியாளர்களுக்கான ஆன்லைன் மன்றங்களை அதிகமாகவோ, தவறாகவோ பயன்படுத்தி கருத்து தெரிவித்தாலோ, கசியவிட்டாலோ அவர்கள் மீது பதவி நீக்கம் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.