அரசு பேருந்து ஓட்டுனர் பணியில் பழங்குடி இன பெண்கள் !

நாட்டில் பெண்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர். தற்போது, மகாராஷ்டிர மாநில போக்குவரத்து கழகத்தின் சார்பில், நாட்டில் முதன் முறையாக அரசு பேருந்து ஓட்டுனர் பணியில் பழங்குடி இன பெண்கள் நியமிக்கப்படவுள்ளனர். மாநில அரசாங்கத்தின் இந்த புதிய முயற்சியை முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் துவக்கி வைத்தார்.

இது குறித்து பேசிய மகாராஷ்டிர மாநில போக்குவரத்து துறை அமைச்சர் திவாகர் ரவ்டே, “நமது நாட்டில் முதல் முறையாக இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண் ஓட்டுனர்களின் பாதுகாப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

பிரதீபா பாட்டீல் பேசிய போது, “பெண் ஓட்டுனர்களை போக்குவரத்து நிர்வாகம் அவர்களின் இருப்பிடங்களில் இருந்து வெகு தூரத்திற்கு பணிக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும். இரவு நேரங்களில் வெளியிடங்களில் தங்க நேர்ந்தால் அவர்களுக்கு பாதுகாப்பான இடம் அளிக்கப்பட வேண்டும்” என்றார்.

மேலும், பழங்குடி இனத்தவர்கள் நமது கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வகிப்பதாகவும், பெண்களுக்கு அளிக்கப்படும் கல்வி நமது நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒட்டுனர் பணிக்காக முதற்கட்டமாக பழங்குடி இனத்தைச் சேர்ந்த 163 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கனரக வாகனங்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு, பின்னர் ஓட்டுனர்களாக பணியமர்த்தப்படுவார்கள். இவர்கள் அனைவரும் மகாராஷ்டிராவில் பழங்குடியினர் அதிகம் வாழும் பகுதிகளான கட்சிரோலி, வார்தா, பந்தாரா மற்றும் கோண்டியா ஆகிய மாவட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அப்பெண்களில் ஒருவரான விஜய ராஜேஷ்வரி கூறுகையில், தான் ஓட்டுனர் பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். மேலும், பெண்கள் பல துறைகளில் முன்னேறி வருவதாகவும் இந்த துறையிலும் தங்கள் முழு திறனை வெளிப்படுத்துவார்கள் என்றும் தெரிவித்தார்.