“அவலாஞ்சியில் பெய்தது மழை அல்ல… மேக வெடிப்பு!”

கடந்த சில மாதங்களாக நீலகிரி முழுக்க கடும் வறட்சி. நீர்நிலைகளின் நீர்மட்டம் அதலபாதாளத்துக்குச் சென்றது. தென்மேற்குப் பருவமழையும் போக்குக்காட்டியது.

இந்த நிலையில்தான், கடந்த ஒரு வார காலமாக நீலகிரி மாவட்டத்தில் பெருமழை கொட்டித்தீர்த்தது. அதிலும் அவலாஞ்சியில் மட்டும் ஆகஸ்ட் 8-ம் தேதி 820 மி.மீ, 9-ம் தேதி 911 மி.மீ மழை பதிவானது, ஆய்வாளர்களையே அதிரவைத்தது! காரணம், கடந்த ஆண்டுகளில் இப்படியொரு பெருமழையை நீலகிரி சந்தித்ததில்லை என்பதுதான்.

ஊட்டி அவலாஞ்சி சாலையில் முத்தொரை பாலாடா பகுதியில் உள்ள சிறு ஓடையில் இதுவரை மக்கள் கண்டிராத அளவுக்கு காட்டாறுபோல மரம், செடி, கொடிகளை அடித்துக்கொண்டு வெள்ளநீர் ஓடியது. செல்லும் வழியில் இருந்த விளைநிலங்களையும் வீடுகளையும் அடித்துச் சென்றது.

ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டும் மண்சரிவு ஏற்பட்டும் ஆறு பேர் பலியாகினர். வீடுகளையும் உடைமைகளையும் இழந்து, 155 முகாம்களில் 2,500 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவலாஞ்சி, காட்டுக்குப்பைப் பகுதிகளில் சிக்கிக்கொண்டவர்களை, ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர்.

தொடர்ந்து ஏழு நாள்கள் அவலாஞ்சி பகுதியில் பெய்த மழையை நேரில் பார்த்த மின்வாரிய ஊழியர் ஒருவர், ‘‘சில மீட்டர் தூரத்தில் இருக்கும் பொருளைக்கூட பார்க்க முடியாத அளவுக்கு, தாரை தாரையாக மழை ஊற்றியது. முதல் நாள் வறண்டு கிடந்த அணைகள் அனைத்தும், ஒரே நாளில் முழுக்கொள்ளளவை எட்டி அணைகளைத் திறக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எங்கு பார்த்தாலும் புதிய ஊற்றுகள், காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இப்படி ஒரு மழையைப் பார்ப்பதே பயங்கர அனுபவம். அவலாஞ்சியில் 15 மின் ஊழியர் குடும்பங்கள் இருந்தோம். வெளி உலக தொடர்பில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில், ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கப்பட்டோம்’’ என்றார்.

இதுகுறித்து சூழலியல் எழுத்தாளரும் ஆய்வாளருமான வசந்த் பாஸ்கோ, ‘‘அதிகளவு கார்பன் வெளியீடு, புவி வெப்பமயமாதல் போன்ற பல காரணிகள், பருவநிலையில் பெரும்மாற்றத்தை ஏற்படுத்தும். இதனால், மழைப்பொழிவு இல்லாமல் அதிக வறட்சியையோ, ஒரே சமயத்தில் அதிக மழை பெய்து பாதிப்பையோ ஏற்படுத்தும். அவலாஞ்சி பகுதியில் பெய்த இந்தப் பெருமழையும் இதுபோன்ற ஒரு நிகழ்வுதான்’’ என்று எச்சரிக்கிறார்.

மத்திய நீர் மற்றும் மண்வள ஆய்வு மையத் தலைவர் கண்ணன், ‘‘ஊட்டியில் பெய்தது மழை அல்ல, மேக வெடிப்பு. புவி வெப்பமயமாதல் காரணமாக, நீர் சுமந்த மேகங்கள் நீரைத் தாங்க முடியாமல் மொத்த பாரத்தையும் ஒரே இடத்தில் கொட்டும். அப்படி ஒரு சம்பவம்தான் அவலாஞ்சி பகுதியில் ஏற்பட்டுள்ளது. அவலாஞ்சியில் நிகழ்ந்த இந்த மேக வெடிப்பு ஊட்டியில் ஏற்பட்டிருந்தால், ஒரு நகரமே மூழ்கடிக்கப்பட்டு நினைத்துப்பார்க்க முடியாத பேரழிவை ஏற்படுத்தியிருக்கும்’’ என்றார்.

அவலாஞ்சியில் பெய்தது மழை அல்ல… மேக வெடிப்பு!”

மத்திய நீர் மற்றும் மண்வள ஆய்வு மைய மூத்த ஆய்வாளர் மணிவண்ணன், ‘‘எங்களிடம் இருக்கும் மழைத் தரவுகளை ஒப்பிட்டுப்பார்க்கும்போது தென்னிந்தியாவில் இப்படி ஒரு மழை இதுவரை பதிவானதேயில்லை. நூறு ஆண்டுகளுக்கு முன்பு இப்படியொரு பெருமழை பதிவாகியிருக்கக்கூடும். 24 மணி நேரத்தில் 911 மி.மீ மழை என்பது சாதாரண மழை அல்ல. தொடர் மழைக்காலங்களில் இதே மழை பெய்திருந்தால், இன்னும் மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும்.

நீலகிரியைப் பொறுத்தவரை, எவ்வளவு மழை பெய்தாலும் வடிந்து செல்ல இயற்கையில் அமைப்பு உள்ளது. ஆனால், ஆக்கிரமிப்புகளால் இந்த அமைப்புகள் சீர்கெட்டுள்ளன. நீர்வழித் தடங்களில் எங்கெல்லாம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதோ அந்தப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்துவரும் பெரிய ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, தற்போது சிறிய வாய்க்கால்போல் உள்ளன. ஓடைகளையொட்டி 25 மீட்டர் தூரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இப்படிச் செய்தால் மட்டுமே சேதங்களைத் தடுக்க முடியும்’’ என்றார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*