வளர்ந்து வரும் இளைய தலைமுறைக்கு தமிழ் இலக்கியத்தின் மேல் ஆர்வம் வேண்டும்

தமிழருவி கோவை கோகுலன்

டாக்டர்.ஆர்.வி கலை அறிவியல் கல்லூரியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை வசந்தவாசல் கவி மன்றத்தின் சார்பில் கவியரங்கம் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் வே.சுகுணா அவர்கள் அனைவரையும் வரவேற்றார். கோவை வசந்தவாசல் கவி மன்றத்தின் செயலர் தமிழருவி கோவை கோகுலன் அவர்கள் தலைமை ஏற்று வாழ்த்துரை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில்,”வளர்ந்து வரும் இளைய தலைமுறைக்கு தமிழ் இலக்கியத்தின் மேல் ஆர்வம் வேண்டும். குறிப்பாக கவிதைப் படைப்பில் ஆர்வம் அவசியம். நல்ல ஒரு சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும். புத்தகத்தை வாசிக்கின்ற பழக்கம்  இருந்தால் தமிழ் அறிவை வளர்த்துக் கொள்ளலாம். பல்வேறு கலை இலக்கிய போட்டிகளில் பங்கேற்று தனித் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்”என்று மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் கோவை வசந்த வாசல் கவி மன்றத்தின் துணைத் தலைவர் வழக்கறிஞர் இரா.சண்முகம், தமிழ் சிற்பி நம்பிக்கை நாகராஜன், தமிழ் சிற்பி பிரேமா, தமிழ் சிற்பி கோவை அன்பு, தமிழ் சுடர்மணி ரூஃபஸ் வீ.அந்தோணி, கவிஞர் மைதிலி யோகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் கவிதைகளை வாசித்தனர். இதனை தொடர்ந்து கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கள் கவிதைகளைப் படைத்தளித்தனர். நிறைவாக கலந்து கொண்ட மாணவ, மாணவியருக்கு பாராட்டுச் சான்றிதழும், பரிசும் வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்த்துறைத் தலைவர் இரா.ஜெயந்தி மற்றும் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.