ஜாதிவாரியாக கயிறுகள் கட்டச் சொல்லும் பள்ளிகள் மீது நடவடிக்கை – பள்ளிக்கல்வித்துறை அதிரடி

சென்னை: தமிழ்நாட்டில் மாணவர்கள் ஜாதிவாரியாக கயிறுகள் கட்டச் சொல்லும் பள்ளிகளை கண்டறிந்து, அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 2018 தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரிகள் சார்பில் பள்ளிக்கல்வி துறைக்கு கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டிலுள்ள ஒருசில பள்ளிகளில் மாணவர்கள் விதவிதமான நிறங்களில் கையில் கயிறுகள் கட்டி உள்ளனர். குறிப்பாக அவை மஞ்சள், சிவப்பு, பச்சை மற்றும் காவி ஆகிய நிறங்களில் கயிறுகள் கட்டியிருக்கின்றனர். இந்தக் கயிறுகள் மூலம் மாணவர்களின் ஜாதிகள் கண்டுபிடிக்கப்படுகிறது என்று தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரிகள் சார்பில் பள்ளிக்கல்வி துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறுவதாவது; தமிழ்நாட்டில் மாணவர்களை ஜாதிவாரியாக கயிறுகள் கட்டச் சொல்லும் பள்ளிகளை கண்டறிந்து, அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். பள்ளிகளில் சாதிப்பிரிவினைகளை ஏற்படுத்தும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி மாணவர்கள் கைகளில் சாதிய அடையாளங்களை குறிக்கும் கயிறுகளை கட்ட அனுமதிக்க கூடாது. மேலும் இதுபோன்று நிகழ்வுகள் இனிமேல் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.