ஒரூ தொழில்… பல குடும்பம்…

இரண்டாம் முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய அரசின் ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்திருக்கும் உங்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த முறை முன்னிலும் கூடுதலான நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்று பொறுப்பேற்றிருப்பது கூடுதல் மகிழ்ச்சி.

சென்ற தடவை ஆட்சிக்கு வந்தபோது மக்கள் ஆதரவு, எதிர்ப்பு என்று எதுவாக இருந்தபோதும் சரியோ, தவறோ ஜிஎஸ்டி போன்ற திட்டங்களைக¢ கொண்டு வருவதில் நீங்கள் காட்டிய உறுதியைப் பாராட்டித்தான் ஆக வேண்டும். அதுபோக இந்தியாவுக்கு உலக அரங்கில் கிடைத்த மதிப்பும், இந்திய தொழில் துறையில் ஏற்பட்ட மாறுதல்களும் குறிப்பிடத்தக்கவை.

இந்த முறை ஆட்சிக்கு வந்து சில மாதங்களே ஆன நிலையில் அதிரடியாக பல முடிவுகள் எடுக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சட்ட வடிவம் பெறுவதை மக்கள் அனைவரும் அறிவர். குறிப்பாக அது முத்தலாக் சட்டமோ, தேசிய பாதுகாப்பு சட்டம் குறித்த மசோதாவோ, எல்லாவற்றுக்கும் மேலாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை அதிரடியாக இரண்டாகப் பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றி அதை நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் நிறைவேற்றியதைப்  பார்த்து உங்களது அரசை ஒரு இயங்குகிற அரசு என்று பாராட்டுகிறார்கள்.

இப்போது நாங்கள் வைக்கப் போகும் வேண்டுகோள் மேலே சொன்ன எதையும் பற்றியதல்ல. அன்றாடம் வாழ்க்கையை நடத்தப்  பாடுபடும் ஒரு சாதாரண இந்தியனின் வேண்டுகோள்.

சென்றமுறை நீங்கள் ஆட்சிப்பொறுப்பில் இருந்தபோது ‘ஸ்டார்ட் அப் இந்தியா’, ‘மேக் இன் இந்தியா’ என்று பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வரத்தொடங்கி இருந்தன. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஆகியவை பல வகையிலும் பலரையும் பாதித்தன. ஆனால் தற்போது நிலவி வரும் தொழில் மந்த நிலை சாதாரண இந்தியனை நேரடியாக பாதித்திருக்கிறது. அதிலும், கோவை போன்ற சிறு தொழில்களைக் கொண்ட நகரங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஒரு மந்த நிலையை நன்கு உணர முடிகிறது.

பல வகையிலும் அந்த சிறு தொழில்களுக்கு உங்கள் ஆதரவு தேவைப்படுகிறது. தொழில்துறையில் ஏற்பட்டுவரும் நவீன மாற்றங்கள் இல்லாவிட்டால் ஏற்கெனவே தொழிலில்  உள்ளவர்கள்கூட இயங்க முடியாது என்ற நிலையில் அதற்கான தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான நிதி வசதி இல்லை.

வேறு வேலைவாய்ப்பு வழங்கும் துறைகளான ரியல் எஸ்டேட்,  இரு,  நான்கு சக்கர வாகன உற்பத்தித் தொழில் போன்றவற்றின் நிலையும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. பலரின் வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளன. எதிர்காலத்தில் இந்த பெட்ரோலில் ஓடும் வாகனங்களே இருக்காது என்று ஒரு செய்தி இருப்பதால் சாதாரண ஒர்க்ஷாப் தொடங்கி, டீலர்ஷிப் வைத்திருப்பவர்கள் வரை ஒரு சுணக்கம் தெரிகிறது. இதுகுறித்து உண்மையான நிலையை தெளிவுபடுத்த வேண்டியது அரசின் கடமை.

அதுபோக, முறைசாரா தொழிலாளர்கள் அதிகமாக பணிபுரியும் கட்டுமானத் தொழில் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் தொழில்கள் சுணங்கிப் போயிருப்பது கண்கூடாகத் தெரிகிறது. ஒவ்வொரு தொழிலாளியின் பின்னும் ஒரு குடும்பம் இருக்கிறது என்பது நீங்கள் அறியாததது அல்ல.

இது ஏதோ நாடு முழுவதும் உள்ள பிரச்னை, இவ்வளவு சதவீதம் ஜிடிபி வளர்ச்சி, ஏற்றத் தாழ்வு இருக்கும் என்று விட்டுவிட முடியது. இந்த ஆடி மாதத்தில் விவசாயிகள் ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்று நிலத்தில் இறங்கி இருப்பார்கள். அது நடக்கவில்லை. பருவமழை ஏமாற்றியதில் விவசாயிகள்தான் இந்த முறை ஆடிப்போய் இருக்கிறார்கள்.

சாதாரண குடும்பங்கள் ஆடித்  தள்ளுபடியில் தீபாவளிக்கு இப்போதே கிடைப்பதை அள்ளி வருவதுண்டு. இந்த முறை எங்கும் கூட்டம் இல்லை. தங்கத்தின் விலை போகிற போக்கைப் பார்த்தால் சந்திராயன் விண்கலத்தில் ஏறி சந்திரனுக்கே போய்விடும்போல இருக்கிறது.

ஒருபுறம் வேலை வாய்ப்புகளும், தொழில் வாய்ப்புகளும் குறைந்து வருகின்றன. இன்னொருபுறம் அவசியத் தேவைகளை ஈடுசெய்ய முடியாமல் மக்கள் தடுமாறுவதும் நடக்கிறது.

நாட்டில் பல்வேறு சிக்கல்களையும், பிரச்னைகளையும் கவனிக்க வேண்டிய நிலையும், பொறுப்பும் உங்களுக்கு உண்டு. ஆனாலும், எங்களுக்கும் சொல்வதற்கு உங்களை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்? கடந்த சில வாரங்களாக நாடாளுமன்றத்தில் பல அதிரடி நடவடிக்கைகளை செயலாக்கி வருவதுபோல, வேலைவாய்ப்பு அதிகரிப்பு, பணப்புழக்கம், தொழில் வளர்ச்சி, சிறு தொழில்களுக்கு ஆதரவு என்று சில அதிரடி நடவடிக்கைகளையும் சாதித்துக் காட்டுங்கள். நாடு வளம் பெறும்; மக்களும் உங்களை மனதார வாழ்த்துவார்கள்.