‘நேர்மறையான எண்ணமும், உழைப்பும் தோற்பதில்லை’

-முகமது ஜியாபுதின், கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி, ராணிப்பேட்டை 

கல்வியின் அடிப்படை நோக்கம், எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும். கல்வி, மனித ஆளுமையை செயல் வடிவமாக மாற்றுவதாகும். மேலும், உடல் வளர்ச்சி செயல்முறையின் மூலம் மனதை செறிவூட்டும் உணர்ச்சிக்கு அடிமை ஆகாமல் வெளிச்சத்தை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது.

கல்வி என்பது ஒரு வாழ்க்கை மற்றும் அதற்கான ஒரு தயாரிப்பு. அதை சரியான முறையில் பெற்றுக் கொள்ள வேண்டும். கல்வி, விடுதலைக்கு வழி வகுக்கிறது. மனதை மூடி மறைக்கும் அறியாமையிலிருந்து விடுவித்து, நமது முயற்சியை முடக்கும் மூடநம்பிக்கையில் இருந்து விடுதலை செய்கிறது. சத்தியத்தின் பார்வையை மறைக்கும் தவறான எண்ணங்களில் இருந்து கல்வி விடுதலை  வழங்குவதாக பழைய சமஸ்கிரத பழமொழி கூறுகிறது. இந்த உலகத்தை மாற்றக்கூடிய வலிமையான ஆயுதம் கல்வி என்று தென்னாப்பிரிக்கா விடுதலைக்காக தன் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்த நெல்சன் மண்டேலா கூறினார்.

தற்போது நமது இளைஞர்களில் பலர் பொறியியல், மருத்துவம் படித்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் கைநிறைய சம்பாதிக்கிறார்கள். அதேநேரம் அவர்களால் வாழ்க்கையின் சின்ன ஏமாற்றங்களைக் கூடத் தாங்க முடிவதில்லை. சவால்களை சந்திக்கும் மனநிலை இல்லாமல் எந்த வெற்றியும் நமக்கு நிரந்தரமாக இருக்காது என்று சோர்ந்துபோகின்றனர்.

உங்கள் கண்களைத் திறக்கும் ஒரு கதையைச் சொல்கிறேன், கதை அல்ல, உண்மையில் நடந்தது. தமிழ்நாட்டில் மிகவும் புத்திசாலியான ஒரு மாணவன். அறிவியலில் 100 மதிப்பெண் பெற்றான். சென்னை ஐ.ஐ.டி-யில் இடம் கிடைத்தது. அங்கும் நல்ல மதிப்பெண் பெற்று எம்.பி.ஏ. படிப்பதற்காக கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஸ்காலர்ஷிப்போடு இடம்கிடைத்தது. அமெரிக்கா சென்று படித்து முடித்ததும், அதிக சம்பளத்தோடு அங்கேயே வேலை கிடைத்தது. அடுத்து, நன்கு படித்த அழகான நம்மூர் பெண்ணை மணந்தார். 5 படுக்கை அறை உள்ள பெரிய வீடு, அமெரிக்காவிலேயே சொகுசு கார்கள் வாங்கி வெற்றிகரமாக வாழ்ந்து கொண்டிருந்தார். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவி மற்றும் குழந்தைகளை சுட்டுக் கொன்று தற்கொலை செய்து கொண்டார்.

எங்கே தவறு நிகழ்ந்தது என்று கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆஃப் கிளினிக்கல் சைக்காலஜி அவரது வாழ்க்கையே ஆராய்ந்தது. அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடியால் அந்த இளைஞர் வேலை இழந்தார். வேலை இல்லாமல் நீண்ட காலம் இருக்க வேண்டும் என்பதால், முன்பு வாங்கிய சம்பளத்தை பாதியாக குறைத்தும் அப்போது இருந்த நெருக்கடியில் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. வீட்டுக்கடன் கட்ட முடியாமல், கடைசியில் வீட்டை இழந்து விட்டார். குறைந்த பணத்துடன் சில மாதங்கள் வாழ்ந்த அவரும் அவரது படித்த மனைவியும் தற்கொலை முடிவெடுத்துவிட்டனர்.

வெற்றிக்காகத் திட்டமிடுவதற்கு கற்றுக்கொடுத்த கல்வி, தோல்விகளைக் கையாள அவருக்குப் பயிற்சி அளிக்கவில்லை என்பதையே இந்த சூழல் நமக்கு உணர்த்துகிறது. வெற்றிகரமான பழக்கம் என்றால் என்ன? உங்களிடம் வெற்றிகரமான பழக்கங்களை பேசுவதற்கு பலர் உள்ளனர். வெற்றியடைந்த எல்லாவற்றையும் இழக்கும் வாய்ப்பு வந்தாலும், அதைத் தாங்கிக்கொள்ளும் சக்தி நமக்கு வேண்டும். வெற்றியுடன் திகழ வேண்டும் என்று திட்டமிடும்போது தோல்விகளை எவ்வாறு கையாள்வது என்பதையும் கற்றுக் கொள்ளுங்கள். வாழ்க்கையை பற்றிய சரியான படிப்பினைகளை கற்றுக்கொள்ளத் தவறாதீர்கள். உயர்மட்ட அறிவியல் மற்றும் கணிதத்தை நீங்கள் கற்றுக்கொள்வது உங்கள் தேர்வுகளை எதிர்கொள்வதற்கு உதவும். வாழ்க்கையைப் பற்றிய சரியான புரிதல் இருந்தால் மட்டும்தான் வாழ்வின் ஒவ்வொரு பிரச்னையையும் நீங்கள் எதிர்கொள்ள முடியும். பணத்துக்காக எவ்வாறு வேலை செய்வது என்பதை கற்பதற்கு முன், பணம் எவ்வாறு வேலை செய்கிறது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

அதற்கு, முதலில் உங்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறது என்று கண்டுபிடியுங்கள். அந்த ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். பட்டம் என்பது பொருளாதார, சமூக நெருக்கடிகளில் இருந்து முன்னேறுவதற்கு உதவாது. அவ்வாறு ஒரு நெருக்கடி எப்போது, யாரைத் தாக்கும் என்பதும் தெரியாது. அவ்வாறு நெருக்கடிகள் நேரும்போது அவற்றிலிருந்து வெளியேறுவதற்கு நம்பிக்கை உள்ள இதயங்களையும் மனதையும் நீங்கள் பெற வேண்டும். வெற்றி பெறும்போது மகிழ்வது போலவே தோல்வியைத் தாங்கிக் கடக்கும் மன உறுதியும் அனைவருக்கும் இருக்க வேண்டும். இதுவே வெற்றிக்கான பழக்கங்கள்.

“தோல்விகள் என்று கருதப்படுபவை எல்லாம் தற்காலிக சரிவு” என்று யார் புரிந்து கொள்கிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெறுகிறார்கள். நேர்மறையான எண்ணமும் உழைப்பும் ஒருசேர வாய்க்கப் பெற்றவர்கள், வாழ்க்கை முழுவதும் தோற்பதில்லை. அந்த நல்ல வாழ்க்கை உங்கள் எல்லோருக்கும் கிடைக்க நான் வாழ்த்துகிறேன்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*