விதிமுறைகள் மீறி இயக்கப்படும் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சித் தலைவர் ராசாமணி எச்சரிக்கை

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு இயக்கப்பட வேண்டும். விதிமுறைகளை மீறும் பேருந்துகள் மீது மோட்டார் வாகன சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் விடுத்துள்ள செய்தி குறிப்பில்,

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிக அளவில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளிடம் இருந்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு பல குறைபாடுகள் வரப்பெறுகின்றன. அவை தொடர்பான உரிய நடவடிக்கை எடுத்திட போக்குவரத்து துறை அலுவலர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆகியோருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

ஆய்வின்போது, அனுமதிக்கப்படாத வழித்தடங்களில் இயக்குவது, வழித்தடத்தில் முழுமையாக இயக்காதது, கால அட்டவணையை பின்பற்றாதது, கூடுதல் நடத்துநரை அமர்த்துவது, அனுமதிக்கப்படாத இடத்தில் பேருந்துகளை நிறுத்துவது, அனுமதிக்கப்பட்ட இடத்தில் வாகனங்கள் நில்லாமல் செல்லுதல், கூடுதல் கட்டணம் வசூலிப்பது, வண்ண விளக்குகள் பொருத்துவது, அதிக வேகமாக இயக்குவது மற்றும் காற்று ஒலிப்பான் பொருத்தி இயக்குவது போன்ற குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.

மேற்கண்ட குறைபாடுகள் இன்றி போக்குவரத்து விதிகளுக்குட்பட்டு பேருந்துகளை இயக்க வேண்டும்.  மேலும் பொதுமக்களுக்கு எவ்வித சிரமங்கள் இன்றி பாதுகாப்பாக பேருந்துகளை இயக்கிட வேண்டும். மேலும், இதுபோன்ற புகார்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்திட  ஏதுவாக மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அலுவலர்களுடனான கூட்ட ஆய்வு மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.  மீண்டும் விதிமுறைகளுக்கு மாறாக இயக்கப்படும் பேருந்துகள் மீது 1988ஆம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்தின்படி கடுமையாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார் .