ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு சாத்தியமா?

இந்தியா முழுவதும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மக்கள் இடம்பெயர்ந்து செல்வது இயற்கை. பணம் படைத்தவர்கள் இடம் பெயரும்போது அவர்களுக்கு பெரிதாக எந்த சிக்கலும் எழுவதில்லை. ஆனால் கூலித் தொழிலாளர்கள் போன்றவர்கள் பிழைப்பு தேடி இடம் பெயரும்போது அவர்கள் படும்பாடு சொல்லி மாளாது.

புது இடம், புதிய சூழல், புதிய பணி என்ற எதை சமாளித்தாலும் வறுமையை வெல்ல அவர்கள் பெரிய போராட்டத்தையே நடத்த வேண்டி இருக்கிறது. அவர்கள் யாரும் பிச்சைக்காரர்கள் அல்ல. இந்த நாட்டின் குடிமக்கள்; என்றாலும் அவர்களுக்கு அவர்கள் சொந்த ஊரில் கிடைக்கும் சில இயல்பான சலுகைகள் இடம்பெயரும் இடத்தில் கிடைக்காது. குறிப்பாக வறுமை காரணமாக இடம்பெயர்பவர்களுக்கு முதல் முக்கியத் தேவை உண்ண உணவும், இருக்க இடமும்தான். இருப்பதற்கான இடத்தை எப்படியோ ஏற்பாடு செய்து கொண்டாலும் உணவுக்குத் தேவையானவற்றை அவர்கள் பொதுவான வெளியார் மார்க்கெட்டில்தான் வாங்க வேண்டும். அவர்கள் இருக்கும் நகரம், நகர்ப்புறம், கிராமத்தைப் பொறுத்து விலை கொடுக்க வேண்டி இருக்கும்.

அவர்கள் சொந்த ஊரில் ரேஷன் கடையில் கிடைக்கும் இலவச அரிசி அல்லது குறைந்த விலை அரிசி இங்கு ஐம்பது முதல் நூறு ரூபாய் என்றாலும் வேறு வழியில்லாத காரணத்தால் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை இருக்கிறது.

ஏற்கெனவே பிழைக்க வழியின்றி மாநிலம் விட்டு மாநிலம் வந்து தங்கி, கிடைத்த பணியைச் செய்யும் ஏழைத்தொழிலாளர்களுக்கு இது ஒரு பெரிய சுமையாக இருக்கிறது. அதுபோக உண்ணும் உணவு என்பது ஒரு அடிப்படைத் தேவை. இதற்கு வழிகாட்ட வேண்டியது ஒரு ஜனநாயக நாட்டினுடைய அரச¤ன் அடிப்படை கடமை. இதையெல்லாம் மனதில் கொண்டுதான் தற்போது மத்திய அரசாங்கம் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த முன்முயற்சிகள் எடுப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன. இத சாத்தியப்படுமா?

கொள்கை அளவில் இத ஏழைகளுக்கு உதவும் திட்டம், பயனுள்ள திட்டம் என்றாலும் நடைமுறையில் இது சாத்தியப்படுமா?, உண்மையாகவே நடைமுறைப்படுத்தப்படுமா? என்பதெல்லாம் கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஏனென்றால் மத்திய அரசில் உள்ள சில துறைகள், அதாவது கல்வி, சுகாதாரம், வேளாண்மை, தொழில், உணவு போன்ற துறைகள் மாநிலங்களிலும் உள்ளதோடு தங்களுக்கென உள்ள வரையறைப்படி இயங்கி வருகின்றன. அதிலும் உணவுத்துறையைப் பொறுத்தவரை மத்திய அரசின் இந்திய உணவுக் கழகம் போன்றவை இயங்கி வந்தாலும் மாநில அரசின் நியாய விலைக்கடைகள் மூலமாகத்தான் பல பொருட்களும் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. சொல்லப் போனால் இந்த ஆதார் கார்டு, பான் கார்டைவிட முக்கியத்துவம் வாய்ந்ததாக ஒரு குடும்பத்தின் தனிநபரின் அடையாள அட்டையாக இந்த மாநில அரசுகளின் ரேஷன் கார்டு திகழ்கிறது என்று உறுதியாகக் கூறலாம்.

இதற்காக அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு திட்டங்கள் மூலம் தங்கள் மாநில மக்கள் பயன்பெற வேண்டும் என்ற முறையில் இந்த உணவு வழங்கல் துறையை வலுப்படுத்தி வந்திருக்கின்றன. பல கோடி ரூபாய்கள் செலவில் பல கட்டுமானங்கள், திட்ட அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் இதில் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளன.

இந்த நிலையில் மத்திய அரசு திடீரென ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்று செய்திகள் வெளியாகி இருப்பது பல மாநிலங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. எந்தவித உள்கட்டமைப்பும் பெரிய அளவில் இல்லாத மாநிலங்களுக்கு இதில் இழப்பதற்கு ஒன்றும் இல்லை. அதாவது பீஹார் போன்ற மாநிலங்களுக்கு வேலைவாய்ப்பு தேடிச் செல்லும் வெளி மாநிலத்தவர்கள் குறைவு. அதேநேரம் அங்கிருந்து வெளிமாநிலங்களுக்கு வருபவர்கள் அதிகம்.

இந்த நிலையில் தங்கள் மாநிலத்தில் வசிக்கும் மக்களுக்காக, பல ஆண்டுகளாக, பல நூறு கோடிகளை செலவு செய்து பல்வேறு நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் இதை ஏற்பது மிகவும் கடினம். தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு இதில் பெரிய ஆதாயம் எதுவும் இல்லை. சொல்லப்போனால் கூடுதல் சுமைதான் உருவாகும். இது ஒரு சில குறிப்பிட்ட மாநிலங்கள் பயன்பெறுவதற்காக எல்லோரையும் சிக்கலுக்கு உள்ளாக்குவதுபோலத் தெரிகிறது.

இதுபோன்று மாநில அரசுகளுக்கு இடையில் எழும் சிக்கல்களை இதுவரை மத்திய அரசு உடனடியாக நியாயமான முறையில் தீர்த்து வைத்ததாகவும் தெரியவில்லை. கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் காவிரி விவகாரம் இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

மத்திய அரசு இந்திய மக்களின் மேல் கொண்டுள்ள அக்கறையை அனைவரும் வரவேற்கிறார்கள். அதற்காக மாநிலங்களிடம் ஏற்கெனவே உள்ள, சிறப்பாக இயங்கி வரக்கூடிய ஒரு முக்கியமான துறையான உணவுப் பங்கீடு மற்றும் வழங்கல் துறையை சிக்கலுக்கு உள்ளாக்கக் கூடாது.

வேண்டுமானால் இந்திய உணவுக் கழகம் போன்ற நிறுவனங்களின்கீழ்  இதற்கென ஒரு தனி அலுவலகத்தை ஏற்படுத்தி, நாடு முழுவதும் சோதனை அடிப்படையில் மத்திய அரசின் ரேஷன் கடைகளை இந்த இடம்பெயரும் தொழிலாளர்களுக்காக ஏற்படுத்தித் தரலாம். பிறகு அவற்றின் தேவைகளை அறிந்து கொண்டு தேவைக்கேற்ப விரிவுபடுத்தி இடம்பெயரும் மக்களுக்கு நன்மை செய்யலாம். அதை விட்டுவிட்டு தர்மம் செய்கிறேன் பேர்வழி என்று அடுத்தவர் வீட்டில் உள்ள பொருளைப் பட்டியலிட கிளம்பிவிடக்கூடாது.

இன்னும் செல்லப்போனால் தொழில், பதவி நிமித்தம் இடம்பெயர்பவர்களைத் தவிர்த்து வாழ்க்கைப் பிழைப்புக்காக இடம்பெயர்வது குறித்து அந்தந்த மாநிலங்கள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நாடு சுதந்திரம் பெற்ற இத்தனை ஆண்டுகளில் மாநில அரசுகள் மக்கள் நலனில் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை என்பதையே இது காட்டுகிறது.

நோய் நாடி நோய் முதல் நாடி என்பதுபோல இதற்கான காரணங்களை ஆராய்ந்து செயல்படுவதை விட்டுவிட்டு தற்காலிக நிவாரணங்களைத் தேடுவது எப்போதுமே அறிவுடைமை அல்ல.