பிராணாயாமத்தின் பலன்கள்

“ஈஷா யோகாவில் கற்றுத்தரும் பிராணாயாமப் பயிற்சிகளுக்கும் மற்ற இடங்களில் கற்றுத்தரப்படும் பிராணாயாமப் பயிற்சிக்கும் என்ன வித்தியாசம்? பிராணாயாமம் பயிற்சி செய்வதால் மன அழுத்தத்திலிருந்து விடுபட முடியுமா?” இந்தக் கேள்விகள் உங்களுக்கு இருந்தால் சத்குருவின் இந்த விளக்கம் தெளிவுபடுத்தும்!

சத்குரு:

ஒரு சூழ்நிலை நீங்கள் நினைத்தவாறு நடக்கவில்லை என்றால், உங்களை பதற்றமும், மன அழுத்தமும் தொற்றிக் கொள்கிறது. பதற்றம் அதிகரித்தால் உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரித்து நோய் உண்டாகிறது.

தற¢போது மனிதர்களைத் துன்புறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் 70% மனரீதியானவை என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். வெறும் 30% நோய்களுக்கு மட்டுமே காரணி வெளியிலிருந்து வருகிறது. ஆக, மனதின் செயல்பாட்டை கட்டுப்படுத்த முடியாமல் பல நோய்கள் உண்டாகிறது – அதாவது 70% நோய்கள் உள்ளிருந்தே உருவாகின்றன.

யோகப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்யும்போது உங்கள் உடல் இயக்க அமைப்பு அமைதியாகவும் ஸ்திரமாகவும் செயல்படுகிறது. இதனால் மன அழுத்தம் என்ற பேச்சிற்கே இடமிருக்காது. சில வாரங்கள் பயிற்சி செய்வதிலேயே உங்கள் மனம் சமநிலையாக இருப்பதையும், உங்கள் உடல் திடமாக செயல்படுவதையும், நீங்கள் கவனிக்க முடியும்.

பிராணாயாமம் என்றால் என்ன?

‘பிராணா’ என்றால் உயிர் சக்தி. ‘யாமா’ என்றால் ஆதிக்கத்தில் வைத்துக் கொள்வது. ஈஷா யோகாவில் பிராணாயாமத்தை ‘சக்தி சலன க்ரியா’ என்று அழைக்கிறோம். அதாவது, உங்கள் சக்தியை நீங்கள் விரும்பும் விதத்தில் நகர்த்திக் கொள்ள உதவும் பயிற்சி.

உலகில் பெரும்பாலானவர்கள் பிராணாயாமத்தை புத்தகத்திலிருந்துதான் கற்றுக் கொள்கிறார்கள். இது மிகவும் துரதிர்ஷ்டமானது. ஏனெனில், இவ்வுலகில் ஒரே ஒரு புத்தகம் மட்டும்தான் உங்களுக்கு சரியான பிராணாயாமத்தைக் கற்றுத்தர முடியும் – அது, உங்கள் உடல்.

உடல் என்பது உங்களை படைத்தவர் எழுதிய புத்தகம். இதில் எந்தத் தவறும் இருக்க முடியாது. இந்த உடல் எப்படி செயல்படுகிறது என்ற விழிப்புணர்வு இருந்தால் மட்டும்தான், பிராணாயாமப் பயிற்சியை நங்கள் வடிவமைக்க முடியும். யோகா புத்தகங்களில் குறிப்பிடப்பட்டு இருப்பவை சூத்திரங்கள் – இயக்க முறை நுட்பங்கள். சூத்திரம் என்பது ஒரு நூல் – பூக்களைக் கோர்த்து ஒரு மாலையாகக் கட்டும் நூல். நீங்கள் ஒரு மாலையை அணிவது, அதில் உள்ள நூலுக்காக அல்ல; அதிலுள்ள மலர்களுக்காகத்தான். ஆனால் அந்த நூல் இல்லாமல் மாலை இல்லை. யோக சூத்திரங்களும் அதுபோலத்தான்.

ஒவ்வொரு ஆன்மீக குருவும் தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஏற்ற மாலையை வடிவமைக்கிறார். உடனடித் தேவை என்னவோ, அதற்கு ஏற்ப எல்லோரையும் சேர்த்து, அவர் ஒரு மாலையைத் தொடுக்கிறார். இதில் பிரச்னை என்னவென்றால் அடுத்து வருபவர்கள் நூலை மட்டுமே போதிக்கிறார்கள். அதைக் கொண்டு ஒரு மாலையை உருவாக்குவது பற்றிய புரிதல் அவர்களிடம் இல்லை. மாலையாக இல்லாமல், வெறும் நூலை அணிய யாருக்கும் விருப்பம் இருக்காதுதானே?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*