சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி பி.எஸ்.ஜி ஹாக்கி கோப்பையை வென்றது

மேட்டுப்பாளையம் கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி, கோவை சர்வஜனா பள்ளியில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கிடையிலான பி.எஸ்.ஜி. கோப்பை ஹாக்கி போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்று கோப்பையை வென்றது.

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி, முதல் சுற்றில் பி.எஸ்.ஜி சர்வஜனா பள்ளியை 6-0 என்ற கோல் கணக்கிலும், இரண்டாம் சுற்றில் கோவை எலிக்ஸ் பப்ளிக் பள்ளியை 5-0 என்ற கோல் கணக்கிலும், மூன்றாவது சுற்றில் கோவை ஸ்ரீராகவேந்திரா பள்ளியை 3-1 என்ற கோல் கணக்கிலும் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

இறுதிப் போட்டியில் கோவை டாக்டர் பி.ஜி.வி. பள்ளியை 5-0 என்ற கோல் கணக்கில் வென்று பி.எஸ்.ஜி ஹாக்கி கோப்பையைப் பெற்றது.  இப்போட்டிகளில் சிறப்பாக விளையாடிய சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பள்ளி மாணவர் சைலேஷ் சுப்பிரமணியன் சிறந்த தடுப்பாட்ட வீரர் பட்டத்தைப் பெற்றார்.

வெற்றி பெற்ற மாணவர்களைப் பள்ளியின் நிர்வாக அறங்காவலர் திருமிகு கே.ராமசாமி, பள்ளிச் செயலர் கவிதாசன், கல்வி ஆலோசகர் வெ. கணேசன், பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பாராட்டினர்.