2030 இல் தண்ணீர் அகதிகள்?

தமிழகத்தில் தற்போதைய பரபரப்பு, கையில் காலிக்குடங்களுடன் குடிநீருக்கான சாலை மறியல். ஐடி நிறுவங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணி செய்யச் சொல்கிறது, ஹோட்டல்கள் மூடப்படுகின்றன, தண்ணீர் இல்லாமல். வானிலை அறிக்கையில் மழை வரும், வராது என்று கேட்ட மக்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் அனல் காற்று வீசுவதாக எச்சரிக்கை. ராஜஸ்தானில் பாலைவனப் பகுதிகள் அதிகம், வெயிலும் அதிகம். அங்கு இதுபோல நடந்தால் ஒரு நியாயம் இருக்கிறது. பொன் விளையும் பூமியான தமிழகத்தில் இந்நிலை ஏன்?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வர்தா புயல் வந்தபோது சென்னையில் வெள்ளம் சாலைகளில் பத்தடி உயரத்துக்கு நின்று அனைத்தையும் அள்ளிப்போனது. அந்த மாநகரில் தற்போது நிலத்தடி நீர் காலியாகி பக்கத்து மாவட்டங்கள், கிணறுகள், கல் குவாரிகள், பல்வேறு ஏரிகள் மற்றும் லாரிகளில் இருந்து குடிதண்ணீர் கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் மத்திய நீர் வளத்துறை வெளியிட்ட அறிக்கையில், இன்னும் பத்தாண்டுகளில் டில்லி, பெங்களூர், சென்னை போன்ற முக்கிய நகரங்களில் 2030ம் ஆண்டில் நிலத்தடி நீர் சுத்தமாக இருக்காது. நகரங்கள் தண்ணீர் இல்லாத பாலைவனமாகிவிடும் என்கிறது. அத்துடன், சென்னை ஏற்கெனவே மூன்று ஆறுகள், நான்கு சதுப்பு நிலங்கள், ஐந்து வனப்பகுதிகள் என்று தன் இயற்கை செல்வங்களை பறிகொடுத்துவிட்டது எனவும் கூறுகிறது.

என்ன செய்யப் போகிறோம்? நம்மைவிட குறைந்த மழை அளவு கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் இவ்வளவு சிக்கல் இல்லை. ஆனால்  நாம்  இங்கு பெய்கின்ற மழை நீருக்கு மதிப்பு தராததும், மழை நீரை சேமிக்காததும்தான் மிகபெரிய குற்றம் என்கின்றனர் நீரியல் நிபுணர்கள். பல ஆண்டு காலமாக பூமிக்குள் சேகரித்த நிலத்தடி நீரை, இப்படி அநியாயத்துக்கு கொள்ளையடிப்பதுபோல, மோட்டார் வைத்து உறிஞ்சி எடுத்த குற்றத்துக்குத்தான் தண்ணீருக்காக தெருத்தெருவாக அலைகிறோம்.

எனவே, சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தினரும் மழை நீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் பாதுகாப்பு குறித்து அறிந்து அதனை செயல்படுத்த வேண்டும். இதுகுறித்த பாடத்திட்டம் உயர்கல்வி வரை இடம்பெற வேண்டும். நடிகர்களும் இதுகுறித்த விழிப்புணர்வு நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டும். விவசாயிகள் உள்பட அனைவரும். தண்ணீரை சேமிக்க வேண்டும். தண்ணீரைத் திருடுபவர்கள், வீணடிப்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை வேண்டும். மாவட்டம்தோறும் சிறந்த மழைநீர் சேகரிப்பு திட்டங்களைப் பின் பற்றுபவர்களுக்கு விருது, ஊக்கப் பரிசு வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு சொட்டுநீர்ப் பாசனத்திற்கான கருவிகளை மானிய விலையில், ஏழைகளுக்கு இலவசமாகவே கொடுக்கலாம்.

பொதுப்பணித் துறை மற்றும் குளம், குட்டையை பாதுகாக்க மாநகராட்சி தொடங்கி கிராம ஊராட்சி வரை உள்ள உள்ளாட்சி அமைப்புகள் உண்மையான அக்கறையுடன் செயல்பட வேண்டும். குளம், குட்டைகளைத் தூர்வாருவது மட்டுமல்லாது, வாய்க்கால்கள், கால்வாய்களை ஆக்கிரமித்துள்ளவர்கள், அவர்களுக்கு ஆதரவு தருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு, தனியார் கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு திட்டம் உடனடியாக செயல்படுத்த வேண்டும். இதனைக் கண்காணிக்க தகுந்த உறுப்பினர்கள் அடங்கிய குழுவும், அதில் உள்ளூர் பொதுமக்களும், தன்னார்வலர்களும் இடம்பெற வேண்டும். பயன்படுத்தும் தண்ணீரை மறுசுழற்சி செய்யும் முயற்சிகளைத் துவங்கி, இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போர்வெல்கள், கிணறுகள் குறித்த உண்மையான எண்ணிக்கையைக் கண்டறிந்து, பயன்படுத்தும் தண்ணீரை அளவிட வேண்டும். அந்த போர்வெல்களில் தண்ணீரை ரீசார்ஜ் செய்யும் வசதி இருக்கிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும்.

ஒரு காலத்தில் காலரா, பிளேக் போன்ற நோய்களுக்கு ஊரையே காலி செய்த வரலாறுகள் உண்டு. அந்தப் பட்டியலில் புதிதாக தண்ணீர் வேண்டி அகதிகளாக அலையும் நிலையை 2030 இல் உருவாக்காமல் இருக்க வேண்டும். நாம் ஆறிவு கொண்ட மனிதர்களா அல்லது தண்ணீர் அகதிகளா என்பதை காலம் தீர்மானிக்கப் போவதில்லை. நாம்தான் தீர்மானிக்க வேண்டும். மழை துவங்கி விட்டது, நாம் அதனை சேமிக்கத் துவங்குவோம்.