பிக்பாஸ்: கலாச்சார சீரழிவா?

கதிராமங்கலம், நெடுவாசல், விவசாயிகளின் பிரச்னை, நிலம், நீர் மாசுபாடு, ஆற்றுநீர் மற்றும் தாது மணல் கொள்ளை, வேலையில்லா பட்டதாரிகள், பொதுமக்களிடம் வசூலிக்கப்படும் அதிகப்படியான வரி, டாஸ்மாக் மதுக்கடையால் சாக்கடையில் உருளும் தமிழர்களின் அவலநிலை என எண்ணற்ற சமூகப் பிரச்னைகள் தமிழகத்தில் உள்ளன. ஆனால் இதைப்பற்றியெல்லாம் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ, கட்சிகளோ, சங்கங்களோ பேசவில்லை. மாறாக, ‘‘இந்த தொலைக்காட்சித் தொடர் கலாச்சார சீரழிவு. அதனை தடை செய்ய வேண்டும்’’ என தேங்கிக்கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையில் மேலும் ஒன்றை தேவையில்லாமல் சேர்க்கின்றனர் சிலர்.

இது இவர்களுக்கு மக்களின் மேல் உள்ள அக்கறையைக் காட்டுகிறதா? அப்படி உண்மையான அக்கறை இருக்கிறது என்றால் மக்களுக்குத் தேவைப்படும் காரியத்தில் அல்லவா அவர்கள் தங்கள் நேரத்தை பயன்படுத்த வேண்டும்? இன்று பல பகுதிகளில் பொதுமக்களே குழுக்களாக இணைந்து குளம், குட்டைகளைத் தூர்வாரிக் கொண்டிருக்கிறார்கள். அங்கே மணல் எடுத்து பிரிப்பதில் பிரச்னை என்றால் பஞ்சாயத்து செய்ய ஓடிவருவர் இதே அக்கறை மனிதர்கள். ஆனால் இவர்கள் மக்களுக்கு செய்த உபயோகமான செயல்களை சில எண்ணிக்கையில் சொல்லிவிடலாம். அதிலும் கண்டிப்பாக அவர்களுக்கு ஆதாயம் இருக்கும் செயல்கள்தான் அதிகமிருக்கும். ஆக, அக்கறை என்பது பொய், சுயவிளம்பரம் தேடிக்கொண்டு அவர்களையும் அவர்கள் சார்ந்த கட்சியையும் சங்கத்தையும் பிரபலப்படுத்துவதே அவர்களின் நோக்கம். அதற்கு தற்போது அவர்கள் கையில் கிடைத்திருப்பது ‘பிக்பாஸ், ஓர் கலாச்சார சீரழிவு’ எனும் கோஷம்.

சிம்பு ‘பீப் ஷாங்’ பாடிவிட்டார் என ஆர்ப்பாட்டம் செய்த மகளிர் அமைப்புகள் அதற்கு பிறகு எங்கே என்பது இதுவரை கிடைக்காத பதில். கற்பழிப்பு, கொலை என இளம்பெண்களுக்கு எதிரான வன்கொடுஞ்செயல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அந்த மகளிர் அமைப்புகள் இதுகுறித்து ஒரு செய்திகூட வெளியிடவில்லை.

ரஜினி எது சொன்னாலும் எத்தனை வழக்கு போட்டாலும் வாய் திறக்கமாட்டார். ஆனால் அவரைக் குறித்து பேசினால், திட்டினால் பத்திரிகைகளில் இலவசமாய் செய்திகள் வரும். அவ்வாறு பிரபலமானவர்கள் தமிழகத்தில் அதிகம். அவர்களைப் பொறுத்தவரை, ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது, ஆனால் அவர் தனது ஆதரவைத் தந்தால் வரவேற்போம். இது எப்படி இருக்கு? அது சரி, அவர்கள் அரசியல் தொழிலில் மூலதனம் போட்டு, தங்கள் நேரத்தை பலகாலம் செலவிட்டு அதிகாரத்தை எதிர்நோக்கி காத்திருக்கையில் திடீரென ஒருவர் வந்து அந்த இலாப நோக்கத்தை தடைசெய்தால் யாருக்குத்தான் கோபம் வராது? ஆனால் அதேநேரம் மக்களுக்கு இவர்கள் என்ன செய்தார்கள் என்று திருப்பிக்கேட்கக் கூடாது. அதற்கு ஆயிரம் காரணங்கள் கூறுவர். ஆதாரங்கள் கேட்பர். மேலும் கேள்விக்கேட்போர்மீது தாக்குதலும் நடக்கலாம். தற்போது கமல் மீது நடப்பதைப்போல.

இதுவெல்லாம் கலாச்சார சீரழிவு அல்ல. தரங்கெட்ட செயல்களும் அல்ல. சொல்லப்போனால், இதுபோன்ற எந்த நிகழ்வும் தமிழகத்தில் நடக்கவில்லை என்று சொல்வார்கள். அப்படித்தான் நாமும் எண்ணிக்கொள்ள வேண்டும். எதிர்த்து பேசக்கூடாது.

அண்மையில் கமலிடம் நிருபர்கள், ‘இந்த நிகழ்ச்சியில் இவ்வாறு, இப்படி பேசுகிறார்களே-?’ என்று கேட்டதற்கு அவர் தெளிவாக, ‘தெருவில் இறங்கி நடந்துபாருங்கள், இதைவிடக் கேவலமாக பேசுகிறார்கள்’ என்றார். அத்துடன் இங்கே எதில்தான் ஒழுங்கு இருக்கிறது? என்று கேட்டதற்கு அரசியல்வாதிகள், கண்ணியமற்ற முறையில் ஒருமையில் வசைபாடுகின்றனர். எரிகிற வீட்டில் கிடைப்பது இலாபம் என கிடைத்ததை எல்லாம் எடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அது என்னவென்று எல்லோருக்கும் தெரியும். கேட்டால் சாட்சிகள் எங்கே? ஆதாரங்கள் எங்கே? என்கிறார்கள். அவர் நடிக்கிறார் என்கிறார்கள்.

நடிப்பு அவரது தொழில். அதற்காக அவர் நாட்டைப்பற்றி பேசக்கூடாதா? அநியாயங்களைக் குறித்து கேள்வி கேட்கக் கூடாதா? உடனே, இதுவரை அவர் எங்கே போனார்? என்று திருப்பி கேள்வி கேட்பது பண்பாடா? இல்லை, கேள்விக்கு பதில் சொல்வது நாகரிகமா? அரசு சார்பில் வழக்குப் போடுவோம் என்றால் இதுவரை எத்தனை நல்ல காரியங்களுக்கு இவ்வாறு வழக்கு போட்டு, நல்ல தீர்ப்பை நாட்டுக்கு வழங்கி இருக்கிறார்கள்? விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் என்ன செய்தார்கள்? மணல் கொள்ளைத் தடுக்கப்பட்டதா? மதுவை ஒழிக்க முடிந்ததா? இதனால் எல்லாம் கலாச்சாரம் சீரழியவில்லையா? சரி, அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.

தொலைக்காட்சித் தொடர்களில் பெண்களை வில்லிகளாகக் காட்டும்போதும், சமூகத்தின் இழிவான அம்சங்களாகக் காட்சிப்படுத்தும்போதும், அந்த காட்சிகள் தங்கள் வீடுகளில் ஓடும்போதும் கலாச்சாரம் சீரழியவில்லையா? எப்போது தனியார் கேபிள் அலைவரிசைகள் வந்ததோ அப்போது முதல் நாடகங்கள் என்ற பெயரில் பெண்களை வில்லிகளாகவும், ஆபாசமாகவும் சித்தரிக்கும் காட்சிகள் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் அடியெடுத்து வைத்தாயிற்று. கேட்டால் நாட்டில் நடக்காததையா காட்டுகிறோம் என்கிறார்கள்? அப்போது அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியாமல், இன்று இதுபோன்ற ஓர் நிகழ்ச்சியின்மீது ஏன் இவ்வளவு கோபம்? இந்த நிகழ்ச்சியை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று உங்களை யாராவது வற்புறுத்தினார்களா? உங்களுக்குத் தெரியாமலே உங்கள் வீட்டில் ரிமோட் இல்லாமல் இந்நிகழ்ச்சி ஓடுகிறதா?

கள்ளக்காதலில் கணவனை ஆள் வைத்துக் கொல்லும்போது, தலையில் கல்லைப் போட்டுக்கொல்வது, பெற்ற பிள்ளையை குப்பையிலே வீசுவது, காதல் மணம் புரிந்து பின்னர் சில மாதங்களில் விவாகரத்து செய்யும்போது, பலருடன் கூடிக் குடித்து, புகைப்பிடித்து கும்மாளம் போடும்போது கலாச்சாரம் எங்கே போனது? காதல் திருமணம் செய்துவிட்டார்கள் என்பதற்காக பெற்றோரே கருணைக் கொலை, கௌரவக் கொலை செய்யும்போது கலாச்சாரம் மேலோங்கி நின்றதா? அப்போதெல்லாம் கலாச்சார காவலர்கள் எங்கே சென்றிருந்தார்கள்?

ஆண்களிலும் அதைவிடக் கேவலமான ஜந்துக்கள் உண்டு. சில பள்ளி, கல்லூரி மாணவர்கள் தலைமுடியை ஸ்டைல் என்ற பெயரில் நெட்டுக்கொத்தாக, பரட்டையாக, மழித்துக்கொண்டும் வளர்த்துக்கொண்டும் திரிவது, பைக்குகளில் சாலைகளில் கரணம் போடுவது, ரேஸ் ஓட்டும் பலசாலிகளை யார் தடுத்தார்? காதலிக்காத பெண்ணை துரத்தி வன்கொடுமையில் ஈடுபடும் சில இளைஞர்களையும், அவர்களது தாய்மார்களையும், தகப்பன்களையும் சீர்படுத்த கலாச்சார காவலர்களாகிய நீங்கள் என்ன செய்தீர்கள்?

இதிலெல்லாம் காப்பாற்றப்பட்ட கலாச்சாரம்தான் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில்தான் சீரழிக்கப்படுகிறதா? சொல்லுங்கள். கடைசியாக ஒன்று, ஸ்மார்ட் போனில் சகலரும் சபலம் கொள்ளும் சூழ்நிலையில் வாழும் கம்ப்யூட்டர் கலிகாலத்தில் கலாச்சாரம் எங்கே காப்பாற்றப்படுகிறது? எங்கே கட்டவிழ்த்து விடப்படுகிறது? என்பதைக் கவனித்து உங்கள் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்க்க முயற்சி எடுங்கள். தமிழ்நாட்டில் நடக்கும் கலாச்சார சீரழிவுகள் குறித்து ஆய்வு நடத்துங்கள். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு நல்லொழுக்கம் தரும் கல்வியைத் தர முயலுங்கள். உங்கள் பிள்ளைகளுடன் இணைந்து நட்பாக பழகுங்கள். அதற்காகக் கூடி உட்கார்ந்து குடிக்காதீர்கள்.

டாக்டராக்க, இன்ஜினியராக்க, தொழிலதிபராக்க படிக்க வைக்காதீர்கள். உங்கள் மகனை நல்ல மகனாக, நண்பனாக, கணவனாக, பெண்களின் காவலனாக வளர்க்கவும், மகளை அழகின்மீது, ஆடையின்மீது மட்டும் கவனம் செலுத்தாத ஆரோக்கியத்தின்பால் கவனம் செலுத்தும் தனிச்சிறப்பு பெற்ற, சாதனைகளை அரங்கேற்றும் நாட்டின்மீது பற்றுகொண்ட, மொழியின்மீது, கலாச்சாரம், பண்பாட்டின்மீது பற்றுகொண்டவர்களாக வளர்க்க முயலுங்கள். அப்போது தானாக கலாச்சாரம் காப்பாற்றப்படும். நீங்களும் முதியோர் இல்லம் செல்லாமல் கூடிவாழ்ந்து கோடி புண்ணியம் பெறலாம். அதைவிடுத்து ஊரைக் காப்பாற்றுகிறேன் என்று பிதற்றாமல் வீட்டையும் நாட்டையும் வளப்படுத்த தனிமனித சுதந்திரத்தையும் சுய முன்னேற்றத்தையும் காப்பாற்றுங்கள். அதுவே ஒவ்வொரு தனிமனிதனின் கடமை.

உண்மையில், கமல் பிக்பாஸ் குறித்து அறிமுகம் செய்கையில் இதனை சமூக பரிசோதனை முயற்சி (Social Experiment) என்றார். அது சரியே. மேற்கூறிய பல்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்களை உள்ளடக்கியதே இந்த சமூகம் எனும் கட்டமைப்பு. ஒரு கூட்டுக்குடும்பத்தில், ஒரு நிறுவனத்தில் இதுபோன்ற பல்வேறு மனிதர்களுடன் நாம் வாழ்ந்து வருகிறோம். முன்னே சிரித்து, பின்னே குழி விரிக்கும் சம்பவங்கள் நம் வாழ்வில் நாம் காணும் காட்சிகளே. உள்ளேயிருக்கும் பலரும் நடிகர்கள் என்பதையும் தாண்டி, அவர்களை நமது சக மனிதர்களின் குணாதிசயங்களாகக் கண்டு, அவர்கள் செய்யும் அனைத்திலும் எது சரி, எது தவறு என்பதை உணரவும், அதிலிருந்து நம்மைத் திருத்திக் கொள்ளவும் இது ஒரு சுயபரிசோதனை. நாடகங்களுக்கும் இதுபோன்ற யதார்த்த நிகழ்ச்சிக்கும் உள்ள வேறுபாடு, அதிலும் கமல் தொகுத்து வழங்குவதில் உள்ள யதார்த்தம் என்னவெனில், நாடகங்களில் முழுமையான திரைக்கதையை காண்கிறோம். அதுகுறித்து பேசுகிறோம். மறக்கிறோம். ஆனால் இதில் இந்நிகழ்ச்சியை பார்க்கும் அனைவரும் பார்வையாளர்கள். நீதிபதிகள். மக்கள் தங்கள் கருத்துக்களைச் சொல்ல இதில் வாய்ப்பிருக்கிறது. இதன்மூலம் பொதுவாக மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதையும் நாம் காண முடிகிறது. இல்லையில்லை, இது தவறு என்போருக்கு மகாபாரதத்தில் இருந்து சிறு காட்சி.

கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் குருவான துரோணாச்சாரியார் ஒருநாள் துரியோதனனையும் தர்மரையும் அழைத்து, ஒரு வேலை (TASK) கொடுக்கிறார். இருவரும் அருகிலுள்ள ஊரில் வசிப்பவர்கள் குறித்து கருத்து சொல்ல வேண்டும் என்பதே அப்பணி. அவ்வாறே சென்ற இருவரில் துரியோதனன் திரும்பிவந்து குருவிடம், ‘அங்கே யாருமே நல்லவர்கள் இல்லை. எல்லோரும் கெட்டவர்கள்’ என்கிறார். தர்மர், ‘அங்கே எல்லாருமே நல்லவர்கள். யாருமே கெட்டவர்கள் இல்லை’ என்கிறார். ஆக, ஒரே ஊர், ஒரே மக்கள்.

இரு நபர்கள். ஆனால் அவர்களின் பார்வைதான் வேறு. அதுதான் நமக்கும். இந்த நிகழ்ச்சியில் மட்டுமல்ல, உங்கள் அருகில் உள்ளோரையும் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்பது உங்களது பார்வையில்தான் உள்ளது. பிறரை குறை சொல்லி வாழ்வது தவறு. உன் மனதிற்கு நியாயமாய் வாழ்வதே சிறப்பு என்பதன்படி பழகும் நபர்களைத்தான் இந்நிகழ்ச்சியின் மூலம் மக்கள் தேர்ந்தெடுத்து வெற்றிபெற செய்ய முனைகிறார்கள். ஏனெனில், அந்த நபர்களின்மூலம் மக்கள் தங்களைக் காண்கிறார்கள். பொதுவாக, எல்லோரும் நல்லவர்களாக இருக்கவே விரும்புகிறோம். ஆனால் சூழ்நிலைதான் நம்மை வேறு ஒரு கட்டத்திற்கு அழைத்துச்செல்கிறது. அப்படியென்ன சூழ்நிலை வந்தாலும், நாம் நாமாக வாழ்வதே, வாழ்க்கையின் சாராம்சம் என்பதை இந்நிகழ்ச்சி உணர்த்துகிறது. ஆக, தற்போதைய நாகரிக உலகிற்கு இந்நிகழ்ச்சி நல்லதொரு கலாச்சாரத்திற்கான பாலபாடம் என்கிறேன். இல்லை, இது கலாச்சார சீர்கேடு என்று நீங்கள் சொன்னால், உங்கள் பார்வை வேறு. அதற்கு யாரும் பொறுப்பில்லை.

  • கா.அருள்