“எழுத்தாளர் வாழ்நாள் சாதனையாளர் விருது”

எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எழுத்தாளர் வாழ்நாள் சாதனையாளர் விருது

கோவை கொடிசியா வளாகத்தில் புத்தக கண்காட்சி 2017 நடைபெற்று வருகிறது. இதில் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு “எழுத்தாளர் வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக பல்தேவ் பாய் சர்மா, தேசிய புத்தக நிறுவனத்தின் தலைவர் பங்கேற்றார். இவ்விழாவில் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு இயகோகா என்.சுப்ரமணியன், நன்னெறிக்கழகத்தின் தலைவர் மற்றும் பல்தேவ் பாய் சர்மா ஆகியோர் இவ்விருதினை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் அகில இந்திய புத்தக பதிப்பாளர் சங்க தலைவர் பல்தேவ்பாய் சர்மா, பேசுகையில்: தொழில்நிறுவனங்கள் ஒன்று கூடி புத்தகக் கண்காட்சியை நடத்தியதை இங்கு தான் பார்க்கிறேன். இது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. எத்தனை ஆயிரம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இங்கு வந்து பார்வையிட்டு பயனடைகிறார்களோ, அதை பொறுத்துதான் இக்கண்காட்சியின் வெற்றி அமையும்.

மேலும், புத்தகங்கள் பற்றிய விழிப்புணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும். உதாரணமாக, பிறந்தநாள் விழாவிற்கு செல்லும் பொழுது, அங்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிப்பதை விட, நல்ல புத்தகங்களை கொடுத்தால், நன்மதிப்பு ஏற்படும். புத்தகங்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றார்.

“புத்தகங்களை மதித்து போற்றிய யாரும், தோல்வியுற்றதாக இல்லை. வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கும் புத்தகங்களை விற்பனை செய்ய இது போன்ற கண்காட்சிகள் பெரிதும் உதவியாக இருக்கும்” என்றார்.

கொடிசியா முன்னாள் தலைவர் வரதராஜன் பேசுகையில்,”மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்தால் மட்டுமே, தொழில்கள் நிலைக்க முடியும். மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும். இதை அடிப்படையாக கொண்டு தான், புத்தகத்திருவிழா நடத்தப்படுகிறது”, என்றார்.

எழுத்தாளர் ஜெயமோகன் பேசியதாவது: தமிழ் போன்ற பழமையான மொழிகளில் கலைக் களஞ்சியம் ஆண்டுதோறும் வெளியிடப்பட வேண்டும். தமிழில் முழுமையான கலைக் களஞ்சியத்தை தனி ஒரு ஆளாக இருந்து உருவாக்கியவர் பெரியசாமி தூரன். அவர் தமிழறிஞராகவும், தமிழிசைப் பாடல் ஆசிரியராகவும், சிறந்த குழந்தை கவிஞராகவும் மூன்று வெவ்வேறு பரிமாணங்களைக் கொண்டவர்.

ஆனால் இன்று, அவருக்கு பிறகு தமிழில் கலைக் களஞ்சியம் மறுபதிப்பு செய்யப்படவில்லை. தமிழ் வளர்ச்சிக்காக பல கோடி ரூபாய்களைச் செலவிடுவதாக சொல்லிக் கொண்டாலும், கலைக் களஞ்சிய விஷயத்தில் கவனம் செலுத்த யாரும் இல்லை என்று கூறினார்.