2030ல் தண்ணீர் அகதிகள்?

தமிழர்கள் எப்போதும்  பரபரப்பாகவே இருந்து பழக்கப்பட்டவர்கள். ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு, உலகக்கோப்பை கிரிக்கெட், கடைசிக்கு நடிகர் சங்க தேர்தல் என்று ஏதாவது ஒன்று இருக்கும். இப்போதும் பரபரப்பாக திரிகிறார்கள். ஒரே ஒரு வித்தியாசம், கையில் காலி குடங்கள் இருக்கின்றன. ஆங்காங்கே சாலை மறியல், காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடக்கிறது. கெத்தாக திரிந்த ஐடி கம்பெனிகள், தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து கொண்டே பணி செய்யச் சொல்லலாமா என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வானிலை அறிக்கை என்றாலே மழை வரும், வராது என்று நினைத்துக் கொண்டிருந்த தமிழகத்தின் மக்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் அனல் காற்று வீசுவதாக எச்சரிக்கை வந்துள்ளது. ராஜஸ்தானில் பாலைவனப் பகுதிகள் அதிகம், வெயிலும் அதிகம். அங்கு இது போல நடந்தால் ஒரு நியாயம் இருக்கிறது. இங்கு நடப்பது ஒன்றும் புரியவில்லை.

என்னதான் நடக்கிறது தமிழகத்தில்?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வர்தா புயல் வந்து கொட்டித் தீர்த்த போது அபார்ட்மென்டில் முதல் மாடியில் இருந்தவர்கள் படகுகளில் காப்பாற்றப்பட்டார்கள். அந்த அளவு மழை நீர் வெள்ளம் சாலைகளில் பத்தடி உயரத்துக்கு தேங்கி நின்றது. சென்னையா, வெனிஸ் நகரமா என்று கேட்கும் அளவுக்கு திரும்பிய பக்கம் எல்லாம் சாலைகளுக்கு பதிலாக நீர்ப்பாதைகள் தான் தென்பட்டன. அப்படி இருந்த “தருமமிகு சென்னை” மாநகரில் இன்று நிலத்தடி நீர் காலி, என்று பக்கத்து மாவட்டங்களில் இருந்து கிணறுகளில் இருந்தும் கல் குவாரிகளில் இருந்தும் லாரிகளில் குடிதண்ணீர் கொண்டு வருகிறார்கள். வெள்ளக்காடாக இருந்த சென்னை இன்று குடிக்கிற நீருக்கே படாதபாடு பட வேண்டிய நிலை வந்துதிருக்கிறது.

எப்போது மழை வரும் என்று அரசாங்கம் உள்பட வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இன்றில்லா விட்டால் மழை நாளை வந்து விடும்? ஆனால் இது எவ்வளவு நாட்களுக்கு கைகொடுக்கும் என்றுதான் புரியவில்லை. ஏனென்றால் மத்திய நீர் வளத்துறை ஒரு அதிர்ச்சியளிக்கும் அறிக்கையை அளித்திருக்கிறது. அதாவது இன்னும் பத்தாண்டுகளில் டில்லி, பெங்களூர், சென்னை போன்ற முக்கிய நகரங்களில் 2030ம் ஆண்டில் நிலத்தடி நீர் சுத்தமாக இல்லாமல் போய் விடும், அதாவது நகரம் தண்ணீர் இல்லாத பாலைவனமாக ஆகி விடும் என்று கூறியிருக்கிறது. ஏற்கனவே மூன்று ஆறுகள், நான்கு சதுப்பு நிலங்கள் ஐந்து வனப்பகுதிகள் என்று சென்னை பறி கொடுத்து விட்டு மொட்டையாக நிற்பதாகவும் அந்த அறிக்கை கூடுதல் தகவல் தருகிறது.

என்ன செய்யப் போகிறோம்? மூன்றாவது உலகப்போர் தண்ணீருக்குத் தான் என்று கவிதை எழுதப் போகிறோமா? அல்லது நமது ஆட்சியாளர்கள் எங்கிருந்தாவது ரயிலில், விமானத்தில் தண்ணீர் கொண்டு வந்து தருவார்கள் என்று நம்பிக் கொள்வதா? என்று புரியவில்லை. இந்த நிலை சென்னைக்கு மட்டும் இல்லை, தமிழகம் முழுவதற்கும் பொருந்தும்.

உண்மையிலேயே தண்ணீர்ப் பஞ்சம்தானா? தமிழகம் தவித்த வாய்க்கு தண்ணீர் இல்லாத மாநிலமாக மாறி விட்டதா என்றால் இல்லை என்றே தோன்றுகிறது. நம்மை விட மழை அளவு குறைந்த ராஜஸ்தான் மாநிலத்தில் இவ்வளவு சிக்கல் இருப்பதாக தெரியவில்லை. இங்கு பெய்கின்ற மழை நீருக்கு நாம் மதிப்பே தராததும், அந்த மழை நீரை சேமிக்காததும் தான் இங்கு பெரிய குற்றம் என்று நீரியல் நிபுணர்கள் அடித்துச்சொல்கிறார்கள். பல ஆண்டு காலமாக பூமிக்குள் சேகரித்த நிலத்தடி நீரை என்னதான் நம்ம அப்பன் வீட்டு சொத்து என்றாலும் இப்படி அநியாயத்துக்கு கொள்ளையடிப்பது போல உறிஞ்சித் தள்ளியிருக்கக் கூடாது.

நீரின்றி அமையாது அன்று அலங்காரத்துக்கு எழுதி வைத்து விட்டு பம்ப் மோட்டார் வைத்து உறிஞ்சி எடுத்த குற்றத்துக்கு தண்டனையாகத் தான் இன்று இரவு, பகல் பாராமல் தண்ணீருக்கு காலி குடங்களுடன் தெருத்தெருவாக அலைகிறோம் என்பதை உணர வேண்டும்.

சும்மா, சும்மா ஒவ்வொரு வருடமும் கோடை வந்தால் இத போல படம் காட்டுவதும், மழை வரும் போது நமக்கென்ன என்று போய் விடுவதும் இனி கை கொடுக்காது. குழந்தைகள் தொடங்கி, மாணவர்கள், அரசாங்க அதிகாரிகள், தொழிலதிபர்கள், தொழிலாளர்கள், மருத்துவர்கள், குடும்பத் தலைவிகள் என சமூகத்தின் ஒவ்வொரு அங்கமாக இருப்பவர் ஒவ்வொருவரும் இந்த மழை நீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் பாதுகாப்பு என்றால் என்னவென்று கண்டிப்பாக தெரிந்து பின்பற்ற வேண்டும்.

நமது பாடத்திட்டங்களில் இது குறித்த முழு விவரங்களும் உயர்கல்வி வரை இடம் பெற வேண்டும். போலியோ பிரச்சாரத்துக்கு வந்து போல தல, தளபதி, சூப்பர் ஸ்டார் தொடங்கி எல்ல நடிகர்களும் காவிரி தண்ணீர் வேண்டி உண்ணா விரதம் இருந்ததை விட இது குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகளில் பங்கேற்று இந்த செய்தியை மூலை முடுக்கெல்லாம் கொண்டு செல்ல வேண்டும். விவசாயிகள் உள்பட பொதுமக்களுக்கு தண்ணீரை சிக்கனமாக சேமிப்பது குறித்த செய்திகளும் விவரங்களும் தெளிவாக போய்ச்சேர வேண்டும்.

தண்ணீரை திருடுபவர்கள் மீதும், தண்ணீரை வீணடிப்பவர்கள் மீதும் தகுந்த சட்டப்படியான நடவடிக்கையை தயங்காமல் எடுக்க வேண்டும். கலைமாமணி விருது, கபிலர் விருது என்று வழங்குவது போல மாவட்டம் தோறும் சிறந்த மழை நீர் சேகரிப்பு அமைப்பு கொண்ட வீடுகள், தொழிலகங்கள், மற்ற வளாகங்கள் ஆகியவற்றை தேர்ந்தெடுத்து ஊக்கப் பரிசுகள் வழங்க வேண்டும். இதற்காக பாடுபடடும் தனிநபர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களைப் பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும்.  முடிந்தால் விவசாயிகளுக்கு சொட்டுநீர்ப் பாசனம் போன்ற கருவிகளை நல்ல முறையில் மானிய விலையில் தரலாம். சில பகுதிகளில் ஏழை விவசாயிகள் என்றால் இலவசமாக கூட கொடுக்கலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக பல நூறு ஆண்டு காலமாக நமது முன்னோர்கள் கண்டறிந்து வெட்டி, பாதுகாத்து வந்த ஆயிரம் ஆயிரம் குளம், குட்டைகளை காப்பாற்ற அரசு கடும் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். ஆங்காங்கே குளம், கட்டைகளை ஆகிக்கிரமித்து அரசாங்கமே பேருந்த நிலையம் கட்டுவது போன்ற செயல்களை உடனடியாக கை விட வேண்டும். பொதுப்பணித்துறை மற்றும் குளம், குட்டையை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள மாநகராட்சி, தொடங்கி கிராம ஊராட்சி வரை உள்ள உள்ளாட்சி அமைப்புகள் உண்மையான அக்கறையுடன் இந்த நீர்நிலைகளை கண்காணித்து காப்பாற்ற முன்வர வேண்டும். தகுந்த முறையில் தூர் வாரி, குளம், குட்டை மட்டுமல்லாது, வாய்க்கால்கள், கால்வாய் என்று ஆக்கிமித்துள்ளவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீதும், அவர்களுக்கு ஆதரவு தருபவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அரசாங்கத்தின் அத்தனை கட்டிடங்களிலும் மழை நீர் சேகரிப்புக்கான கருவிகளும் அமைப்புகளும் உடனடியாக பொருத்தப்பட்டு மழை நீர் சேகரிக்கப்பட வேண்டும். இதனை கண்காணிக்க தகுந்த உறுப்பினர்கள் அடங்கிய, இதில் உள்ளூர் பொதுமக்களும், தன்னார்வலர்களும் இடம்பெற வேண்டும். அதைப்போலவே தனியார் கட்டிடங்கள் உள்ளிட்ட எல்லாவித கட்டுமானங்களிலும் ஒரு துளி தண்ணீர் கூட வீணாகதாவாறு ஒரு போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அதைப்போலவே நாம் பயன்படுத்தும் தண்ணீரை, மறுசுழற்சி செய்யும் முயற்சிகளுக்கு அரசாங்கம் நல்ல முறையில் ஆதரவு தர வேண்டும். இது குறித்த பொதுமக்களின் தவறான எண்ணம் மாற்றப்பட வேண்டும். முடிந்த அளவுக்கு தண்ணீர் மறுசுழற்சி செய்து பயன்படுத்தப்பட வேண்டும். கூடவே உடனடியாக தமிழகத்தில் உள்ள போர் வெல்கள் கிணறுகள் குறித்த உண்மையான எண்ணிக்கையை கண்டறிந்து, அவர்கள் பயன்படுத்தும் தண்ணீரை நேர்மையான முறையில் அளவிட வேண்டும். அந்த போர் வெல்களில் தண்ணீரை ரீசார்ஜ் செய்யும் வசதி இருக்கிறதா என்று ஆய்வு செய்து அதற்கான ஏற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

அதெல்லாம் முடியாது, இது என் கிணறு, நான் இப்படித்தான் இருப்பேன் என்று சொன்னால் அதற்கு தகுந்த விலையை நாம் கொடுக்க வேண்டும். ஒரு காலத்தில் காலரா, பிளேக் போன்ற நோய்களுக்கு ஊரையே காலி செய்த வரலாறுகள் உண்டு. போரினால் அகதிகளாகி இடம் பெயர்வது இன்றும் நடக்கிறது. அந்த பட்டியலில் புதிதாக தண்ணீர் கதிகள் என்ற புது வகையும் சேரும்.

அப்துல்கலாம் சொன்னது போல 2020ல் நாம் வல்லரசாக மாறாவிட்டாலும் ஒன்றும் குடிமுழுகி விடாது; பதிலுக்கு தண்ணீருக்காக அகதிகளாக அலையும் நிலையை 2030ல் உருவாக்காமல் இருந்தால் சரி. நாம் ஆறிவு கொண்ட மனிதர்களா, அல்லது தண்ணீர் அகதிகளா என்பதை காலம் தீர்மானிக்கப் போவதில்லை. நாம்தான் தீர்மானிக்கவேண்டும்.