கடவுளுக்கு உண்மையில் எத்தனை முகங்கள்?

கேள்விகள் எப்போதும் புது வாயிலைத் திறக்கும் கருவிகளாக அமைகின்றன. அதிலும் உண்மை உணர்ந்த ஒரு ஞானியிடம் கேட்கப்படும் கேள்விகளோ, புதியதொரு பரிமாணத்தை அறிமுகம் செய்துவிடுகின்றன. அந்த வகையில், சத்குருவிடம் கேட்கப்பட்ட சுவாரஸ்யம் மிக்க இரண்டு கேள்விகளும், சத்குருவின் பதில்களும் உங்களுக்காக இங்கே!

கேள்வி 1: கடவுளுக்கு உண்மையில் எத்தனை முகங்கள்?

சத்குரு:

கடவுள் என்பவர் உங்களைவிட பிரமாண்டமானவராக இருக்க வேண்டும் என்பதற்காக, அவருக்கு பதினாறு கைகள் இருப்பதாக நீங்கள்தான் உருவகப்படுத்தினீர்கள். கடவுளுக்கு நான்கு முகங்கள், ஆறு முகங்கள் என்று கொடுத்தீர்கள்.

உண்மையைச் சொல்லுங்கள்… உங்களுக்கு எத்தனை முகங்கள்? வீட்டில் ஒரு முகம், அலுவலகத்தில் ஒரு முகம். நண்பர்களிடத்தில் ஒரு முகம், பகைவர்களிடத்தில் ஒரு முகம், தெருவுக்குத் தெரு மாற்றுவதற்கு என்று எத்தனை முகங்களைச் சுமந்து கொண்டு இருக்கிறீர்கள்? முருகனைவிட, உங்களுக்குத் தானே முகங்கள் அதிகமாக இருக்கிறது? முகங்களைக் கணக்கெடுத்து கடவுளைத் தீர்மானிப்பது என்றால், நம் அரசியல்வாதிகளுக்கு எதிரில் எந்தக் கடவுளாலும் போட்டி போட முடியாது!

கடவுளுக்கு, நம் முன்னோர்கள் தோற்றம் கொடுத்ததற்கு பல அறிவுப்பூர்வமான காரணங்கள் இருக்கின்றன. அதன் ஆழத்தை புரிந்து கொள்ளாமல், வெறும் மேலோட்டமாக கடவுளின் உருவத்தோடு சிக்கிப்போவது மடமை. உருவத்தோடு கட்டுண்டு, கடவுளைத் தெரிந்து கொண்டுவிட்டதாக நினைப்பது உங்கள் மன அகங்காரத்துக்குத் தீனி போடும் சமாசாரம் அவ்வளவே!

கேள்வி 2: இயற்கையை ரசிப்பதில் ஆன்மீகம் உள்ளதா?

சத்குரு:

“ரவீந்திரநாத் தாகூர் சிறந்த கவிஞர். இயற்கையைப் பற்றி, அழகைப் பற்றி, தெய்வீகத்தைப் பற்றி மிக அற்புதமான கவிதைகளை எழுதியவர்.

அவரைவிட வயதில் மூத்த உறவினர் ஒருவர், தாகூரிடம், ‘மொழியின் மீது உனக்கு இருக்கும் ஆளுமையினால், வார்த்தைகளில் வர்ணஜாலம் செய்து நீ கவிதைகள் புனைகிறாய். ஆனால் நீ எழுதும் உணர்வுகளை உண்மையிலேயே நீ அனுபவத்திருக்கிறாயா?’ என்று கேட்டார். தாகூர் பதில் சொல்ல இயலாமல் தலை குனிந்தார். ‘அதை உணரவேண்டுமெனில் வாழ்க்கையை நீ இன்னும் தீவிரமாக வாழ வேண்டும்’ என்று அந்த உறவினர் சொல்லிச் சிரித்துவிட்டுப் போய்விட்டார்.

மழை பெய்து ஓய்ந்திருந்த ஒரு மாலை நேரம். சூரிய அஸ்தமனத்தை ரசிக்க, தாகூர் கடற்கரை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். தெருவோரங்களில் ஆங்காங்கே தண்ணீர் அழுக்குக் குட்டைகளாகத் தேங்கிக் கிடந்தது. அதில் கால் வைத்துவிடக்கூடாது என்பதற்காகக் குனிந்து பார்த்தபடி, நடந்து போய்க் கொண்டு இருந்தார் தாகூர். திடீரென்று பிரமித்துப் போனார். கடற்கரையில் போய் அவர் கவனித்து ரசிக்க நினைத்த சூரிய அஸ்தமனம் அங்கே ஒரு அழுக்குக் குட்டையில் நிகழ்ந்து கொண்டிருந்தது. தாகூரின் கண்கள் உணர்ச்சிப் பெருக்கால் ததும்பின. அந்தக் கணமே பிரபஞ்சத்தின் மேன்மையான அர்த்தத்தை உணர்ந்துவிட்ட பரவசம் அவர் முகத்தில் பிரதிபலித்தது. தன் உறவினரின் வீட்டுக்கு ஓடினார். தாகூரைப் பார்த்ததுமே அந்த உறவினருக்குப் புரிந்துவிட்டது. ‘உண்மையை நீ தரிசித்துவிட்டாய். அதை உன் முகத்தில் காண முடிகிறது’ என்றார் அவர். இப்படி ஒவ்வொரு சின்ன விஷயத்திற்குள்ளும் தெய்வீகம் புதைந்துள்ளது. வாழ்க்கையை முழு தீவிரத்தோடு வாழாததால், நீங்கள்தான் அதைக் காணத் தவறுகிறீர்கள்!”