இசைக்கு ஒரு உருவம் இளையராஜா

2.6.1943 ஆம் ஆண்டு வரைபடத்தில் கூட காணமுடியாத ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த ஆண் குழந்தையின் அழுகுரல், இசையை கேட்டது என்றாலும் அது நம்பக் கூடியதாகவே இருக்கும். ஏன்னென்றால் அந்த குழந்தையின் விரல் நுனியில் உருவாகும் இசை, ஐப்பசி மாத மழைப்போல் நிற்காமல் நனைத்து கொண்டே இருக்கிறது இன்று வரை. அந்த குழந்தையின் அடையாளம், கருமேகத்திற்கு வெண்போர்வை போர்த்தியது போலும், அந்த குழந்தையின் பாதம்படும் இடங்கள் எல்லாம் பல்லவி பாடும், அதன் பெயர் சொல்லும் நாக்கெல்லாம் சுவரங்கள் ஊறும். இதன் குரல் கேட்டு உறங்காத குழந்தையும் இல்லை, இதன் இசை கேட்டு மயங்காத இளமனசுகளும் இல்லை. அந்த குழந்தை டேனியல் ராசய்யா (எ) ஞானதேசிகன் அன்று. இன்று இசையின் ராஜாவாக வலம் வரும் இளையராஜா.

இக்காலகட்டத்தில் பாடலுக்கு அடையாளம் படம் தான் , ஆனால் இளையராஜா பாடல் மட்டும் தான் படத்திற்கே  அடையாளமாக இருக்கிறது இன்று வரை .

இவரின் பயணம் தொடங்கியது எப்படி தெரியுமா?. 1958ம் ஆண்டு இவரது அண்ணன் பாவலர் வரதராஜனுடன் அவருக்கு உதவியாக கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சார பாடகராக சென்றார். இவர் பிரச்சார பாடகராக மட்டும் 1000 மேடைகளில் தனது குரலை பதிவு செய்துள்ளார். அதன் பின் சினிமாவின் மீது கொண்ட ஆசையால் பாட்டு கேக்க வைத்திருந்த ரேடியோவை விற்று தனது இசை பயணத்தை 1969ல் ரயிலில் ஆரம்பித்தார். இப்போது இவர் பாடல் குடிசை வீடு முதல் சொகுசு பங்களா வரை, தரை வழிப்பயணம் முதல் வான் வழி பயணம் வரை எல்லையில்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.இவரது மேற்கிந்திய இசைக்கு குரு மாஸ்டர் தன்ராஜ். இவர் இல்லை என்றல் இளையராஜா இல்லை. மாஸ்டர் தன்ராஜ் பணமே வாங்காமல் இசை கலையை கற்றுக்கொடுத்தார். அது மட்டுமல்லாமல் பியானோ, கிட்டார், ஹொர்மோனியம், கீபோர்ட், புல்லாங்குழல் ஆகியவற்றின் நுணுக்களுடன் கற்றுக் கொடுத்தார்.

அவரின் உதவியுடன் கிளாசிக் கிட்டார் இசையில் லண்டன் பிரினிட்டி இசை கல்லூரியின் பாடத்திட்டத்தில் 8 வது கிரேட் வரை முடித்து, அதில் தங்க பதக்கமும் பெற்றுள்ளார். பகுதி நேர வாத்திய கலைஞராக கன்னட இசையமைப்பாளர் G.K. வெங்கடேசனின் உதவியாளராக 200 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார். “அன்ன கிளி உன்ன தேடுதே” என ஆரம்பித்த அவரது திரை பயணம் ஒரு பறவை போல் நிற்காமல் பறந்து கொண்டே இருக்கிறது. “தென்றல் வந்து தீண்டும் போது” என்ற பாடல் இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. ஆனால், இதனை உருவாக்க அவர் எடுத்துக் கொண்ட நேரம் அரை மணி நேரம் தான். நம்ப முடியாத அளவுக்கு மிகவும் திறமையான மனிதன் தான் இளையராஜா. இவரது பொழுது போக்கு கதை, கவிதை, கட்டுரை, புகைப்படம் எடுப்பது, அதனை பிரேம் செய்து மாட்டுவது போன்றவை தான்.

கண்ணதாசன் பாடல் மூலம் அறிமுகமான இவர் தான்,கண்ணதாசனின் கடைசி பாடலுக்கும் இசைஅமைத்தவர் . லண்டன் ராயல் பீல் ஹோர்மோனிக் ஆர்கெஸ்ட்ராவில் இசை அமைத்த ஒரே ஆசிய இசையமைப்பாளர் இவர்தான். இந்த ஆர்கெஸ்ட்ராவில் இசையமைக்கும் இசையமைப்பாளர்கள், மேஸ்ட்ரோ என்று அழைக்கப்படுவார்கள். அதனால் தான் இவரை மேஸ்ட்ரோ என்று அழைக்கிறார்கள்.இவரின் முதல் படம் இசையமைக்கும் பொது அவரின் வயது 33.

இசைக்கு ஒரு உருவம் இருந்தால் அது இளையராஜா போன்று தான் இருந்திருக்கும்.

நான்
உங்களில் ஒருவன்.