ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே லட்சியம்!

நம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று பல அரசியல் தலைவர்கள் பல திட்டங்களை கையாண்டு வருகின்றனர். ஒரு பெண் படித்தால் அந்த குடும்பமே படித்த மாதிரி என்று பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இந்த நிலை இன்னும் மாறவில்லை என்று கூற வேண்டும். காரணம் படிப்பில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படுகிறது என்பது நிதர்சனமான உண்மை.

அதனால் இன்று பெண் சமுதாயம் மேலோங்கி நிற்கிறது. அதற்கு உதாரணமாக இன்று நாம் பார்க்க இருக்கும் இந்த பெண், அரிதான திறமையை தனக்குள் வைத்துக் கொண்டு, வெற்றி மாலை சூடி வலம் வருகிறார். தன் திறமையை பற்றியும், அனுபவங்களை பற்றியும் நம்முடன் பகிர்ந்தவைகளை காண்போம்:

உங்களை பற்றி சில வார்த்தைகள்?

எல்லோருக்கும் வணக்கம். என் பெயர் ஹரிணி. நான் கோவை சுகுணா பிப்ஸ் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். எனக்கு குதிரை சவாரினா ரொம்ப புடிக்கும். செல்லப்பிராணிகளையும் ரொம்ப புடிக்கும்.

குதிரை சவாரி போட்டியில் உங்களுக்கு ஆர்வம் வரக் காரணம்?

எனக்கு செல்லப்பிராணிகள் என்றால் மிகவும் பிடிக்கும். மிகவும் பிடித்த விலங்கு குதிரை. காரணம், அதன் தோற்றம், வேகம், சுறுசுறுப்பு, அழகான முடி, நீள உடல், கம்பீரமான தோற்றம் என்று குதிரை எவ்வளவு அழகு. விலங்குகளில் மிக வேகமாக ஓடும் விலங்கு சிறுத்தையானாலும் யாரும் அதன் முதுகில் சவாரி செய்வதில்லை. நாம் சவாரி செய்யும் விலங்குகளில் மிகுந்த வேகமாக ஓடக்கூடிய விலங்கு குதிரை தான். குதிரை மிகவும் சக்தி வாய்ந்த விலங்கு. குறிப்பாக அதன் சக்தி கால்களில். குதிரை ஒரு வீட்டு விலங்கு தான். கொஞ்சம் பழக்கி விட்டோம் என்றால் நாம் சொல்வதையெல்லாம் கேட்கும். இப்படி குதிரையின் குணங்கள் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. குதிரை போல் வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டும் என பல முறை நினைத்ததும் உண்டு. மேலும் குதிரை சவாரி போட்டிகளை பார்த்திருக்கிறேன். பிறகு என் ஆர்வத்தை என் தந்தையிடம் கூறினேன். அவரும் என் விருப்பத்தை நிறைவேற்றவே என்னால் சாதிக்க முடிந்தது.

உங்கள் சாதனைகளை பற்றி சொல்லுங்கள்?

மாநில அளவில் பல சாதனைகள் படைத்துள்ளேன். மறக்க முடியாத நிகழ்வு என்றால், சமீபத்தில் தேசிய அளவிலான குதிரை சவாரி போட்டி பெங்களூரில் நடந்தது. அதில் பல மாநிலங்களை சேர்ந்த 120 சிறுவர், சிறுமியர் 60செ.மீ, 90 செ.மீ உயரம் தாண்டுதல் பிரிவுகளில் பங்கேற்றனர். இதில் நான் 60செ.மீ உயரம் தாண்டுதல் பிரிவிலும், 90 செ.மீ உயரம் தாண்டுதல் பிரிவிலும் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றேன். இது என் வாழ்நாளில் மறக்க முடியாத சாதனையாகும்.

மற்ற விளையாட்டுத் துறைகளில் உங்களுக்கு ஈடுபாடு உண்டா?

நான் தடகள போட்டியில் மாநில அளவில் விளையாடி உள்ளேன். அதுமட்டுமல்லாமல், துப்பாக்கி சுடுதல் போட்டியிலும் பங்கேற்று பரிசுகளை வாங்கியிருக்கிறேன். நன்றாக ஓவியம் வரைவேன். ஆனால் இவைகளை காட்டிலும் எனக்கு மிகவும் பிடித்தது குதிரை சவாரி போட்டி தான்.

பெற்றோரின் ஒத்துழைப்பு பற்றி?

என் அம்மா, அப்பா இருவருமே நன்கு ஒத்துழைத்தார்கள். அப்பா விடம் நான் சொன்னதும் என்னை பயிற்சியில் சேர்த்து விட்டார். என் பெற்றோருடைய முழு ஒத்துழைப்பும், ஊக்குவித்தலும் எனக்கு முழுமை யாக கிடைத்துள்ளது. என் அப்பா அடிக்கடி ஒன்று கூறுவார். எந்த வேலை செய்தாலும் அதில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்று. மேலும் பெண் என்பவள் எப்பொழுதும் துணிச்சலாகவும், தைரியமாகவும் இருக்க வேண்டும் என்று சொல்லுவார். அவர் கொடுத்த தைரியம் தான் இன்று என்னை வெற்றி பெறச் செய்தது.

உங்களுடைய லட்சியம்?

ஒவ்வொரு போட்டியிலும் ஒரு சிறந்த விளையாட்டு வீரர் இருப்பார். உதாரணமாக கிரிக்கெட் னா சச்சின், ரன்னிங் னா பி.டி.உஷா, இந்த மாதிரி ஹார்ஸ் ரைடிங் என்றால் ஹரிணி என்று பெயர் வாங்க வேண்டும். மேலும் ஒலிம்பிக்கில் விளையாடி இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் பெற்றுத் தர வேண்டும் என்பதே என் லட்சியம்.

உங்கள் பயிற்சி நேரம்?

தினமும் ஒரு மணிநேரம் பயிற்சி பெறுகிறேன். விடுமுறை நாட்களில் முழு பயிற்சியும் எடுத்து வருகிறேன். அதே போல் என்னுடைய பயிர்ச்சியாளரும் எனக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுக்கிறார்.

உங்களது முதல் பயிற்சி பற்றி?

நான் என்னுடைய 12 வது வயதில் பயிற்சியை ஆரம்பித்தேன். பொதுவாக விலங்கினம் என்றாலே அனைவருக்கும் ஒரு பயம் இருக்கும். ஆனால் எனக்கு செல்லப்பிராணிகள் பிடிக்கும் என்பதால் பழகுவதில் எந்த சிரமமும் இல்லை. மேலும் குழந்தைகள், பெரியவர்கள் என பயிற்சி பெறுபவர்களுக்கு தகுந்த மாதிரி குதிரையை தேர்ந்தெடுத்து கொடுப்பர். இதனால் பயிற்சி பெறவும் எளிதாக இருந்தது. மேலும் குதிரை சவாரி செய்வதன் மூலம் மனம் ஒருநிலையாக இருக்கும், கவனங்கள் சிதறாது. இதை நான் படிக்கும் பொழுதும் உணர்ந்திருக்கிறேன்.

– மேகலா நடராஜ்