ஈஷாவின் உதவியால் ரூ.6.5 லட்சம் லாபம் ஈட்டிய மலைவாழ் மகளிர் குழு

கோவை ஆதியோகி அருகே பெட்டிக் கடை மற்றும் பேட்டரி வாகனம் இயக்கி வரும் தாணிக்கண்டி மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த 11 பேர் கொண்ட மகளிர் குழு ஈஷா யோகா மையத்தின் உதவியால் வெறும் பத்தே மாதத்தில் ரூ.6.5 லட்சம் லாபம் ஈட்டியுள்ளது. ஈஷா யோகா மையம் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்துக்கு பெரிதும் உறுதுணையாக இருந்து வருகிறது. ஆயிரக்கணக்கானோர் ஈஷா யோகா மையத்தின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.

குறிப்பாக, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி இருக்கும் மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு ஈஷா யோகா மையம் பல்வேறு பணிகளை செய்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, தாணிக்கண்டி கிராமத்தைச் சேர்ந்த 11 பேர் அடங்கிய செல்லமாரியம்மன் பழங்குடியின மகளிர் சுய உதவி குழுவினருக்கு ஆதியோகி அருகே ஒரு பெட்டிக் கடையை கடந்தாண்டு ஏப்ரல் மாதம் இலவசமாக அமைத்து கொடுத்தது. மேலும், சர்ப்ப வாசல் முதல் ஆதியோகி வரை பொதுமக்களை அழைத்து செல்வதற்காக ஒரு பேட்டரி வாகனத்தையும் இலவசமாக வழங்கியது.

கடைக்கு தேவையான அனைத்து உதவுகளும் செய்து தரப்பட்டன. பேட்டரி வாகனமும் அவ்வப்போது இலவசமாக பழுது பார்த்து தரப்பட்டது. 10 மாதங்கள் கடந்த நிலையில், பெட்டிக் கடை மற்றும் பேட்டரி வாகனம் மூலம் அந்த மலைவாழ் மகளிர் குழு  10 மாதத்தில் ரூ.15 லட்சத்துக்கு வணிகம் (டெர்ன் ஓவர்) செய்துள்ளது. வேலை ஆட்களுக்கான சம்பளம், கொள்முதல் செலவு உட்பட அனைத்து செலவுகளும் போக ரூ.6.5 லட்சம் லாபம் கிடைத்துள்ளது. அவர்கள் நபர் ஒருவருக்கு தலா ரூ.200 ஐ மட்டுமே முதலீடாக வைத்து இந்த மகளிர் சுய உதவி குழுவை தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், அன்றாட பிழைப்புக்கே கஷ்டப்பட்டு கொண்டிருந்த அந்த பழங்குடியின மக்களின் குடும்ப வாழ்வாதாரம் நன்கு மேம்பட்டுள்ளது.