என்.ஜி.பி.கல்லூரியில் தமிழோசை இதழ் வெளியீட்டு விழா

என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளங்கோவடிகள் தமிழ் மன்றம் மற்றும் தமிழ்த்துறையின் சார்பாக மாணவர்களின் எழுத்தாற்றலை வெளிக்கொணரும் விதமாக 21ஆம் தமிழோசை இதழ் வெளியீட்டு விழா அண்மையில் என்.ஜி.பி.கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் நீ.குப்புச்சாமி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் வெ.இராஜேந்திரன் அவர்கள் தொடக்கவுரை வழங்கினார். டாக்டர் என்.ஜி.பி.கல்விக்குழுமங்களின் இயக்குநர் பெ.இரா.முத்துசாமி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி அவர்கள் தலைமையுரை வழங்கினார். அவர் தமது உரையில், தமிழ் மொழி மிக இனிமையான மொழி என்று குறிப்பிட்டார். தமிழ் மொழியில் உள்ள செம்மையும் நுட்பமும் வேறெந்த மொழிகளிலும் இல்லை என்று கூறினார். தமிழ் மொழியின் சிறப்பை இன்றைய இளைய தலைமுறை மாணவர்கள் கட்டாயம் உணர்ந்து கொண்டு அம்மொழிமை ஆழமாகக் கற்றல் அவசியம் என்று கூறினார். சென்னை, நீதிபதி பஷீர் அகமது மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் இ.சா.பர்வீன் சுல்தானா அவர்கள் தமிழோசை இதழை வெளியிட்டார். டாக்டர் என்.ஜி.பி.கல்விக் குழுமங்களின் செயலர் மருத்துவர் தவமணிதேவி பழனிசாமி அவர்கள் முதல் இதழைப் பெற்றுக் கொண்டார்.

தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் கி.முருகேசன் அவர்கள் சிறப்பு விருந்தினரைப் பற்றிய அறிமுகவுரையாற்றினார். சிறப்பு விருந்தினர் பேராசிரியர் இ.சா.பர்வீன் சுல்தானா அவர்கள் ‘திக்கெட்டும் தமிழோசை’ என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில்,  தாய் மொழியை மாணவர்கள் ஆழ்ந்து படித்தால் அதன் இனிமை தெள்ளத் தெளிவாக விளங்கும் என்றார். தாய்மொழியின் மீது ஒவ்வொருவருக்கும் மாறாத அன்பு இருத்தல் வேண்டும் என்று கூறினார். மாணவர்களின் சிந்தனைத் திறன் தாய்மொழியில் கல்வி கற்கும் பொழுது அதிகரிக்கும் என்று வலியுறுத்தினார். இலக்கியங்கள் வெளிப்படுத்தும் மொழியின் அழகு, வன்மை, நுட்பங்களைத் தமது பாணியில் சிறப்பாக விளக்கினார். பாரதியின் தமிழ்ப்பற்றையும் தமிழாற்றலையும் மாணவர்கள் உணர்ந்து கொள்ளுமாறு எடுத்துரைத்தார். தமிழோசை இதழ் பதிப்பாசிரியர் சு.தங்கமணிகண்டன் அவர்கள் நன்றியுரை வழங்கினார். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுபெற்றது.