வாழ்க்கையை மாற்றிய ‘ராட்சசன்’

ராட்சசன் படத்தின் வில்லன் சரவணன் நேர்காணல்

தமிழ் சினிமாவில் பல புதுமைகள் நடந்து கொண்டிருக்கும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. வளிவரும் ஒவ்வொரு படமும் பல புதிய முயற்சிகளைக்  கடந்து வெளியாகிறது. மக்களைக்  கவரும் படங்கள் எதுவாக இருந்தாலும் அது தானாக வெற்றிப் பாதைக்கு சென்றுவிடும். வாரத்துக்கு ஒரு நல்ல படம் வர வேண்டும் என்று மக்கள் நினைத்து கொண்டு இருக்கும் தருணத்தில், 2018 இறுதியில் ஒரே சமயத்தில் மூன்று நல்ல படங்கள் வெளியாகி ஒட்டுமொத்த மக்களின் பாராட்டையும் பெற்றது.

96, ராட்சஷன், மேற்குத் தொடர்ச்சி மலை ஆகிய இந்த மூன்று பட இயக்குநர்கள் வரும் காலங்களில் தமிழ் சினிமாவை வரலாற்றையே புரட்டிப் போடுவார்கள் என்று பலராலும்  எதிர்பார்க்கபடுகிறது. கதை, திரைக்கதை சிறப்பாக இருக்கும்போது மக்கள் பாராட்டு கிடைக்கும். மேலும் அப்படகளில் நம் மனதில் ஆழமாகப் பதியும் அளவுக்கு நடித்த நடிகர்களை நாம் என்னைக்கும் மறக்க மாட்டோம். அப்படி ஒரு நடிகர்தான் ‘ராட்சசன்’ படத்தில் கிறிஸ்டோபர் வேடத்தில் நடித்த சரவணன். அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட கருத்துக்களைக் காண்போம்.

‘என் சொந்த ஊர் அரியலூர். நான் படித்தது எல்லாமே திருச்சியில். சின்ன வயதில் இருந்து படிக்கும் ஆர்வம் அதிகம். அதுவும் சினிமா சம்பந்தப்பட்ட செய்திகளை படிப்பதில் மிகவும் ஆர்வம். இதன் மூலம்  சினிமா மிது ஆர்வம் அதிகரிக்க ஆரம்பித்தது. அந்த ஆர்த்தின் அடிப்படையில் 2003 இல் சினிமாவில் வாய்ப்புத் தேடி சென்னை வந்தேன். ஆனால், அப்போது நான் சொல்ல முடியாத துன்பங்களைக்  கடந்துசென்றேன். பிறகு மீண்டும் ஊருக்குச் சென்றுவிட்டேன். ஆனாலும் சினிமா ஆசை விடவில்லை. எப்படியும் கஷ்டப்பட்டு வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணத்தில், 2006 இல் மீண்டும் சென்னைக்கு வந்தேன்.

நடிக்க வாய்ப்புக் கேட்டு பல இடங்கள் சென்றது உண்டு. அப்போது எனக்கு மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவருடன்  பழக்கம் ஏற்பட்டது அவரின் நட்பு மூலமாக எங்கெல்லாம்  படப்பிடிப்பு நடக்கிறது என்று கவனித்து, அங்கு சென்று வாய்ப்புக் கேட்டு காத்திருந்தேன். அப்படி பல நல்ல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்க வாய்ப்பு அமைந்தது. இருந்தாலும் அது சரியான நேரத்தில் கிடைக்காது. அந்த நிமிடம் என் மனதில் நடக்கும் போராட்டத்தை சொல்ல முடியாது. இருப்பினும், சினிமாவை விட்டுப் போகாமல் இருக்க ‘டப்பிங் கார்ட்’ எடுத்துக் கொண்டேன்.

கொஞ்சம் கொஞ்சமாக திரைத்துறையில் நண்பர்கள் பலர் கிடைக்க ஆரம்பித்தனர். அவர்கள் என் திறமையைப் புரிந்துகொண்டு ஊக்கப்படுத்துவார்கள். இந்நிலையில் ‘முண்டாசுப்பட்டி’ படத்தை இயக்கிய ராம்குமாரின்  பழக்கம் ஏற்பட்டது. பின்னா அவரின் ‘ராட்சசன்’ படத்தின் கிறிஸ்டோபர் கதாபாத்திரத்துக்கான தேர்வு நடைபெற்றபோது, நானும் அதில் கலந்து கொண்டேன். பலரும்  பங்கேற்று இருந்தாலும் என்னைத்  தேர்வு செய்தார் இயக்குநர். பிறகு படத்தில் அந்த கதாபாத்திரம் எப்படி இருக்க வேண்டும் என்று சொன்னார் ராம்குமார். அதைக் கேட்டு என்னைத் தயார்படுத்திக்  கொண்டேன். கிறிஸ்டோபர் மற்றும்  அவரது அம்மா கதாபாத்திரம் இரண்டும் நானே நடிக்கும் சூழல் முதலில் ஏற்பட்டது.

பிறகு யாஸிப், கிறிஸ்டோபர் பள்ளி மாணவன் கதாபாத்திரத்தில் நடித்தார், நான் அம்மா வேடம் எடுத்து நடித்தேன். கிறிஸ்டோபர் பெரிய மனிதனான பிறகு, அந்த பாத்திரத்திலும்  அம்மா பாத்திரத்திலும்  நானே நடித்து முடித்தேன். படத்தின் கடைசி 30 நிமிடம் என்னைச்  சுற்றி கதை வலம் வருவதால் சரியாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்  எனக்கு சிறு பயம் இருந்தது, என் நடிப்பைப்  பார்த்து இயக்குநர் என்னை மேலும் சரியாக பயன்படுத்தினார். இந்த தருணத்தில் அவருக்கு நான் எனது மனமார்ந்த நன்றிகளை சொல்லிக்கொள்கிறேன். கதாபாத்திரம், நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் மேக் அப் மிகவும் சவாலாக இருந்தது. அதைத்திறம்பட செய்த ‘மேக் அப்’ நபருக்கு எனது பாராட்டுகளைத் தெரிவிக்க வேண்டும். ஒரு நடிகன் உருவாவதற்கு பலரின் உழைப்பு தேவைப்படுகிறது என்பதை ராட்சஷன் படம் எனக்கு உணர்த்தியது.

இயக்குநர் என் கதாபாத்திரத்தைப்  பற்றி கூறும்போது, இந்த மாதிரியும் இருக்கின்றர்களா என்று அதிர்ச்சியடைந்தேன். ஆனால் இதுபோன்ற இன்னும் நமக்குத்  தெரியத பல சைக்கோ மனிதர்கள் உலகம் முழுக்க உலவிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். படம் வெளியானதும் எனக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை, சொல்ல முடியாத சந்தோசத்தை அடைந்தேன். படம் வெளியாகி 25 நாட்கள்  கடந்தபிறகு அப்படத்தின்  கிறிஸ்டோபர் கதாபாத்திரத்தில்  நான்தான் நடித்தேன் என்று படக்குழு விழா எடுத்து அறிமுகம் செய்து வைத்தது, என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு. இது, எந்த அறிமுக நடிகருக்கும் கிடைக்காத பாராட்டு.

அழகான மனைவி, இரண்டு குழந்தைகள் என நல்லதொரு குடும்பம். படம். ஆரம்பிக்கும்போது கல்யாணம் ஆனது, படம் வெளியாகும்போது இரண்டு குழந்தைகள். இதனால் எனக்கு இரட்டை சந்தோசம். கிறிஸ்டோபர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக என் உடல் எடையைக்  குறைத்துக்கொள்ள ஆரம்பித்தேன். என் உழைப்பைக் கண்டு, ஊக்கப்படுத்தி என் வெற்றிக்கு துணையாக இருந்தார். நம்  திறமையை சரியாகப் புரிந்து கொண்டவள் மனைவியாக அமைவது கடவுள் கொடுத்த வரப்பிரசாதம். வரும் காலங்களில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களைத் தேர்வு செய்து நடிப்பேன். தமிழ் மற்றும் மலையாளம் படங்களில் என்னை பார்க்கலாம். அழகான பாதையில் சென்று கொண்டிருக்கும்  தமிழ் சினிமாவுக்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும்’ என்றார்.

பாண்டிய ராஜ்