வறுமை, கல்வியின்மை, அறியாமை இருக்கக் கூடாது

மணிகண்டன், ஐ.ஏ.எஸ் , பி.எஸ்.ஜி. முன்னால் மாணவர்.

‘கனவு மெய்ப்பட வேண்டும்’ என்ற சொல் சாதிக்க நினைக்கும் அத்துணை இளம் வயதினருக்கும் இருக்கும். நம் வாழ்க்கைப்பாதை எப்படிச் செல்லும் என்று யாருக்கும் தெரியாது. மனிதனாகப்  பிறந்த அனைவருக்கும் தோல்வி அடிக்கடி நேரும். ஆனாலும் வெற்றி தாமதமாக வந்து சேரும். ‘வெற்றியின் முதல்படி தோல்வி’ என்ற பழமொழி உள்ளது. மனிதன் தோல்வியை விட வெற்றியைத்தான் காதலிப்பான். ஆனால் எனக்கு தோல்வியும் பிடிக்கும் என்று சொல்லும் மணிகண்டன் ஐ.ஏ.எஸ் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல்.

‘‘ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு இலட்சியம் இருக்கும். என் வாழ்க்கையும் இலட்சியம் சார்ந்து தான் இருந்தது. எனக்குப் பிடித்த வாழ்க்கையை வாழ்வதற்கும்,  இந்த சமுதாயத்தின் மீது அக்கறை வருவதற்கும் காரணமானவர்கள்  என் பெற்றோர். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கற்பனை உலகம் இருக்கிறது. அதை எப்போதும் எழுத்து வடிவில் நாம் காண்பிக்க வேண்டும். அப்போது தான் நம்மை நாமே புரிந்து கொள்ளக் கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். அத்தருணத்தில் தான் நமது வாழ்க்கைப் பாதை எதை நோக்கி பயணிக்க வேண்டும் என்கின்ற வாசல் நம் கண் முன் வந்து நிற்கும்.

அதை நாம் மிக சரியாக யோசித்து செயல்பட்டால் நம்மைச் சுற்றி ஒரு அழகானசூழல் நிலவும். இந்த அனுபவம், என் பள்ளிப் பருவத்தில் ஏற்பட்டது. அப்போது தான் என் வாழ்க்கை மீது ஒரு பிடிப்பு ஏற்பட்டது என்பதை யாரிடமும் கூறவில்லை. நான் வெற்றிப் படிக்கட்டைத் தொடும் போது பல மாணவ, மாணவியருக்கு அவர்களின் வெற்றிக்கு ஒரு பாலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இந்த உணர்வு என் மனதில் சந்தோசத்தை ஆழமாக விதைத்தது.

என் பள்ளிப் பருவம் என்னை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல மிக உறுதியாக இருந்தது. தொல்காப்பியர் நடுநிலைப் பள்ளி, என்.எல்.சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. இங்கு தான் என் இலட்சியப்பாதை தொடங்கிய இடம்.ஒருமாணவனுக்கு படிப்பின் மேல் எப்போதும் ஆர்வம் வராமல் இருக்கும். ஆனால் எனக்கு என் பள்ளிப் படிப்பின் மேல் ஆர்வம் வர ஆரம்பித்தது இங்கு தான்.  இந்த சமூகத்துக்கு நாம் ஒரு நல்ல விஷயம் பண்ண வேண்டும் என்ற எண்ணம் தோன்றியவுடன் என் பள்ளிப்படிப்பில் மிகச்சிறந்த மாணவனாக புது களத்தில் பயணிக்கத் தொடங்கினேன்.

தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு மாணவச¢ செல்வங்களும் பிடித்தும் பிடிக்காமல் பேசக்கூடிய மொழி ஆங்கிலம் தான். ஆனால் நாம் யாரும் நம் தாய்மொழி மேல் அக்கறை செலுத்துவதில்லை. எனக்குள் தமிழ் ஆர்வம் வர வைத்தது எனது தமிழ் அய்யா முத்துபாலசுவாமி அவர்கள். என் தமிழ் அய்யாவின் ஊக்கத்தின் காரணத்தினால் நான் கவிதைத் தொகுப்பு எழுத ஆரம்பித்தேன். பிறகு நான் 12 ஆம் வகுப்பு படிக்கும்போது என் முதல் புத்தகம் ‘புறப்படு தோழா” என்ற பெயரில் வெளியானது. இதற்கு ஊன்றுகோலாக இருந்தது எனது தமிழ் அய்யா முத்துபாலசுவாமி மற்றும் தாவரவியல் ஆசிரியர் நடராஜ் ஆகியோர் தான்.

நான் பிறந்து வளர்ந்தது நெய்வேலிபக்கத்தில் வடக்கு மேலூர் கிராமம். எனக்கு சிறு வயதில் இருந்து நம் நாட்டின் மேல் அதீத அக்கறை உண்டு. அப்போது என் மனதில் மக்களுக்காக சமூகப்பணியாற்ற வேண்டும் என்றால் ஒரு மருத்துவர் ஆக வேண்டும் என்ற எண்ணமே இருந¢தது. அதனால¢ அதற்குண்டான ஆயத்த பயணத்தில் இறங்கினேன். 12ம் வகுப்பு படிக்கும் போது கணக்குப்பாடத்தில் மதிப்பெண் குறைந்த காரணத்தினால் நான் மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு சரிந்தது. ஆனால் என்னுடைய உண்மையான திறமை எது? அது எங்குள்ளது? என்று அப்போது நான் உணரவில்லை.

அதனால் மருத்துவம் சார்ந்த படிப்பு படிக்க வேண்டும் என்ற யோசனை எனக்கு வந்தது. பி. பார்மசி., படிப்பை எடுத்து படிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். அரசுக் கல்லூரியில் அப்படிப்பைத் தொடர வேண்டும் என்று முடிவு செய்து முயற்சித்தேன். ஆனால் எனக்கு அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. அப்போது என் திறமையையும் என் மதிப்பெண்ணையும் புரிந்து கொண்டு எனக்கு வாய்ப்பு அளித்தது பி.எஸ்.ஜி.கல்லூரி. எனது பி.பார்மசி. படிப்பை வெற்றிகரமாக பி.எஸ்.ஜி. இல் முடித்தேன். என் கல்லூரிச் சூழல் என் மனதையும் என் வாழ்க்கைப்  பயணத்தையும் வேறு ஒரு அத்தியாயத்துக்கு கொண்டு சென்றது.

2005 முதல் 2009 வரை என் பி.எஸ்.ஜி.கல்லூரி வாழ்க்கை என் வாழ்நாளில் எப்போதும் மறக்க முடியாது. அங்கிருந்த ஆசிரியர்கள், எனக்கு ஒரு சகதோழனாக இருந்து என்னை வழிநடத்தி சென்றனர். ஐஏஎஸ்ஆக வேண்டும் என்ற கனவு எனக்குள் இருந்தது என்பதை நான் புரிந்து கொள்ளாமல் இருந்தேன்.

அந்த தருணத்தில் தான் எனது பள்ளிப் பருவத்தின் போது நடந்த சம்பவம் என் வாழ்க்கைப் பயணத்தை எவ்வாறு, எதை நோக்கிக் கொண்டு செல¢வது என்பதற்கு விடை கொடுத்தது. சுனாமி, எங்கள் ஊரைப் புரட்டி போட்டிருந்த நேரம். அப்பொழுது எங்கள் ஊரில் கலெக்டர் ஆக இருந்தவர் ககன்தீப்சிங் பேடி. அவர் செய்த பணியானது, என் மனதில் மிக ஆழமாகப்பதிந்து விட்டது. உடனே எனக்கு ஒரு யோசனை புறப்பட்டது. மக்கள் சமூகப்பணியில் ஈடுபட வேண்டும் என்றால் நாம் கண்டிப்பாக ஐஏஎஸ்ஆக வேண்டும் என்பதைப¢ புரிந்து கொண்டு, ஐஏஎஸ் கனவில் நான் பயணிக்கத் தொடங்கினேன். பி.எஸ்.ஜி.யில் பி.பார்மசி. முடித்து விட்டு சென்னை மெடிக்கல் கல்லூரியில் எம்.பார்ம். ((Pharmaceutical chemistry) முடித்தேன். பிறகு என்னை முழுக்க முழுக்க ஐ.ஏ.எஸ்ஆக வேண்டும் என்ற என்னத்தை என் மனதில் வைத்து கொண்டு படிக்கத் தொடங்கினேன்.

டி.என்.பி.எஸ்.சி. 2012 ஆம் ஆண்டில் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்று மருந்து இன்ஸ்பெக்டராக சென்னை புரசைவாக்கத்தில் பணியாற்றத் தொடங்கினேன். பிறகு 2014 ஆம் ஆண்டு மேனேஜர் தமிழ்நாடு மெடிக்கல் சர்வீஸ் கார்பரேஷனில் பணியாற்றி பிறகு 2011, 2012, 2013 ஆம் ஆண்டுகள¤ல் என் ஐ.ஏ.எஸ்.கனவை வெற்றி பெற வேண்டும் என்று முயற்சித்தேன்.

என் கல்லூரிக் காலங்களில் ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திர பாபு அவர்கள் மாணவர்களை ஊக்குவித்த பேச்சு என் மனதில் ஆழமாக பதிந்தது. அவருடைய பேச்சு என் தோல்வியை உடைத்து எறிவதற்கு ஒரு பாடமாக இருந்தது. 2013 ஆம் ஆண்டு விவேகானந்த இன்கம்டாக்ஸ்சில் பணியாற்றிக் கொண்டு இருந்த ஒருவரின் நட்பு எனக்கு கிடைத்தது. நான் ஐ.ஏ.எஸ் தேர்வை எப்படி கையாள வேண்டும் என்ற விஷயத்தை எனக்குச் சொல்லி கொடுத்தவர் அவர்தான். அவரை நான் சந்திக்கவில்லை என்றால் எனது ஐ.ஏ.எஸ் கனவு பழித்திருக்காது.

என் கனவுப¢பாதை வெற்றி அடைந்துவிட்டது என்று எப்போதும் நான் நினைத்ததில்லை.சமூகப்பணிகளை ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக மக்களுக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் என்னுள் இருக்கிறது. மக்களுக்கு வறுமை, கல்வியின்மை, அறியாமை இருக்கக் கூடாது என்று நான் பாடுபடுவேன். பல நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற இலட்சியம் எனக்கு இருக்கின்றது. அதை மிக கச்சிதமாக செய்து முடிப்பேன். நான் 2016 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவில் தேர்ச்சி பெற்றேன். தமிழ் மொழியில் இத்தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றேன்.

என் வாழ்வில் நல்லதொரு உதாரணப் புருஷர்களாய் இருந்த தமிழ் அய்யா தொடங்கி ஜெய்ஷங்கர் ஐ.ஏ.எஸ். வரை எனது வெற்றிக்கு காரணமாக இருந்தவர்கள். அவர்களைப் பார்த்து வளர்ந்து வந்தவன் நான். நமது மாணவ, மாணவியர் அனைவரும் வெற்றிப்படிக்கட்டில் இருந்து கொண்டு மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதை இந்த இடத்தில் கேட்டுக் கொள்கிறேன். ‘‘கனவு மெய்ப்பட உன் இலட்சியக்கதவைப் பார்த்து பயணிக்க வேண்டும்’’ என்று சொல்லிக் கொண்டு மக்கள் பணியாற்ற நான் புறப்படுகிறேன். நன்றி வணக்கம்’’.

– பாண்டியராஜ்