கலையும், கல்வியும் இரு கண்கள்!

பிஎஸ்ஜி கிருஷ்ணம்மாள் பள்ளி ஆசிரியர் பெருமிதம்...

கல்வியிலும், கலையிலும் சிறந்த தெய்வம் சரஸ்வதி. இவை இரண்டும் ஒருசேர வரமாகக் கிடைத்தால், ஒவ்வொரு பெண்ணும் சரஸ்வதிதான். பெண்ணானவள் தனக்குள் இருக்கும் திறமைகளை நடனத்தின் மூலமாகவோ, கல்வியின் மூலமாகவோ, விளையாட்டின் மூலமாகவோ வெளிப்படுத்துகிறாள். அந்த திறமைகளைப் பலர் பாராட்டுகின்றனர். பாராட்டுதலோடு சிறந்த வழிகாட்டுதலும் கிடைத்தால், அந்த பெண் பெரும் பாக்கியசாலிதான். ஒரு பெண் நல்ல மகளாக, தோழியாக, காதலியாக, மனைவியாக, அம்மாவாக இருந்தால் அவள் சார்ந்த குடும்பத்திற்கு மட்டுமல்ல, அந்த சமுதாயத்திற்கும் பெருமைதான்.அப்படிப்பட்ட ஒரு பெண் தான் விஜயகாமாட்சி கதிர்வேல். இவர் சிறந்த ஆசிரியராகவும், கலைஞராகவும் உள்ளார். இவர் நமது ‘தி கோவை மெயில்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டி:

பரதக் கலையின் மேல் உங்களுக்கு உள்ள ஈடுபாடு?

நான் பிறந்து வளர்ந்தது பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தில்தான். அங்கு முத்தமிழை (இயல், இசை, நாடகம்) வளர்த்த தமிழிசைச் சங்கம் உள்ளது. அப்போது எனக்கு ஏழு வயது. அங்கு நடக்கும் அரங்கேற்ற நிகழ்ச்சிகளை நான் பார்க்கும் பொழுது நாமும் இதுபோன்று நடனமாட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. என் சக தோழிகளும் நடன வகுப்பிற்கு சென்றனர். அப்போது என் விருப்பத்தை என் தந்தையிடம் கூறினேன். என் தந்தை என் விருப்பப்படியே நடன வகுப்பில் சேர்த்துவிட்டார். என் முதல் குரு பரதக் கலைஞர் நடராஜன். அவரிடம்தான் முறைப்படி நடனக் கலையை கற்றுக் கொண்டேன். அன்றிலிருந்து இன்றுவரை இக்கலையினம் தான் கொண்ட ஈர்ப்பு இன்னும் குறையவில்லை.

உங்களுடைய முதல் கலை நிகழ்ச்சி?

1985 இல் முதன்முதலாக மேடை நிகழ்ச்சியில் ஆடினேன். அதில் சிறப்பு விருந்தினராக பொள்ளாச்சி மகாலிங்கக் கவுண்டர் (தமிழிசைச் சங்கம்) பங்கேற்றார். அவர் என்னுடைய நடனத்தைப் பார்த்து பாராட்டினார். அந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட ஆனந்தம் அளப்பறியாதது. அதன்பிறகு பல மேடை நிகழ்ச்சிகளில் நடனமாடியுள்ளேன். பல பரிசுகளும் பெற்றுள்ளேன்.

பரதக் கலையில் உங்கள் ரோல் மாடல்?

பரதக் கலை என்பது நமது பாரம்பரியம். அதில் சிறந்து விளங்கியவர் கலைமாமணி பத்மஸ்ரீ பத்மா சுப்ரமணியம். அவர்தான் என் ரோல் மாடல். நான் பரதக் கலை பயில ஆரம்பித்தபொழுது இவர் எங்களுக்கு ஒரு பெரிய வழிகாட்டியாகத் திகழ்ந்தார். அடுத்து, நடிகைகள் பத்மினி, வைஜெயந்திமாலா, ஷோபனா, ஸ்வர்ணமால்யா என பலர் பரதக் கலையில் சிறந்து விளங்குகின்றனர். அவர்களும் எனக்கு இக்கலையில் ஆர்வம் ஏற்பட ஒரு தூண்டுதல்.

பரதக் கலையில் உங்களின் அடுத்தகட்ட பயணம்?

பல மேடை நிகழ்ச்சிகளில் ஆடியிருக்கிறேன். அடுத்த நிகழ்ச்சி தூர்தர்சன் சேனலில் நடக்கவிருக்கிறது. குடும்பச் சூழ்நிலைக் காலமாக திருமணத்திற்கு பின் என்னுடைய பரதக் கலையைத் தொடர முடியவில்லை. பல தடைகளைத் தாண்டி இப்பொழுது அதற்கான சூழல் உருவாகியுள்ளது. கண்டிப்பாக நான் பரதக் கலையில் சாதிப்பேன்.

கலைஞரைத் தாண்டிய ஆசிரியர் பற்றி சொல்லுங்கள்?

என்னுடைய பள்ளி, கல்லூரி காலங்களில் சிறந்த மாணவியாக திகழ்ந்தேன். நான் M.Sc., M.Ed., முடித்துள்ளேன். அதனுடைய பிரதிபலிப்புதான் இன்று அன்பிலும், பண்பிலும், ஒழுக்கத்திலும், கல்வியிலும் சிறந்த மாணவர்களை உருவாக்க முடிக்றது. நான் பிஎஸ்ஜி கிருஷ்ணம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வேதியியல் ஆசிரியராக உள்ளேன். என்னுடைய வகுப்பில் மாணவர்கள் அனைவரும் நன்கு படிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். என் வகுப்பில் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் பொழுது பாடல்கள், மற்றும் பரதக் கலையில் உள்ள பாவனைகள் வைத்து விளக்கமாக கூறுவேன். அதனால் மாணவர்கள் அனைவரும் ஆர்வமுடன் பாடங்களைக் கவனிப்பார்கள். கல்வியும், கலையும் எனது இரு கண்கள். ஒவ்வொரு வருடமும் 100% தேர்ச்சிகான விருது பெற்றுள்ளேன். அதேபோல் இந்த வருடமும் பெற்றிருக்கிறேன். ஒரு ஆசிரியராக என் கடமையை மனநிறைவுடன் செய்து வருகிறேன்.

இன்றைய பரதக் கலையின் நிலை?

இன்றைய குழந்தைகள், இளைஞர்களிடம் பரதக் கலை பற்றிய போதுமான விழிப்புணர்வு இல்லை. தற்போது ஒவ்வொருவருக்கும் எவ்வாறு தொலைபேசி இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றதோ, அதேபோல் வீட்டிற்கு ஒரு பெண் பரதக் கலையை கற்றுக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் ஒரு பெண் படித்தால், அவள்சார்ந்த சமுதாயம் படித்ததுபோல் ஆகும் என்பார்கள். அதுபோலத்தான் இந்த பரதக் கலையும். கலையைக் கற்றுக் கொள்வோம். பாரம்பரியத்தைக் காப்போம். உடல் ஆரோக்கியத்தையும் பேணுவோம்.

– மேகலா நடராஜ்