அழகிய தந்திரக்காரி

கற்பனைக்கு எட்டாத உயரத்தில் இருக்கும் ஹாலிவுட் சினிமாக்களுக்கு நம் நாட்டில் எப்போதும் ஓரு தனி இரசிகர் பட்டாளம் இருக்கின்றது. ஒவ்வொரு வாரமும் ஒரு உலக சினிமா வந்து கொண்டு இருக்கும் தருவாயில், ரொம்ப நாட்களாக எல்லோரும் காத்துக்கொண்டு இருந்த திரைப்படம் தான் ‘தி மம்மி’.

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடித்து அலெஸ் குருட்ச்மேன் இயக்கத்தில் வெளி வந்திருக்கிறது இப்படம்.  ஜூன் 9 ஆம் தேதி வெளியாகும் என்று நினைத்து கொண்டிருந்த பொழுது, ஜூன் 8 இல் இந்தியா முழுக்க பிரீமியர் காட்சி திரையிடப்பட்டது.

மக்கள் கூட்டம் த¤ரையரங்கில் அலைமோதியது. தி மம்மி என்ற சொன்னவுடன் நமக்கு பல வருடங்களுக்கு முன்பு வந்த படம் நினைவுக்கு வரும். ஆனால் அதுவேறு, இதுவேறு.

தற்போதைய ‘தி மம்மி’ திரைப்படத்தின் கதைச்சுருக்கம், ‘‘எகிப்து நாட்டு அழகிய தந்திரக்காரி ராஜாங்கத்துக்கு ஆசைப்பட்டு தீயசக்தி தனக்குள் கொண்டு வரும்பொழுது அவரை அதலபாதாளத்தில் புதைத்து விடுகிறார்கள். பல வருஷங்கள் கழித்து மண்ணுக்குள் புதைந்து இருக்கும் எகிப்து நாட்டு தந்திரக்காரி சோபியா பெட்டில், உயிர்தெழுந்து மீண்டும் தீயசக்தியைக் கொண்டு வந்து நாட்டை தன் வசத்துக்குள் ஆக்கினாரா இல்லையா’’ என்பது தான்.

டாம் குரூஸ் பல அதிரடி படங்களில் நடித்து உலகம் முழுக்க தனக்கென இரசிகர்களை வைத்திருக்கும் நடிகர். இவர் தி மம்மி படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் என்றவுடன் எல்லோரும் படத்தை ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அதிரடி காட்சிகளில் மட்டும் நான் நடிகன் கிடையாது. கதைக்கு தகுந்தாற்போல் என்னால் நடிக்க முடியும் என்று நிரூபித்துக் காண்பித்திருகிறார் டாம் குரூஸ்.

அதிரடி, பயம் இதை இரண்டையும் முகத்தில் தத்ரூபமாக காண்பித்திருப்பது படம் பார்க்கும் இரசிகர்களுக்கு புதுமையாக உள்ளது என்று சொல்லலாம். சோபியா பெட்டில் இவர்தான் படத்தின் கதாநாயகன் என்று சொல்லும் அளவுக்கு இவரின் நடிப்பு இருக்கின்றது. தன் உடல் மொழி, முக பாவனைகளின் மூலம் படம் பார்க்கும் அனைவரின் மனதிலும் ஒரு பயத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இவரின் நடிப்பு படம் முழுக்க இருக்கின்றது. இவர் நடிப்புக்கு ஏற்றார் போல் பின்னணி இசையும் சேர்ந்து படம் பார்த்து முடிந்த பிறகும் கூட மனதில் பயத்தை ஒலித்துக்கொண்டு இருக்கிறது.

சோபியா பெட்டில் மற்றும் இசையமைப்பாளர் பிரைன் டைலர்க்கு நாம் மிக பெரிய கைதட்டலைப் பரிசாக கொடுக்க வேண்டும். ஒளிப்பதிவு பென் சேர்ச்சியேன் படத்துக்கு என்ன தேவை என்று புரிந்து கொண்டு ஒளிப்பதிவு செய்துள்ளது படத்தின் பக்கபலம். பகல், இரவு காட்சிகளில் இவர் கையாண்டு இருக்கும் ஒளி வெளிச்சம் புதுமையின் வரலாறு.

அண்ண பெல்லி வாலிஸ் படம் முழுக்க அடுத்து என்ன என்று தூண்டும் அளவுக்கு அவரின் கதாபாத்திரம் அமைந்துள்ளது. அவருக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளார்.

இயக்குநர் அலெஸ் குர்ட்ஸ்ட்மென், முந்தைய ‘தி மம்மி, தி மம்மி ரிட்டர்ன், தி மம்மி 3’ போன்ற படங்களில் இருக்கும் காட்சியைப் போல் இருக்கக்கூடாது என்று எண்ணி திரைக்கதை அமைத்திருப்பது இப்படத்தின் சுவாரசியத்தை அதிகப்படுத்தியுள்ளது. சில இடங்களில் மம்மி ஏலியன் போல் காட்சிகள் அமைத்திருப்பது புதுமையின் உச்சகட்டம். டாம் குரூஸ் அதிரடி ஆக்சென் குறைவாக இருந்தாலும் படத்தின் 107 நிமிஷம் நம்மை ஒரே இடத்தில் உட்கார வைத்து, பயத்தையும் வேகமான திரைக்கதையையும் நம் மனதில் பதியவைத்து இருப்பதற்கு படக்  குழுவுக்கும் இயக்குநருக்கும் சேர்ந்து ஒரு பெரிய கை தட்டலை நாம் கொடுக்கத்தான் வேண்டும். ‘தி மம்மி’ திரை அரங்கிற்கு சென்று பார்ப்பவர்களால் மட்டும் தான் படத்தின் அதிரடி பய உணர்வுகளை உணர முடியும்.

– பாண்டியராஜ்