வேளாண் துறைக்கு என்ன ஆச்சு?

இந்தியாவில் பல துறைகளில் இன்று நாம் முன்னேற்றம் கண்டிருக்கிறோம். குறிப்பாக, நூறாண்டுகளுக்கு முன்பு பல துறைகளில் பின்தங்கியிருந்த நாம் இன்று பலசாதனைகளை செய்திருக்கிறோம்.தொழில், மருத்துவம், போக்குவரத்து ஆகிய துறைகளை உதாரணமாகக் கூறலாம். நூறு வருடங்களுக்கு முன்பு பெரிய தொழிற்சாலை என்று எதுவும் இல்லை. ஆனால் இன்று இந்தியா முழுவதும் பல்வேறு வகையான தொழிற்சாலைகள் இயங்கி பல வகையான பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றன.

ஒருகாலத்தில் எல்லாவிதமான இயந்திரங்களும், அதன் உதிரிபாகங்களும் இங்கிலாந்து முதலிய வெளிநாடுகளில் இருந்து தான் வந்து  கொண்டிருந்தன. ஆனால் இன்று இந்தியாவின் பலமாநிலங்களில் பல நகரங்கள் இதுபோன்ற உதிரிபாகங்கள் உற்பத்தித் தொழில் துறையில் முன்னிலை வகிக்கின்றன. துணிகள் தொடங்கி, பம்ப், மோட்டார் என்று எந்த இயந்திரப்பொருட்கள் ஆனாலும் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமாதியாகி வரும் சூழல் இருந்தது. ஆனால் தற்போது இங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்க்கு வளர்ந்து விட்டோம்.

அதைப்போலவே மருத்துவத் துறை. நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆட்கொல்லி நோய்களான பிளேக், காலரா, மலேரியா போன்றவைத் தாக்கி ஆயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழந்ததைப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆனால் இன்று அந்த ஆட்கொல் நோய்களை எல்லாம் ஒழித்துவிட்டு நூறு கோடி பேருக்கு மேல் இருக்கும் நாட்டில் அடிப்படை சுகாதார வசதியை அனைவருக்கும் செய்திருக்கிறோம்.பெரிய மருத்துவமனைகள், மருத்துவர்கள், நவீன மருத்துவ வசதிகள், சிறந்த மருத்துவக் கல்லூரிகள், மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் ஆகியவற்றை உருவாக்கியிருக்கிறோம். வெளிநாடுகளில் இருந்தும் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்லும் அளவுக்கு உயர்ந்திருக்கிறோம்.

அதைப்போலவே போக்குவரத்துத் துறை. ஒரு காலத்தில் கால்நடையாகவும், மாட்டு வண்டி, குதிரை வண்டி ஆகியவற்றில் போய்க் கொண்டிருந்த மக்கள் இன்று உலகின் நவீன வாகனங்களில் போகும் அளவிற்க்கு போக்குவரத்து வசதி உள்ளது. உலகின் மிகப்பெரிய ரயில்வே என்றால் அது இந்திய ரயில்வே தான். அது போல எந்த கிராமம், நகரம் என்றாலும் சாலை வசதி செய்யப்பட்டு, கார், பஸ், லாரி, இருசக்கர வாகனங்கள் என்று எத்தனை வாகனங்கள் இன்று இந்திய சாலைகளில் பறக்கின்றனஎன எண்ணிப்பாருங்கள். பல முக்கிய இந்திய நகரங்கள் விமானப்போக்குவரத்து மூலம் இணைக்கப்பட்டுள்ளன. சந்திரனுக்கும், செவ்வாய்க்கும் விண்கலம் விடும் அளவுக்கு நமது விண்வெளி ஆராய்ச்சி வளர்ந்திருக்கிறது.

இது போல பல துறைகளிலும் நாம் முன்னேறியிருக்கிறோம்.

இந்த முன்னேற்றங்கள் எல்லாம் கல்வியாலும், அறிவியல் முன்னேற்ற நடவடிக்கைகளாலும், அரசின் நலத்திட்டங்களாலும் வந்தவை. இந்த முன்னனேற்றங்கள் எல்லாம் சுமார் நூறாண்டு காலகட்டத்தில் செய்த சாதனை என்றே சொல்லலாம். ஆனால் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நாம் ஈடுபட்டு வரும் வேளாண்துறையில் மட்டும் ஏன் நம்மால் சாதனைகளை செய்ய முடியவில்லை?

பெரிய பஞ்சங்கள் வருவதில்லை என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாமே தவிர மற்றபடி வேறு துறைகளில் காட்டும் முன்னேற்றத்தை இதில் காட்ட இயலவில்லை.

ஏன்?

இந்தியா முழுவுதும் வேளாண் துறைகள் மத்திய, மாநில அரசுகளின் கீழ் இயங்கி வருகின்றன.பல வேளாண் பல்கலைக்கழகங்கள்,  ஆராய்ச்சி நிலையங்கள், கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின்வளர்ச்சிக்காக, பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆண்டு தோறும் செலவிடப்பட்டு வருகிறது. என்றாலும், ஆண்டுதோறும் விவசாயத்தில் இருந்து வெளியேறும் விவசாயிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறதே ஏன்? விவசாயப்பணிக்கு ஆட்களே கிடைப்பதில்லையே ஏன்?

இது ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் விவசாயிகள் பிரச்னை என்பது வளர்ந்து கொண்டே போகிறது. இதில் முக்கிய பிரச்னையாகக் கருதப்படுவது நீர்ப்பாசனத்துக்குத் தேவையான நீர் கிடைக்காததும், கஷ்டப்பட்டு விளைவித்த பொருட்களுக்கு விலை கிடைக்காததும் ஆகும். அதனால் தனது நிலத்தை, உழைப்பை, வாழ்க்கையை இழந்த விவசாயிகள் பல இலட்சம் பேர் என்று சொல்லலாம்.விவசாயிகள் தற்கொலை என்பது ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே போகிறது. விவசாயம் தான் நமது நாட்டின் முதுகெலும்பு என்று கூறிக்கொள்ளும் நாட்டில் விவசாயிகள் படும்பாடு சொல்லி மாளாது.

நாடு முழுக்க, ஆண்டு முழுவதும் ஏதோ ஒரு வகையில் விவசாயிகள் போராட்டங்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. ஆனால் அதற்கு சரியான தீர்வுகள் தான் கிடைப்பதில்லை. அவ்வப்போது தாற்காலிகத் தீர்வுகள் தரப்படுகின்றன. தண்ணீர் இல்லாமல் வருடம் முழுவதும் காய்ந்து கிடக்கும் போது ஒரு மழை வந்து கொஞ்சம் மகிழ்விப்பதும் அரசாங்கங்கள் அவ்வப்போது தாற்காலிகமாக விவசாயக் கடன் தள்ளுபடி செய்வதும் தான் அவ்வப்போது அரங்கேறிவருகிறது.

இன்னொரு புறம், தரமான விவசாய விளைபொருட்கள் கிடைப்பதும் அரிதாகிக் கொண்டே வருகிறது. நாட்டில் அரசு வழங்கும் ரேஷன் அரிசி போன்ற பொருட்களை நம்பி வாழும் ஏழைமக்கள் இன்னும் பல லட்சக்கணக்கான பேர் உள்ளனர். இந்த விவசாயத்துறை சார்ந்த அதிகாரிகள், விவசாயக்கல்வி பயிலுவோர் எல்லோரும் நன்றாக இருக்கும் போது விவசாயி மட்டும் கடுமையாக பாதிக்கப்படுவது ஏன் என்று அரசு சிந்திக்க வேண்டும்.

இந்தியா போன்ற பெரிய இடப்பரப்பளவு கொண்ட நாட்டில் அந்தந்த உள்ளூர் சார்ந்த தொழில் நுட்பம், நீர் நிர்வாகம், விலைநிர்ணயம், கிடங்கு வசதி போன்றவை உருவாக ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.எடுத்துக்காட்டாக, தக்காளிக்கு அது விளைந்த காலத்தில் அதைப்பறிப்பதற்கான கூலி கூட கொடுக்க முடியாமல் விலை வீழ்ச்சி அடைந்து தோட்டத்திலேயே விடப்படும்; இன்னும் சில நேரம் பொதுமக்கள் வாங்க முடியாத அளவுக்கு நூறு ரூபாய்க்கும் விற்கும். இந்த நிலையற்ற தன்மை அதன் விற்பனையை பாதிக்கும். ஒரு ஒழுங்குமுறைக்கோ, வரைமுறைக்கோ உட்படாத காரணத்தால் இதை கட்டுப்படுத்த முடிவதில்லை. விவசாயி, பயனாளி அல்லது நுகர்வோர் என இருதரப்புக்குமே பயனற்ற முறையில் இன்றைய விவசாய நிலை இருப்பதால் லாபம் என்பது கனவாகவே இருந்து வருகிறது.

இதன் அடுத்த கட்டமாக விவசாயம், தொழிற்சாலை முறைக்கு உட்படுத்தப்பட்டு சிறு விவசாயிகள் எனும் இனமே அழிந்து போகும். இந்தியாவின் பெரும்பகுதி விவசாயிகள் என்பவர்கள் இந்த சிறு விவசாயிகளே என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஒருகாலத்தில் கோவை மாவட்டத்தில் சம்பா கோதுமை பயிரிடப்பட்டு வந்தது. அந்த சம்பா கோதுமையில் இருந்து தான் சம்பா ரவை தயாரிக்கப்பட்டு வந்தது. இன்று சம்பா பயிரிட்ட நிலம் அப்படியே இருக்கிறது. சம்பா ரவை உண்பவர்கள் அப்படியே இருக்கிறார்கள், சொல்லப் போனால் இதனை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டோர்  உண்பவர்கள் அதிகமாகி  இருக்கிறார்கள்.அதற்கான சந்தை பெரிதாக இருக்கிறது.ஆனால் இப்பகுதியில் சம்பா கோதுமை விவசாயம் அழிந்து விட்டது.

வட நாட்டில் இருந்து கோதுமை கொண்டுவரப்பட்டு தொழிற்சாலைகளில் தயாரிக்கப் படுகிறது. பல காரணங்களால் விலையும் அதிகமாகிக் கொண்டே போகிறது. இந்த விலையில் பாதிகொடுத்தால் கூட உள்ளூர் விவசாயிகள் மகிழ்ச்சியாக பயிரிடுவார்கள். ஆனால் அதை விடுத்து அவர்களை வேறு மூலைக்கு தள்ளும் போது மாலத்தியான், எண்டோசல்பான் போன்ற பூச்சி மருந்துகளைத் தேடவேண்டிய நிலை உருவாகிறது.

எனவே இது போன்ற கருத்துக்களை ஆய்வு செய்து உள்ளூர் வ¤வசாய¤களை ஊக்குவிப்பது தான் வேளாண்துறையின் உண்மையான பணியாக இருக்க வேண்டும்.

அதைப் போலவே ஆயிரக்கணக்கான ரக பயிர்களைக் கண்டறிந்து பெயர் பெற்றுள்ள வேளாண் பல்கலைக்கழகம் விவசாய உற்பத்தி பொருட்களை மதிப்பு கூட்டுவது எப்படி, நல்ல விலைக்கு விற்கும் வகையில் பாதுகாப்பது எப்படி, குறைந்த நீரில் பயிரிடுவது எப்படி, சொட்டு நீர்ப்பாசனம் போன்ற குறைந்த செலவு நுட்பங்கள் ஆகியனவற்றை விவசாயிகளுக்கு கறறுக் கொடுத்து அவர்கள் விவசாயம் செய்வதை ஊக்குவிக்க வேண்டும்.

இல்லையென்றால்  விவசாயிகளில்  நிலம் இருப்பவர்கள் அந்த நிலத்தை விற்று விட்டு வேறுபணிகளுக்கு போய் விடுவார்கள். நிலமற்றோர் நகரப்பகுதிகளில் அடிமை வேலைகளுக்கு போக நேரிடும்.இரண்டுமே நாட்டுக்கு நல்லதல்ல. புரியாத பலகாரணங்களைச் சொல்லி பலஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் இருந்து வந்த வேளாண்மையில் இருந்து வெளியே வந்து விட்டால் நமது அழிவு உறுதி.

உணவு இறக்குமதி செய்து வாழ்க்கை நடத்தும் அளவு நமது இந்தியப் பொருளாதாரம் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக நூற்று முப்பது கோடி பேருக்கு மேல் உள்ள இந்திய நாடு உணவுக்காக வெளியில் கையேந்துவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.

வேளாண்துறையில் ஏற்பட்டுள்ள இந்த சீர்கேட்டுக்காக அந்தத் துறை சார்ந்த அதிகாரிகள், கல்வியாளர்கள், விஞ்ஞானிகள் என எல்லோரும் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

அதே நேரம், அவர்கள் மனது வைத்தால் பல புதிய கண்டுபிடிப்புகள், நீர்ப்பாசன முறைகள், வேளாண் தொழில் நுட்பங்கள் என்று கண்டறிந்து விவசாயிகளை கைதூக்கி விட முடியும்.அதைச் செய்யாமல் ஊருக்கெல்லாம் உணவளிக்கும் உழவர்களை ஊர்க்கோடியில் வற்றிய வயிற்றுடனும், கோவணத்துடனும் தற்கொலைக்கு நிற்க வைப்பது குற்றத்திலும் குற்றம்.

– ஆசிரியர் குழு.