துன்பத்திற்கு துன்பம் கொடுங்கள்…

சந்தித்தேன்… சிந்தித்தேன்…

துன்பத்திற்குக் காரணம்…? என்றவுடன் “ஆசை” என்று தான் எல்லோரும் சொல்லுவோம். அவ்வாறுதான் நமக்குப் பள்ளிக்கூடங்களில் போதிக்கப் பட்டுள்ளது. அதாவது “மக்களுடைய துன்பத்திற்குக் காரணம் ஆசையே” என்று புத்தர் கூறியாதாகப் படித்திருக்கிறோம். ஆனால் துன்பத்திற்குக் காரணம் ஆசை என்பதைவிட அறியாமையே மூல காரணம் என்ற கருத்தையே திருவள்ளுவர் வலியுறுத்துகிறார்.

அதனால் தான் “அறிவு அற்றம் காக்கும் கருவி!” என்றார். அறிவு வளர வளர அறியாமை விலகும். அறியாமை விலகும்போது நெஞ்சில் தெளிவு பிறக்கும். தெளிவென்னும் ஞானஒளியில் வாழ்க்கையை வாசிக்கும் போது ஆனந்தப் பூஞ்சோலை உள்ளத்தில் பூத்துக் குலுங்கும்.

காற்றடிக்கும் திசையில் செல்லும் சறுகைப் போல மனம்போன வழியில் வாழ்க்கையை நகர்த்தாமல் இலட்சியத்தின் திசைநோக்கி முன்னேறும் வாழ்க்கையே போற்றுதலுக்குரியது. புகழும் மனநிறைவும் மிக்க வாழ்க்கையே வரலாற்றில் நிலைக்கத் தக்கது. அகத்தில் அமைதியும் தெளிவும் இருந்தால்தான் புறவாழ்வின் சவால்களை எதிர்கொண்டு வெல்லமுடியும்.

மனிதனின் வாழ்க்கை முறையை நெறிப்படுத்தும் உன்னத நூல்களில் முதன்மையானது திருக்குறள். பள்ளிகளில் திருக்குறள் பாடமாகவும், மனப்பாடமாகவும் இருந்தாலும், அதை வாழ்க்கைக்கு கொண்டு வருவதற்கு நாம் தவறிவிட்டோம் என்று கருதத் தோன்றுகிறது. அதுவும் படிக்கும் காலத்தில் கருத்தூண்றிப் பயின்று, அதன் கருத்துக்களை வாழ்வெல்லாம் கைப்பிடிக்கும் மனிதர்கள் அறிஞர்களாகி விடுகின்றார்கள். மேடைகளின் வெற்று முழக்கமாகத் திருக்குறளை வைத்துக் கொள்வதோடு, வாழ்க்கையின் நாதமாகக் கொள்ள வேண்டும் என்பதே  எனது விருப்பம். அதற்கான முயற்சியில் பலர் ஈடுபட்டு வருகின்றார்கள்.

“தினமொரு திருக்குறள்” என பள்ளியின் வழிபாட்டுக் கூட்டங்களிலும், அறிவிப்புப் பலகைகளிலும் சொல்லப்பட்டும், எழுதப்பட்டும் வருவதைப் பார்க்கலாம். ஆனால் ஒரு தொழிற்சாலையில் திருக்குறள் மன்றம் கடந்த இருபது ஆண்டுகளாகச் செயல் பட்டுவருவது பாராட்டுக்குரியது.

இயந்திரச் சத்தங்களுக்கு மத்தியில் இலக்கியச் சத்தம் கேட்கும் அதிசயம், கோவையில் உள்ள ரூட்ஸ் நிறுவனத்தில் நடைபெற்று வருகின்றது. மோட்டார் வாகனங்களுக்கான ஒலிப்பான்கள் செய்யும் நிறுவனத்தில் திருக்குறளின் கருத்து நயம் பணியாளர்களைப் பக்குவப் படுத்துகின்றது. ஆன்மாவை புனிதப் படுத்தும் புண்ணியத்தைப் பெறுகிறது.

ரூட்ஸ் குரூப் நிறுவனங்களின், எல்லாத் தொழிற்சாலைகளின் நுழைவாயிலில் தினந்தோறும் திருக்குறளும் அதற்குரிய பொருளும் எழுதி வைக்கப் படுகின்றது. தினந்தோறும் தொழிற் சாலைக்குள்ளாக நுழையும் போதே, நற்கருத்தொன்று உள்ளத்தில் நுழைந்து ஒளியேற்றி விடுகின்றது. நாள் முழுவதும் அக்கருத்தலைகள் காரியத்தை முடிப்பதற்கு துணை நிற்கின்றது எனப் பணியாளர்கள் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

ரூட்ஸ் திருக்குறள் மன்றம் கடந்த இருபது ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது. ரூட்ஸ் நிறுவனங்களின் சேர்மன் கே.ராமசாமி அவர்களின் ஊக்குவிப்பும், திருக்குறள் மீது அவருக்குள்ள ஈடுபாடும் ஆர்வமும்தான் இம்மன்றம் தோன்றுவதற்கும் வளர்வதற்கும் காரணம்.

மேலும் மாதந்தோறும் தமிழறிஞர்களை அழைத்துச் சிறப்பு சொற்பொழிவுகள் நிகழ்த்தப் படுகின்றன. திருக்குறள் கூறும் வாழ்க்கை நெறிகளைக் கடைப்பிடிக்கும் போது, துன்பம் விலகுகின்றது. வாழ்க்கையை எவ்வாறு செலுத்துவது என்ற தெளிவும் உறுதியும் பிறக்கின்றது. திருக்குறள் பல அறிஞர்களையும் சிந்தனையாளர்களையும் உரு வாக்கி இருக்கின்றது என்றால் அது மிகையாகாது.

வளர்ந்த பாரதத்தை உருவாக்க கனவுகண்டு அயராது உழைத்த இளைஞர்களின் எழுச்சி நாயகன் பாரதரத்னா, டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்கள் திருக்குறள் மீது தணியாத தாகம் கொண்டவர். தனது முயற்சிகளிலும், செயல்பாட்டிலும் குறள் கூறும் கருத்துக்களால் இயக்கப்பட்டவர். மேலும் அவருடைய பேச்சில் எப்பொழுதும் திருக்குறளின் கருத்துக்கள் இடம்பெறும். அவருடைய வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட குறள்களாக சிலவற்றைக் கூறுவர். அவற்றுள் முக்கியமானவை.

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு

இடும்பை படாஅ தவர். (623)

எண்ணிய எண்ணியாங்கு எய்துப, எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின் (666)

 

ஆகும். துன்பத்தைக் கண்டு நாம் துவண்டு விடக்கூடாது. துன்பத்திற்கே துன்பம் கொடுக்கும் துணிவோடு எழ வேண்டும். பிரச்சனைகளைக் கண்டு பின்வாங்காமல், தன்னம்பிக்கையுடன் எதிர் கொள்ள வேண்டும். மேலும் நினைத்ததை நினைத்தவாறு அடைவதற்குத் தகுந்த மனத்திட்பம் வேண்டும். உலகமே நம்மைக் கைவிட்டாலும், நாம் நம்மைக் கைவிட்டு விடக்கூடாது. முடங்கிக் கிடப்பவன் முடிந்து போகிறான். முந்தியெழுபவன் முன்னேற்றம் காண்கிறான்.

ரூட்ஸ் திருக்குறள் மன்றத்தின் மாதாந்திரக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் கவிஞரும் பட்டிமன்றப் பேச்சாளருமாகிய தமிழறிஞர் திருமிகு. வளர்கவி. இராதாக் கிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புறையாற்றினார். யாரையும் அவருடைய உருவத்தைக் கண்டு எள்ளி நகையாடக்கூடாது. அதாவது

உருவுகண்டு எள்ளாமை வேண்டும்; உருள்பெருந்தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து  (667)

என்று திருக்குறளை சுவைபட விளக்கினார். மனிதமனம் பக்குவப்படும் போது, அங்கு உயர்வு தாழ்வு என்ற பேதமில்லை. “தான்” என்ர அகந்தை இல்லை. அறிவாலும் பண்பு நலத்தாலும் உயரும்போது தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவர்களே உயர்ந்த மனிதர்களாகப் போற்றப் படுகிறார்கள். அவர்களையே வரலாறுகள் வாழ்த்துகிறது.

இவ்விழாவில், பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள ரூட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றுவோரின் குழந்தைகளுக்கு பாராட்டும் பரிசும் வழங்கப்பட்டது. ரூட்ஸ் மல்டிகிளீன் தொழிற்சாலையின் பொதுமேலாளர் (செயலாக்கம்) திரு. ஆர். ரவிக்குமார் அவர்கள் தலைமையேற்று “தன்னம்பிக்கை, விடாமுயற்சி, திறன் வளர்த்தல், இலட்சிய வேட்கை” ஆகியவற்றை மாணவர்கள் வளர்த்துக் கொண்டு உயர வேண்டும்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய் (69)

என்ற குறளுக்கு இலக்கணமாக மாணவர்கள் விளங்க வேண்டும்” என வேண்டினார்.

“வேலை – வீடு, வீடு – வேலை” என வாழ்நாளை நகர்த்தும் இயந்திரங்களாக மனிதர்கள் இல்லாமல், இலக்கியங்களையும் வாசித்து இன்பமாக வாழும் இதயம் படைத்தவர்களை உருவாக்க இதுபோன்ற இலக்கிய மன்றங்கள் உதவும் என்பதில் எந்தவித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை.

ரூட்ஸ் நிறுவனத்தை முன்மாதிரியாகக் கொண்டு மற்ற நிறுவனங்களும் இது போன்ற அமைப்புகளை ஏற்படுத்தி, பாட்டாளிகளைப் படைப்பாளிகளாகவும், பண் பட்டவர்களாகவும் மாற்றுவதற்கு முயற்சிகலாமே என்பதே எனது வேண்டுதல்.

மீண்டும் அடுத்த வாரம் சிந்திப்போம்.

சிந்தனைக் கவிஞர். டாக்டர்.கவிதாசன்,

இயக்குனர் மற்றும் தலைவர், மனிதவள மேம்பாட்டுத்துறை,

ரூட்ஸ் நிறுவனங்கள்.