அவினாஷ் எனும் இரத்த தானப் பிரியர்

ஒவ்வொரு வருடமும் ஜூன் 14 ஆம் தேதி உலக இரத்த தானம் செய்வோர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் வெறுமனே இரத்த தான விழிப்புணர்வு செய்வது, வாட்ஸ் அப் இல் வாழ்த்து சொல்வது என்று இல்லாமல் ஒவ்வொருவரும் பிறருக்கு தேவைப்படும்போது தங்களது இரத்தத்தைத் தானமாக வழங்க வேண்டும் என உறுதியெடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த தினம் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம் நிறைவேறும்.

அத்துடன், தங்களால் இரத்ததானம் செய்ய முடியா விட்டாலும் தங்களைச் சார்ந்தோர் மற்றும் நண்பர்கள் செய்யும் இந்த உயரிய சேவையை மனமுவந்து பாராட்டி ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான் பல உயிர்கள் மீண்டும் மீண்டும் காப்பாற்றப்படும். இன்றைய அவசர யுகத்தில் ஆங்காங்கே விபத்துகள் ஏற்படுவதும், அறுசை சிகிச்சைக்காக இரத்தம் தேவைப் படுவதும் இயல்பான காரியமாக போய்விட்டது.

இந்நிலையில் நாமும் நம்மைச் சார்ந்தவர்களும் இரத்த தானம் செய்வதன் அவசியம், அவசரம் குறித்து அறிந்து, புரிந்து வைத்திருக்க வேண்டும்.

நவீன உலகத்தில் தொழில்நுட்ப ரீதியாக பல மாற்றங்கள் நிலவிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் ‘வாட்ஸ் அப்’. இன்று அனைத்து தரப்பினரிடமும் ஸ்மார்ட் போன் உள்ளது. அதில் செய்திகளை உடனுடக்குடன் பரிமாறிக்கொள்ள தேவைப் படுவது இந்த வாட்ஸ் அப் செயலி. இதன்மூலம் தினசரி ‘ஹாய்’ ‘பாய்’ என்று சொல்லிக்கொண்டு வெறுமனே நட்பு பாராட்டுகிறேன் பேர்வழி என்று ‘பார்வர்டு மெசேஜ்’களைப் பரிமாறிக் கொண்டு, தோழர்களுடன் வீண் அரட்டைகளில் பங்கெடுத்துக் கொண்டு தங்கள் நேரத்தை வீணடிப்பவர்கள் பலர். இதில் இளைஞர்கள் என்றில்லை, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், முதியோர்கள் என அனைவரும் அடங்குவர்.

ஆனால் எந்த ஒரு செயலிலும் நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு. அது நாம் பார்க்கும் பார்வையிலும் ஒரு விஷயத்தை பயன்படுத்துவதிலும் உள்ளது. இந்த செயலியை பொழுது போக்காக பயன்படுத்துவோர் மத்தியில் இதன்மூலம் பல நன்மைகளையும் செய்து வருகின்றனர் இன்றைய தலைமுறையினரைச் சேர்ந்த சிலர்.

அவர்களில் ஒருவரைக் குறித்தும், அவர் ஆற்றிய, செய்துவரும் சேவையைக் குறித்தும் இங்கு காண்போம். செயலியை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு,‘24*7 Helper and Donor’

வாட்ஸ் அப் செயலியில் இந்த பெயரில் ஒரு குழுவை உருவாக்கியவர் மரிய அவினாஷ். அவர் வாட்ஸ் அப் மூலம் பலருக்கும் தகவல்களைப் பரிமாறி இரத்த தானசேவையை நடத்தி வருகிறார். அவர் தன் மொபைலில் ஒருவருடைய தொலைபேசி எண்ணை பதிவு செய்யும் பொழுதே, அவருடைய பெயருடன், இரத்த வகையையும் சேர்த்து பதிவு செய்கிறார். இதனால் இரத்தம் தேவைப்படும் வேளையில்¢ சுலபமாக அவரை அணுகி உதவி பெற முடிகிறது என்கிறார் இந்த இரத்த தானப் பிரியர்.

அவர் மேலும் கூறுகையில், ‘ஆரம்பத்தில் நான் இந்த ‘24*7 Helper and Donor’ என்ற குரூபை உருவாக்கியபோது அந்த குரூப்பில் உள்ளவர்கள் சரியான நேரத்தில் பதில் அளிக்க மாட்டார்கள்.

இதனால் மன வேதனைக்கு ஆளானேன். தன் குடும்பத்தில் ஒருவருக்கு விபத்து நேர்ந்தால், அப்போது இரத்தம் தேவைப்பட்டால் என்ன செய்வோம்? பிளட் பேங்க் அல்லது அந்த பிளட் குரூப் உள்ள ஒருவரை அணுகி அவரிடம் உதவி கேட்போம் அல்லவா?அப்போது நமது அவசரம், ஆற்றாமை, வேதனைதானே ஒவ்வொரு வருக்கும் இருக்கும்? ஏன் தனக்கென்று வந்தால் மட்டும்தான் இதை செய்ய வேண்டுமா? மற்றவர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டால் செய்யக்கூடாதா? என்று குழுவினருடன் பேசி அவர்களுக்கு புரிய வைத்தேன். அதன்பிறகு அனைவரும் இரத்தம் கொடுக்க முன் வந்தனர்.

தற்போது  இந்த சேவை படிப்படியாக வளர்ந்து, இன்று 593 யூனிட் இரத்த தானம் செய்துள்ளோம். இப்பொழுது எங்கள் குழுவில் மொத்தம் 124 பேர் இருக்கிறோம். எந்த குரூப் இரத்தமாக இருந்தாலும் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். உடனே நானும் எனது குழு நண்பர்களும் உடனடியாக அவர்களுக்கு உதவுவோம்.

எனது இந்த சேவைக்காக யாரிடமிருந்தும் எந்த ஒரு பரிசோ, விருதோ கிடைத்தது இல்லை. ஆனால் நான் செய்து வரும் இந்த இரத்த தான பணியால் முகம் தெரியாத நபர்கூட என்னைத் தேடி வந்து பேசும்பொழுது ஏற்படுகிற ஆனந்தத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாதது.

பணம், சொத்து என எதிலும் கிடைக்காத ஆனந்தம் அது. அதை உணர்ந்தால் புரியும். எனக்கு அதனை பலமுறை முகம்தெரியாத பலர் புரியவைத்துள்ளனர். இன்னும் சொல்லப் போனால், அவர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளை போல் என்னுடன் பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. எவ்வளவுதான் சம்பாதித்தாலும் இந்த மனதிருப்தியை பெற முடியாது.

என்னுடைய சேவை தேவைப்படுவோர் இந்த குழுவை அணுகலாம்.

இன்றைய அவசர உலகில் இன்னும் ஏராளமானோருக்கு இரத்தம் தேவைப்படுகிறது. தினசரி இரத்தத்தின் தேவை இருந்து கொண்டே இருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஒவ்வொருவரும் தங்களது இரத்தத்தைத் தானமாக வழங்க தயாராக இருக்க வேண்டும். இதுபோல் ஒவ்வொருவரும் இருந்துவிட்டால் ஏதோ ஒரு உயிரை நாம் காப்பாற்றலாம். அது, உங்கள் வீட்டு உயிராகக்கூட இருக்கலாம்’என்கிறார் இந்த சமூக சேவகர் அவினாஷ்.

தன் வேலைகளுக்கு மத்தியில் இப்படி ஒரு பொது சேவையை செய்து வரும் இவரைப் பாராட்டித்தான் ஆக வேண்டும். உங்கள் சேவை மக்களுக்குத் தேவை. எனவே, உங்கள் சேவையைத் தொடர்ந்து செய்யு ங்கள்.

இறை வன் உங்களை ஆசிர் வதிப்பான். ஏழைகள் உங்களை மனதில் வை த்து பூஜிப்பர். அதற்கு மேல் எந்த விருதும் தேவையில்லை. வாழ்க அவினாஷ், வளர்க இரத்த தான சேவை.

– மேகலா நடராஜ், கா.அருள்.